சர்க்கரைக்கோட்டை தேவி!

சர்க்கரைக்கோட்டை தேவி!

– பா.கண்ணன்

காராஷ்டிர மாநிலம், சாதாரா மாவட்டம் அவுந்த் டவுனில் இருக்கிறது அவுந்த் ராஜபரம்பரையினரின் ஆளுகைக்குக் கீழிருந்த கினாய் கிராமம். அதற்கும் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குக் கணக்குப் பிள்ளையாகப் பணியாற்றி வந்தவர் த்ரயம்பக் பந்த். அவுந்த் யேமாயி தேவியின் தீவிர பக்தர். வேலை நேரம் போக, மற்ற சமயங்களில் கோயிலே கதி என்று இருப்பார். புத்திர பாக்கியம் மட்டும் அவருக்குக் கிட்டவில்லை. இப்படி 25 ஆண்டுகள் கழிந்த பின்னர் தேவியின் அருளால் அவர் மனைவி கருவுற்றாள். மகிழ்ச்சியில் திளைத்தவர், மனைவியின் பிரசவ நேரம் நெருங்கியபோதும் தனது தினசரி வழிபாட்டு முறையை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, துணைக்கு வெளியூரிலிருந்து தனது சகோதரியை அழைத்தார். ஏதோ ஒரு காரணத்தால் அந்த அம்மணியால் வர முடியவில்லை. இருந்தாலும் மனைவியின் பேச்சைக் கேட்காமல் அன்றும் கோயிலே கதி என்றிருந்தார். தனக்கு ஓர் ஆண் மகவு பிறந்திருப்பதை ஊர் ஜனங்கள் சொல்லக் கேட்டு, தேவியைப் போற்றித் துதித்தவாறு வீடு போய்ச் சேர்ந்தார்.

'வர இயலாது என்று சொன்ன உங்கள் சகோதரி மட்டும் சரியான சமயத்தில் வந்திருக்காவிட்டால் ரொம்பவும் சிரமப்பட்டிருப்பேன். இப்போதுதான் துணிகளைத் துவைக்க ஆற்றங்கரைச் சென்றிருக்கிறார்' என்று மனைவி கூறியதும், அவளை அழைத்து வர ஓடினார். எங்குத் தேடியும் அவளைக் காண முடியவில்லை. அவருக்கு உடனே விளங்கி விட்டது, இவையெல்லாம் அவுந்த் தேவியின் லீலை என்று. அவள் சன்னிதானம் சென்று ஆரத்திப் பாட்டு பாடியபடியே மயங்கி விழுந்தார். சுய நினைவு திரும்பியதும், கினாய் மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக அங்கு வந்து கோயில் கொள்ளும்படி அன்னையிடம் வேண்டுகோள் வைத்தார். ஒரு நிபந்தனையின் பேரில், 'வருகிறேன்… எது நடந்தாலும் பின்னால் திரும்பாமல் முன்னோக்கிச் செல்' என்று தேவி கூற, அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காற்சிலம்பு ஒலிக்க, யேமாயி புறப்படத் துவங்க, த்ரியம்பக் பந்த் முன்னேறிச் சென்றார்.

கிராமத்துக்கு அருகிலுள்ள சிறு குன்றின் பக்கம் வந்தவுடன் சிலம்பொலிச் சத்தம் கேட்காததால் தன்னிச்சையாக அவர் திரும்பிப் பார்க்க, தேவி வந்த சுவடே காணவில்லை. அவர் அங்கேயே அரற்றித் துடிக்க, தேவியின் அசரீரிக் குரல் ஒலித்தது. 'கவலைப்படாதே, த்ரியம்பக்! உன் கருமை நிறப் பசு மேய்ச்சலுக்கு போகும்போது அதைப் பின்பற்றிச் செல். அது எங்கே நின்று பால் சொரிகிறதோ அவ்விடத்தில் நான் குடியிருப்பேன். என்னை ஆராதிக்க அதுவே சிறந்த இடம்' என ஒலித்தது. அதுபோலவே அவர் செய்ய, மூன்றாம் நாள் அந்தக் குன்றின் மீது ஓரிடத்தில் பசு பால் சொரிய, ஆவலுடன் அவ்விடத்தைப் பார்க்க, பிண்டி உருவில் யேமாயி தேவி உறைந்திருப்பதை உணர்ந்து பரவசமடைந்தார். உடனே அங்கு சிறிய குடில் ஒன்றை அமைத்து, ஊர் மக்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தார்.

அவர் காலத்துக்குப் பின் அவுந்த் ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக உயர்ந்த அவரது மகன் பரசுராம் பந்த் மற்றும் அவரது சந்ததியினரின் பெருமுயற்சியால் 1749ல் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 273 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம் தற்போதைய நிலையை அடைந்துள்ளது. பக்தர்களுக்கு நன்மையும், இனிமையும் அளிக்கும் தேவி ஆதலால், 'சர்க்கரைக் கோட்டை எனும் குன்றின் மீதமர்ந்து அருள்பாலிக்கும் தேவி' (சகர்கட் நிவாசிநி) என்று அம்மனை அழைக்கிறார்கள். அவுந்தின் 10வது பிரதிநிதி பாவன்ராவ் ஸ்ரீநிவாசராவ் பந்த் அவர்களின் புத்திரரும், அரசியல் வல்லுநரும், இந்தியாவின் வெளிநாட்டுத் தூதுவராகப் பணியாற்றிய பத்மஸ்ரீ அபா பந்த் எனும் பரசுராம் ராவ் பந்த் தனது சுயசரிதையில் (A MOMENT IN TIME), தன் குல முன்னோர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் மேற்கூறியச் சம்பவங்களை விவரித்துள்ளார்.

கிராமத்தின் தென்கிழக்கிலுள்ள ஒரு சிறு குன்றில் யேமாயியின் சகோதரி உறையும் கோயில் உறுதி மிக்கக் கருங்கல் கோட்டையாக அமைந்துள்ளது. கல் கைப்பிடிச் சுவருடன் சுமார் 300 படிக்கட்டுகள் மேலேறிச் செல்ல வேண்டும். அவை முடியுமிடமான மேற்கு வாயிலில் கம்பீரமாக, வசீகர வனப்புடன் நேர்த்தியான பீஜாப்பூர் கலை நயத்துடன் மிளிர்கிறது, 'நாகாரா கானா' எனும் மேல்தள அறை முரசு கொட்டுமிடம். வெளிச்சுற்றுச் சுவர் சிலவிடங்களில் மிகவும் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்ததும் கற்கள் பதித்தத் தளவரிசையுடன் முட்டை வடிவ முற்றம். எதிரே காணப்படும் காரைச்சாந்து கொண்டு உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்தனி சிலையை வழிபாடு செய்த பிறகே மேலே செல்ல வேண்டும் என்பது நியதி. ஆலயத்தினுள் நுழையுமுன் இடதுபுறம் இரு கலைவண்ணமிக்க தீப்மாலா எனும் சரவிளக்குக் கம்பங்களைக் காண்கிறோம். தீபமேற்றும் மேடைப் பகுதிகளை மயில் தாங்கியுள்ளது வியப்பளிக்கிறது. யாதவா கலைவண்ணம் எங்கும் மிளிர்கிறது. ஒரு பக்கத்தில் தேவநாகரியில் சில கல்வெட்டுச் செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் பின்பகுதியில் மற்றொரு சாதாரண தீப்மாலா கவனிப்பாரின்றி நிற்கிறது. மூன்று முறை இடி-மின்னல் தாக்கிச் சேதமாகியுள்ளதால் துர்சகுனம் எனக் கருதிச் செப்பனிடப்படாமல் உள்ளது.

எதிரில் அழகிய மரவேலைபாடுகள் கொண்ட நீண்டு, அகண்ட கண்கவர் மண்டபம். வரிசைக்கு நான்கு என மூன்று வரிசைகளில் பன்னிரண்டு கற்தூண்கள் இதைத் தாங்கிப் பிடித்துள்ளன. இங்கு வண்ண ஓவியங்கள் பல இடம்பெற்றுள்ளன. பிறை மாடங்களில் விநாயகர், துர்கை, அனுமன் ஆகியோர் சுதைச் சிற்பங்களாக வீற்றிருக்கின்றனர். அடுத்து, தேவியின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. சுற்றுச்சுவரில் பிற தெய்வங்களின் சிலைகள் காணப்படுகின்றன. மேற்கூரை விதானத்தின் சதுர மத்திய பாகத்தில் மணி தொங்கவிடப்பட்டுள்ளது.

அம்பிகையின் சிலை கருமை நிறக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஏழு தலை நாகம் குடை பிடிக்க, வெள்ளி கிரீடமணிந்து, சர்வாலங்காரப் பூஷிதையாய் பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். கீழ்ப்பகுதியில் அம்மன் முகமும், த்ரியம்பக் பந்த் பூஜித்த பிண்டியும் உள்ளன. பிரகாசமான விளக்கொளி மூலவர் மீது விழச்செய்து, அதன் பிரதி பிம்பம் வெளியே வைத்துள்ள நிலைக் கண்ணாடியில் பிரதிபலிக்க, தேவியை அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வு நம்மைப் பரவசப்பட வைக்கிறது. கருவறை விமானம் ஐந்து நிலைகளாக, உச்சியில் எண் திசைகளைக் குறிக்கும் விதமாக எட்டுச் சிகரங்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. பாமினி கட்டடக் கலை பாணியின் தாக்கம் இங்கு நன்றாகத் தெரிகிறது. இரு நிலைகளைச் சேர்த்து அமைத்திருக்கும் பிறை மாடங்களில் நான்கு புறமும் தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. விமானத்தைச் சுற்றி ஐந்து நிலைகளிலும், விநோதமான உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுள்ளதால், புது வண்ணப்பூச்சுகளால் விமானம் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.

செங்கல், கருங்கல், களிமண் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்ற 'கிச்' (KITSCH) எனும் நாட்டுப்புறக் கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை கண்களை உறுத்தும் பகட்டு உடை உடுத்தியதாகவும், நேர்த்தியின்றி, கோணல்-மாணல் தோற்றத்துடன், தேவாங்குக் கண்களுடன் தோற்றமளிக்கிறது. ஐயனார், எல்லைச்சாமி கோயில்களிலுள்ள சிலைகள் மாதிரிதான்! சிலர் ரசனைக்கு ஒவ்வாததாகவும், பிறர் இவை கேலிக்குறியதாகவும், கேலி செய்யப்படுவதாகவும் கருதலாம். ஆனால், சிறியவர் முதல் பெரியோர் வரை இந்த விநோதச் சிலைகளைப் பார்க்கும்போது சிரித்துப் பாராட்டாமல் இருக்கவே வாய்ப்பில்லை! வண்ணமிகு தோற்றத்தை உருவாக்கி, பகட்டான அலங்காரத்தைப்புகுத்தி, பிறர் கவனத்தைக் கவர இந்தப் பாணி கையாளப்படுகிறது. காரைச் சாந்தினால் உருவான இச்சிலைகள், துரு பிடிக்காதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கவனத்தில் கொண்டே இக்கோயிலுக்கு யுனெஸ்கோ பாராட்டுப் பத்திரம் அளித்துள்ளது.

செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலையில் தேவி பல்லக்கில் கோயில் வலம் வருவாள். கார்த்திகை, பௌர்ணமி தீப ஒளி நாள், பௌஷ்ய (தை) பௌர்ணமி தேவியின் யாத்ரா மிகவும் விசேஷ நாட்கள். நவராத்திரி, தீபாவளிப் பண்டிகைகள் போல் கார்த்திகை பௌர்ணமி தீபத் திருநாளும் இங்கு மிகவும் விசேஷம். சக்தியின் மகிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் மகேசன் தனது இடப்பாகத்தில் அன்னையை இருத்திக் கொண்ட திருநாள் அல்லவோ அது! சந்திரனின் ஒளி வெள்ளத்துக்கு ஈடுகொடுக்கும்படி, குன்றத்தின் மீதிலிருந்து பிரகாசிக்கும் ஆலய தீப அலங்காரம் கண்களுக்கு விருந்தாக அமைந்துவிடும்!!

கண்ணையும், கருத்தையும் கவர்ந்திழுக்கும் இவ்வாலயத்தை விட்டு வெளியேறும் போது யேமாயி தேவியின் மராட்டி மொழி ஆரத்திப் பாட்டு காதுகளில் ரீங்காரமிடுகிறது… 'ஜய தேவி, ஜய தேவி, ஜய ஆதிசக்தி, ஆரத்தி ஓவாளூ ஏகாக்ர பக்தி…' (தேவி ஆதிசக்தி! மனதை ஒருமுனைப்படுத்தி, பக்தி சிரத்தையுடன் ஆரத்தி எடுக்கிறேன்… அருள்புரிவாய் தாயே!)

அமைவிடம்: புனே-சாதாரா-அவுந்த் சுமார் 122 கி.மீ. ரயில், பேருந்து வசதியுண்டு. உள்ளூர் போக்குவரத்து வசதிகளுக்குக் குறைவில்லை.

தரிசன நேரம்: சுற்றுலா தலமாதலால் திறந்தே இருக்கும். பொழுது சாய்வதற்குள் சென்று வருவது நன்று.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com