பகைவரையும் நண்பராக்கும் தென் அஹோபிலம்!

பகைவரையும் நண்பராக்கும் தென் அஹோபிலம்!
Published on

– சாம்பவி சங்கர்

க்ஷ்மி நரசிம்மர் என்றாலே மகாலக்ஷ்மியுடன் இணைந்த நரசிம்மரைத்தான் குறிக்கும். பெரும்பாலான நரசிம்மர் கோயில்களில் நரசிம்மரை விட, அம்பாளின் திருவுருவம் சிறியதாகத்தான் காட்சி தரும். ஆனால், ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், நரசிம்மரும் லக்ஷ்மி தேவியும் சம உயரத்தில் காட்சி தருகின்றனர் விழுப்புரம் மாவட்டம், 'பூவரசன்குப்பம்'என்னும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் அமைந்த லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில்.

தன் மேல் நம்பிக்கைக் கொண்டு, 'நாராயணா'என்ற நாமத்தை மட்டுமே உச்சரித்து, அதுவே உயிர்மூச்சாய் வாழ்ந்த பக்தன் பிரகலாதனுக்காக, நரனும் சிம்மனும் கலந்த 'நரசிம்ம'அவதாரம் எடுத்துத் தூணில் காட்சி தந்தார் நரசிம்மர். இப்படி, அசுரன் இரணியனை வதம் செய்த இடம்தான் ஆந்திர மாநிலத்திலுள்ள அஹோபிலம் திருத்தலம்.

இரணியனை வதம் செய்த பின்பும் உக்கிரம் குறையாமல் காடு, மேடெல்லாம் சுற்றித் திரிகிறார் நரசிம்மர். கோடானு கோடி தேவர்களும் செய்வதறியாது திகைத்து மனம் உருகி மகாலக்ஷ்மியை வேண்டினர். லக்ஷ்மி தேவியும் முனிவர்களுக்காக நரசிம்மரை உளமார வேண்டினார். மகாலக்ஷ்மியின் வேண்டுதலை ஏற்று உக்கிரம் குறைந்து லக்ஷ்மி நரசிம்மராக முனிவர்களுக்குக் காட்சி தந்த திருத்தலம்தான் பூவரசன்குப்பம்.

நரசிம்மர் தமிழகத்தில் சிங்கிரிகுடி, அந்திலி, பரிக்கல், சோளிங்கர், நாமக்கல், சிங்கப்பெருமாள் கோயில், சித்தலவாடி, பூவரசன்குப்பம் ஆகிய எட்டு இடங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவற்றில் எங்கும் காணக்கிடைக்காத அரும்பெரும் காட்சியாக, நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி ஒரு கண்ணால் பெருமாளையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலிப்பது பூவரசன்குப்பம் திருத்தலத்தில்தான். அமிர்தத்துக்கு இணையான பலன்களை பக்தர்களுக்கு வழங்குவதால் இந்தத் தலத்தின் தாயார் அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகிறார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்மவர்ம பல்லவரால் தென்பெண்ணை ஆற்றங்கரையில் கட்டப்பட்டது பூவரசன்குப்பம் லக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில். நரசிம்மத் திருத்தலங்களில் சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று திருக்கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது விந்தையிலும் விந்தை!

வ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திரம் அன்று காலை 9 மணி அளவில் இக்கோயிலில் மாபெரும் சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது. அந்த ஹோமத்தை அஹோபிலம் மடத்திலிருந்து தீட்ஷிதர்கள் வந்து மிகச் சிறப்பான முறையில் நடத்துகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் தங்களால் இயன்ற ஹோமப் பொருட்களை வாங்கி வந்து, தங்கள் கரங்களாலேயே அக்னி குண்டத்தில் சேர்க்கலாம். இதனால், தீராத கடன் தொல்லைகள் தீரும்; புத்திர பாக்கியம் ஏற்படும்; பதவி உயர்வு கிடைக்கும். குறிப்பாக, பகைவர்கள் நண்பர்களாக மாறுவர். இந்த சுதர்சன ஹோமம் முடிந்ததும் கொடுக்கப்படும் ரக்ஷை, பில்லி சூனியம் போன்றவற்றை நீக்கவல்ல மந்திர சக்தி வாய்ந்தது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு மனமுருக வேண்டினால் வேண்டுவது அனைத்தும் கொடுப்பார் லக்ஷ்மிநரசிம்மர் என்பது ஐதீகம். இத்தகைய பெருமைமிக்க பூவரசன்குப்பம் லக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில், 'தென் அஹோபிலம்'என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்: விழுப்புரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது கோயில். நிறைய பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com