நவராத்திரி செய்திகள்

நவராத்திரி செய்திகள்

நவ(சிவ) தாண்டவம்!

வராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்த தாண்டவங்களிலிருந்து நவ துர்கைகள் தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.

ஆனந்த தாண்டவம்: வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷி மண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீ சைலபுத்ரி.

ஸந்தியா தாண்டவம்: பகலும், இரவும் சந்திக்கும் வேளையில், இடக்கால் விரலால் சிவனார் இடும் கோலம் ஸப்த ஒலிக்கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மண்டா.

திரிபுர தாண்டவம்: ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப்பட்டது அஷ்ட வகைக்கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.

ஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியை தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவக் கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்த்ரகாந்தா தேவி.

புஜங்க தாண்டவம்: பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தாள் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்றும் பெயருண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்த மாதா.

முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய தாண்டவத்தின்போது அவரது நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவள் காத்யாயினி.

பூத தாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய தாண்டவம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்ரி.

சுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க, அசுரர்களை அழித்து ஆடிய தாண்டவம். இதில் தோன்றியவள் மகாகௌரி.

சிருங்கார தாண்டவம்: நவ ரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம், இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்ரி.

– மகாலட்சுமி சுப்பிரமணியன்

தகவல்கள் பத்து; அத்தனையும் முத்து!

* திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூரில் சரஸ்வதி தேவிக்கு கோயில் உள்ளது. இவ்வூர் சுகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

* கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கருங்கல் நாதஸ்வரம் உள்ளது. நவராத்திரி விஜயதசமி அன்று கோயில் வித்வான் அந்த நாதஸ்வரத்தை வாசிப்பார்.

* கேரள மாநிலம், பாலக்காடு கொடுந்திரப்பள்ளி ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சரஸ்வதி பூஜை அன்று நவமி விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் நடத்தப்படும். நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றி, யானைகள் ஊர்வலம் நடைபெறும்.

* சரஸ்வதிதான் முதல் பெண் தெய்வம் என்று கூறுகின்றன வேதங்கள். இதனால் சரஸ்வதிக்கு 'ஆதிகாரணி' என்று பெயர் வந்தது.

* புராண காலத்திலேயே நவராத்திரி பூஜை செய்தவர்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீராமன், சாவித்திரி, பஞ்சபாண்டவர்களில் தர்மர் ஆகியோர்.

* சரஸ்வதி தேவி சமண மதத்தில் மகா சரஸ்வதி, ஆரிய சரஸ்வதி, வஜ்ர வீணா சரஸ்வதி எனப் போற்றப்படுகிறாள்.

* கேரள மாநிலம், கோட்டையம் அருகே உள்ள பனிக்காடு என்ற இடத்தில் மூகாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. நவராத்திரி விழாவின்போது இங்கு சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இங்கு குழந்தைகளுக்கு வித்யாப்யாசம் நடைபெறுவது விசேஷம்.

* நவராத்திரி விரத பூஜை முறைகளும், அப்போது பாராயணம் செய்ய வேண்டிய தேவி மகாத்மியமும் குறித்து சுக முனிவர் பரீட்சித்து மகாராஜாவுக்குக் கூறினார். இதுதான் முதன்முறையாக கூறப்பட்டதாகும். பிறகு வியாச பகவான் ஜனமே ஜெயனுக்குக் கூறினார்.

* கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் அருகே ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு நவராத்திரியின்போது கொலு வைத்து, ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

* திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் சரஸ்வதி தேவிக்கு தனி கோயில் உள்ளது. இங்கு விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்யாப்யாசம் செய்தும், பேனாக்கள் பென்சில்கள் போன்ற எழுது பொருட்களை அன்னையின் திருவடியில் வைத்தும் பூஜித்துக் கொடுக்கிறார்கள்.

– எஸ்.ராஜம்

நவராத்திரியில் வாராஹி வழிபாடு!

ப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு அன்பர்களுக்கு அருள ஓடோடி வருபவள் வாராஹி தேவி. இந்த தேவியின் பன்னிரண்டு திருநாமங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் வளர்பிறை பஞ்சமி காலங்களில் உச்சாடனம் செய்யச் செய்ய அது நம்மை அரண் போல் காக்கும் என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள்.

வாராஹி தேவியின் பன்னிரு திருநாமங்கள்: 1.பஞ்சமீ, 2.தண்டநாதேஸ்வரி,
3.ஸங்கேதா, 4.ஸமயேஸ்வரி, 5.ஸமயஸங்கேதா, 6.வாராஹி, 7.போத்ரிணி, 8.சிவா,
9.வார்த்தாளி, 10.மஹாசேனா, 11.ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12.அரிக்னி ஆகியவையாகும். ஸ்ரீ நவாவரண பூஜையின்போது வாராஹி தேவியின் மேற்கண்ட பன்னிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையைச் செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சமர்ப்பிப்பது கூடுதல் பலன்களைப் பெற்றுத் தரும். பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீய சக்திகளை நெருங்க விடாமல் விரட்டியடிப்பவள் என, 'வாராஹி மாலா' நூல் கூறுகிறது!

ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியிலும் வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள். காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். ஒரு பத்து நிமிடமேனும் அவளின் திருநாமங்களைச் சொல்லி, உங்கள் கோரிக்கைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லி மன்றாடுங்கள். இதுவரை இருந்த தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, எதிர்ப்புகளை தலைதெறிக்க ஓடச் செய்வாள் வாராஹி தேவி.

– எம்.அசோக்ராஜா

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com