பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனப் பலன் தரும் குருஷ்ணேஷ்வர்!

பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனப் பலன் தரும் குருஷ்ணேஷ்வர்!

– லதானந்த்

ஜோதிர்லிங்கம் என்பதற்கு ஒளிமயமான லிங்கம் என்று பொருள். திருவாதிரை நட்சத்திர நாளில், சிவபெருமான் தம்மை ஒளி வடிவில் வெளிப்படுத்தியதாக ஐதீகம். சாதாரண மக்களின் கண்களுக்கு இதர லிங்கங்களுக்கும் ஜோதிர்லிங்கங்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. ஆனால், பூமியிலிருந்து வெளியாகும் ஒளி வடிவில் ஞானிகள் சிவனை தரிசிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்தியாவில் மொத்தம் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவை: சோம்நாத் கோயில்-குஜராத், மல்லிகார்ஜுனர் கோயில்-ஆந்திரப் பிரதேசம், மகாகாலேஸ்வரர் கோயில்-மத்தியப் பிரதேசம், ஓங்காரேஸ்வரர் கோயில்-மத்தியப் பிரதேசம், கேதார்நாத் கோயில்-உத்ரகாண்ட், பீமாசங்கர் கோயில்-மகாராஷ்டிரா, காசி விஸ்வநாதர் கோயில்-உத்திரப் பிரதேசம், திரியம்பகேஸ்வரர் கோயில்- மகாராஷ்டிரா, வைத்தியநாதர் கோயில்-ஜார்க்கண்ட், நாகேஸ்வரர் கோயில்-குஜராத், இராமேஸ்வரர் கோயில்-தமிழ்நாடு, குருஷ்ணேஷ்வர் கோயில்-மகாராஷ்டிரா.

இந்தப் பன்னிரு ஜோதிர்லிங்க ஆலயங்களுள் ஒன்றான குருஷ்ணேஷ்வர் கோயில், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் நகருக்கு அருகில் உள்ள வெருல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. குருஷ்ணேஷ்வர் என்ற வார்த்தைக்கு, 'இரக்க குணம் பொருந்தியவர்' என்று அர்த்தம். யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னம் எனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லோரா குகைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். ஔரங்காபாத் நகரத்திலிருந்து வடமேற்கு திசையில், 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த ஒரு ஜோதிர்லிங்கத்தை தரிசித்தாலே ஏனைய ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

சிவ புராணத்தில் இந்தத் தலம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்வதி தேவி குங்குமம் கொண்டு இத்தல லிங்க பெருமானை பூஜித்ததாகவும் அதனால் அந்த லிங்கம் செவ்வண்ணமாகிவிட்டது எனவும் தல புராணம் சொல்கிறது. அதனால் இங்கு உறையும் ஈசனுக்கு, 'குங்குமேஸ்வரர்' என்ற பெயர் உண்டாயிற்று என்றும் அதுவே மருவி, குருஷ்ணேஷ்வரானது என்றும் சொல்லப்படுகிறது. ஸ்காந்த புராணத்தில், பார்வதி தேவியுடன் ஊடல் கொண்டு இங்கே சிவபெருமான் எழுந்தருளியதாகவும், பார்வதி தேவியே ஆதிவாசிப் பெண் உருவெடுத்து இங்கே வந்து ஈசனை பூஜித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயம் பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளில் முகலாய மன்னர்களால் சேதப்படுத்தப்பட்டது. தற்போதிருக்கும் கட்டுமானம் பதினெட்டாம் நூற்றாண்டில், இந்தோர் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் என்பவரால் முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது. புனிதம் மிக்கதாகக் கருதப்படும் இந்த ஆலயத்துக்குள் நுழையும் ஆண்கள் மேலாடையை அகற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இந்தக் கோயில் மராட்டியர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. சிவந்த வண்ணம் கொண்ட பாறைக் கற்களால் ஆலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜோதிர்லிங்கங்களிலேயே மிகவும் சிறிய பாணம் கொண்ட லிங்கம் இந்த ஆலயத்தில் இருப்பதுதான்.

கோயிலுக்குப் போகும் வழியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செம்பாறைக் கற்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருக்கும் அரங்கத்தில் உள்ள 24 தூண்களிலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களைச் சித்தரிக்கின்றன. இவை தவிர, இந்தக் கோயிலில் பல்வேறு இந்துக் கடவுளர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. கோபுரத்தின் உச்சி வரை ஐந்து அடுக்குகள் காணப்படுகின்றன. கருவறை சதுர வடிவில், சுமார் 289 சதுர அடிப் பரப்பளவில் இருக்கிறது. கிழக்குத் திசை நோக்கி லிங்க ரூபமாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பு நந்தி பகவான் காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தில் எந்தவித யாகங்களும் நடத்தப்படுவதில்லை; பலிகளும் கொடுக்கப்படுவதில்லை. மூலவர் பெருமானுக்கு வில்வம் மற்றும் குங்குமத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆலயத்தின் அருகே இருக்கும் சிவாலய சரோவர் என்னும் ஏரியின் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கே பிரார்த்தனை செய்வோருக்கு மறுபிறவியே கிடையாது என்பதும் ஐதீகமாக உள்ளது. மஹா சிவராத்திரி அன்று மிகப் பெரிய பக்தர் கூட்டம் இக்கோயிலில் கூடுகிறது. இந்த ஆலயத்துக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் கிடையாது.

அமைவிடம்: ஔரங்காபாத் விமான நிலையத்திலிருந்து 36.5 கி.மீ., ரயில் நிலையத்திலிருந்து 38.2 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். ஔரங்காபாத்திலிருந்து மாநில அரசுப் பேருந்து வசதி உண்டு. தனியார் டாக்ஸிகளும் ஓடுகின்றன.

தரிசன நேரம்: காலை 5.30 முதல் இரவு 11 மணி வரை. ஷ்ராவன் மாதத்தில் (ஆகஸ்ட் – செப்டம்பர்) அதிகாலை 3 மணிக்கே ஆலயம் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com