மூன்று வகை கர்ம வினைகளும் பரிகாரங்களும்!

மூன்று வகை கர்ம வினைகளும் பரிகாரங்களும்!
Published on

– எம்.ஏ.நிவேதா

ருவர், தான் செய்யும் காரியங்கள் எல்லாம் வெற்றியடைந்தால், மிகவும் சந்தோஷம் அடைவார். அதேநேரம், ஏதேனும் தடைகள் ஏற்பட்டாலோ அல்லது நடக்காமல் போனாலோ, 'நமக்கு நேரம் சரியில்லை' என்று நினைத்து, ஒரு ஜோதிடரைப் பார்ப்பார். அப்போது அந்த ஜோதிடர் அவரது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, 'உங்களுக்குத் தற்போது ஜாதக ரீதியாக நடக்கும் தசா புத்திகள் சரியில்லை. அதனால்தான் இப்படி நடக்கிறது' என்று சொல்லி அதற்குத் தகுந்தாற்போல் பரிகாரங்கள் செய்யச் சொல்வார். ஜோதிடர் சொன்னபடி அவரும் பரிகாரம் செய்வார். அதற்குப் பிறகும் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், அவர் மனம் நொந்து வேதனைப்படுவார்.

ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து, அதில் உள்ள கோளாறுகளுக்கு உரிய பரிகாரங்களைச் செய்த பிறகும் அதற்குப் பலன் கிடைக்காமல் போவது எதனால் என்பது குறித்து சற்றுக் காண்போம்.

இதில் யாருடைய தவறும் இல்லை. பரிகாரம் சொன்ன ஜோதிடரும் தவறு செய்யவில்லை; பரிகாரம் செய்தவரும் தவறு செய்யவில்லை. பிறகு காரியத் தடைக்கு என்னதான் காரணம்?

பொதுவாகவே, ஒருவரது செயல்களுக்கான வெற்றி தோல்விக்கு அவருக்கு விதிக்கப்பட்ட கர்மாதான் காரணம். தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் செய்வது என்பது, தெய்வம் சார்ந்த வழிபாட்டு வகையைச் சேர்ந்ததாகும். தன்னைச் சார்ந்த பரிகாரங்களுக்கு, அதைச் செய்வோர் அனைவருக்கும் அதற்கான பலன் அல்லது தீர்வு கிடைக்கிறதா? சில பேர், 'நான் சரியாகத்தான் பரிகாரம் செய்தேன்; நல்ல பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன' என்று கூறுவார்கள். சில பேர், 'நானும் நிறைய பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், என்னுடைய கஷ்டம் குறையவேயில்லை' என்பார்கள். இது எதனால்? இப்படி நடப்பதற்குக் கர்ம வினைகளே காரணம்.

இந்த கர்ம வினைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை: 'த்ருத கர்மா' – தெரிந்தே செய்த பாவம், 'த்ருத அத்ருத கர்மா' – தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' – தெரியாமல் செய்த தவறு.

த்ருத கர்மா (தெரிந்தே செய்த பாவம்): இது மிகக் கடுமையான, கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய் தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு மன்னிப்பே கிடையாது. இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும் அதற்குப் பலன் இருக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ அல்லது பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. அதை ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு கஷ்டங்கள் தொடர்கதையாக வந்துகொண்டுதான் இருக்கும். அதை அவர்கள் அனுபவித்துதான் தீர வேண்டும். இவர்கள் தமது சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

த்ருத அத்ருத கர்மா (தெரிந்தே செய்த தவறு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது): சில சமயம் நாம் செய்யும் காரியம் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்திருப்போம். நல்லவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் விட்டிருப்போம். தீயவர்களுக்கு அவர்களுடைய குணம் அறியாமல் உதவி செய்திருப்போம். ஆனால், அந்தக் காரியம் தவறாக முடிந்திருக்கும். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அத்ருத கர்மா (தெரியாமல் செய்த தவறு): மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்களை தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.

ஆகவே, மேற்கூறிய கர்ம வினைகள், ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்து நலம் பெற வேண்டியது அவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com