பழங்குடி மக்களின் தசரா திருவிழா!

பழங்குடி மக்களின் தசரா திருவிழா!

– வே.இராமலக்ஷ்மி

தென்னகத்தில் நவராத்திரி எனக் கொண்டாடப்படும் பண்டிகை, நாட்டின் பல பகுதிகளிலும் தசரா எனும் பெயரில் பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது பலரும் அறிந்த விஷயம். ஆனால், ஒரு தலத்தில் மட்டும் தசரா திருவிழா 75 நாட்கள் கொண்டாடப்படுகிறது என்றால் வியப்பாக உள்ளது அல்லவா? ஆம்… சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் திருத்தலத்தில்தான் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. இங்கு வாழும் அனைத்து பழங்குடி மக்களுக்கும் குல தெய்வமாகத் திகழ்பவள் டண்டேஸ்வரி மாயி. யார் இந்த டண்டேஸ்வரி மாயி? எழுபத்தைந்து நாட்கள் தசரா கொண்டாடத்துக்கான காரணம் என்ன?

பதினைந்தாம் நூற்றாண்டில் புருஷோத்தம தியோ என்ற மன்னர் பஸ்தரை ஆண்டு வந்தார். அப்போது எதிரிகள் படையெடுத்து வந்து அவரது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். உயிருக்கு பயந்து அரசர் ஊரைவிட்டு ஓடத் தொடங்கினார். பயந்து ஓடிய மன்னரை வழியில் தோன்றித் தடுத்து நிறுத்தினாள் அம்பிகை. அநியாயமாகப் படையெடுத்து வந்திருந்த எதிரி மன்னனை விரட்டியடித்தாள். அரசனை மறுபடியும் அந்நகரின் அரியணையில் அமரச் செய்தாள். தடுத்து ஆட்கொண்ட அந்த ஈஸ்வரியை, 'டண்டேஸ்வரி மாயி' என்று அழைத்து வணங்கிய மன்னன், அவளையே தனது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டார்.

எதிரி நாட்டு மன்னனுடன் 75 நாட்கள் போரிட்டுத் தோற்று ஓடிய தன்னைக் காப்பாற்றிய டண்டேஸ்வரிக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக தசரா சமயத்தில் இத்திருவிழாவை இங்கு ஆரம்பித்து வைத்தார் மன்னர். அன்று ஆரம்பித்த இந்தத் திருவிழா இன்றும் மிகக் கோலாகலமாக 75நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஜூலை மாதம் அமாவாசையன்று தொடங்கும் இத்திருவிழாவின்போது பக்கத்துக் கிராமங்களிலுள்ள கோயில்களில் இருந்து தெய்வங்கள் ஊர்வலமாகப் புறப்படுகிறது. ஆண் பக்தர்கள் மத்தளம் இசைக்க, பெண்கள் பாட்டுப் பாடி, கும்மி அடித்துக்கொண்டே டண்டேஸ்வரி மாயியை தரிசிக்க உடன் செல்கின்றனர். டண்டேஸ்வரி ஆலயத்துக்கு வந்தவுடன் கிராமங்களில் இருந்து ஊர்வலமாக வந்து சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமிக்கு புதிய ஆடை அணிவித்து அலங்கரித்து முட்களால் ஆன ஒரு பெரிய ஊஞ்சலில் அமரச் செய்கிறார்கள். இதனை, 'கச்சன் காடி' என்கிறார்கள். முள் ஊஞ்சலில் அமரும் சிறுமி சிறிது நேரத்தில் முகம் மலர்ந்த புன்னகையுடன் வேக வேகமாக ஊஞ்சலை ஆட்டுகிறாள். கூரிய முட்களாலான ஊஞ்சலில் அப்பெண் ஆடினாலும், அவள் மேல் ஒரு சிறிய கீறல் கூட ஏற்படுவதில்லை.

டண்டேஸ்வரி அம்மன் இவள் மேல் இறங்கிவிட்டதற்கான அறிகுறியாகவும் அம்மனின் ஆசியுடன் இந்த விழா இனிதே நிறைவேறும் என்பதற்கான சமிக்ஞையாகவும் இது கருதப்படுகிறது. பின்னர் அம்மனின் அருளாசியைப் பெற்ற ஒரு சிறுவன் ஒன்பது நாட்கள் இரவும் பகலுமாக விழாவை தங்கு தடையின்றி நடத்துவதற்காக அமர்த்தப்படுகிறான். இதனை, 'ஜோகி பித்தாய்' என்றழைக்கின்றனர்.

ழங்குடி மக்களின் இனத்தில் அநேக பிரிவுகள் உண்டு. ஒவ்வெரு பிரிவினருக்கும் இத்திருவிழாவில் ஒவ்வொரு வேலையை ஏற்றுக்கொள்ள அம்மன் பணிக்கிறாள். தசரா ரதத்தை, 'சயோராஸ்' என்ற பிரிவினர் கட்டுகின்றனர். இந்தப் பணியை அம்மனின் விருப்பப்படி மாற்றி அமைக்கச் செய்வது, 'டாக்கடா' இனத்தவரே. ரதம் கட்டி முடித்ததும் அதற்கு ஆராதனை செய்பவர்கள், 'காக்கி' இனத்தவர். ரதம் இழுக்கும் கயிறைத் தயாரிப்பது, 'பர்ஜா' என்ற இனத்தவர். 'துர்வா' என்ற இனத்தவரும், 'மரியா' என்ற இனத்தவரும் மட்டுமே ரதம் இழுக்கும் பணியை மேற்கொள்கின்றனர். 'ஹல்பா' என்ற இனத்தவர்கள் விழா நடக்கும் தர்பார் ஹாலில் அமர்ந்து விழாவிற்குத் தலைமை தாங்குகின்றனர்.

எழுபத்தைந்து நாட்களும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இன்றி எல்லா இனத்தவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி டண்டேஸ்வரியை பூஜித்து மகிழ்கிறார்கள். திருவிழாவின் கடைசி நாளன்று, 'முரயா தர்பார்' என்ற விழா நடத்தப்படும். அப்போது கூடியிருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் பங்கேற்க வந்திருக்கும் 'தெய்வங்கள்' அவர்களின் இருப்பிடத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படுவர். தன்னை எங்கிருந்து, எப்படி வழிபட்டாலும் டண்டேஸ்வரி மாயி பக்தர்களைக் காத்திடத் தவறுவதில்லை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com