வேண்டும் வரம் தருவாள் மாயா தேவி!

வேண்டும் வரம் தருவாள் மாயா தேவி!
Published on

– ராஜி ராதா

த்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் அமைந்துள்ளது மாயா தேவி திருக்கோயில். நான்கு கரங்களோடு திகழும் மாயா தேவி, அன்னை சக்தியின் அவதாரம் என்று கூறப்படுகிறது. 'மாயாபுரி' என்று ஆதியில் அழைக்கப்பட்ட இத்திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஒரு சித்தர் பீடம் என்றும் கூறப்படுகிறது. ஹரித்வாரில் அமைந்துள்ள மூன்று சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சண்டி தேவி, மானசா தேவி ஆகியோருக்கு அமைந்த கோயில்கள் மற்ற இரண்டு சக்தி பீடங்களாகும்.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலின் உட்புற சன்னிதியின் மையத்தில் மாயா தேவியும், இடதுபுறத்தில் காளி, வலதுபுறத்தில் காமாக்யா ஆகியோர் உள்ளனர். சக்தியின் இருவேறு வடிவங்களான மற்ற இரண்டு தேவிகளும் உள் சன்னிதியில் உள்ளனர். ஹரித்வார் மக்களின் பாரம்பரிய தெய்வம் மாயா தேவியாவாள்! இந்நகரை காலம் காலமாகக் காவல் காத்து வரும் தெய்வம் மாயா தேவி. சரி… யார் இந்த மாயா தேவி? சக்தி தேவியான தாட்சாயணிதான்!

ட்சனின் மகள் தாட்சாயணி சிவபெருமானை மணக்க விரும்புகிறாள். ஆனால் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க தட்சன் மறுக்கிறான்! ஆனாலும், தாட்சாயணி தாம் நினைத்தபடி சிவபெருமானை திருமணம் செய்து கொள்கிறாள். இதனால், தட்சனின் மனதில் சிவபெருமான் மீது கடும் வெறுப்பு ஏற்படுகிறது.
ஒரு சமயம் தட்சன் பெரிய யாகம் ஒன்றை செய்தபோது, தேவர்கள் அனைவரையும் அழைத்தவன், சிவபெருமானை மட்டும் அழைக்கவில்லை. இதனால் மனம் வருந்திய தாட்சாயணி தந்தையிடம், "என் கணவரை ஏன் அழைக்கவில்லை?" எனக் கேட்டாள்.

அதற்கு தட்சன், "அவரை மட்டுமல்ல; உன்னையும் நான் அழைக்கவில்லையே! ஏன் வந்தாய்?" எனக் கோபமாகக் கேட்கிறான். அப்போது தாட்சாயணி, தட்சனின் யாக குண்டத்தில் விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொள்வதாக புராணம் செல்லும். ஆனால், இக்கோயில் வரலாற்றில் சிறு மாற்றமாக, தந்தையால் அவமானப்பட்ட தாட்சாயணி, கிடுகிடுவென நடந்து ஒரு இடத்தில் தன்னை, தனது சக்தியாலேயே எரித்துக் கொள்கிறாள். அப்படி எரிந்த இடம்தான் இன்று ஹரித்வாரில் அமைந்த மாயா தேவி கோயில் என கூறப்படுகிறது. தன்னைத்தானே அழித்து மாயமானதால், இவள் மாயா தேவி என அழைக்கப்படுகிறாள்.

அதன் பிறகு சிவபெருமான் சதி தேவியைத் தூக்கிக்கொண்டு நடனமாட, விஷ்ணுவின் சக்கராயுதத்தால் வெட்டப்பட்டு பல பாகங்களாக சிதறியபோது, இங்கு சதி தேவியின் இருதயம் மற்றும் தொப்புள் விழுந்ததாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்.

ண்ணியதை எண்ணியபடி வழங்கும் தெய்வமாக மாயா தேவி திகழ்கிறாள். ஹரித்வாரின் பழைய பெயர், இந்த மாயா தேவியை வைத்தே, 'மாயாபுரி' என வந்ததாகக் கூறுகின்றனர். பக்தர்கள் வேண்டுவதை அப்படியே வழங்குவதால், 'சித்தி பீடம்' எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 'ஆதி ஸ்திரி கோயில்' எனவும் இதற்கு சிறப்புப் பெயருண்டு.

கருவறையில் அருளும் மாயா தேவி தனது சிரசில் கிரீடம் சூட்டியுள்ளாள். பின்புறச் சுவரில் வெள்ளிச்சக்கரம் அமைந்துள்ளது. அன்னை தமது திருமேனி முழுவதும் பூமாலைகள், நகைகள் என ஜொலிக்கிறாள். மாயா தேவிக்கு அருகில் இருபுறமும் சூலமும், மேலே குடையும் பொருத்தப்பட்டுள்ளது. அருகில் காளியும் காமாக்யாவும் மிக அழகாகக் காட்சி தருகின்றனர். வடநாட்டில் சக்தியை ஒற்றையாக வைத்து வழிபடுவதில்லை. பொதுவாக காளி, சரஸ்வதி ஆகியோர்தான் உடன் இருப்பர். ஆனால், இங்கு காமாக்யா அருள்பாலிக்கிறாள். கோயில் வாசலில் பைரவருக்கு சிறிய சன்னிதி உள்ளது.

மாயா தேவியின் கருவறை சன்னிதி மேலே சிறிய விமானம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான கோயில் இது. ஆனால், வெகு பிரசித்தம்! ஆகையால், தொடர்ந்து பக்தர்கள் இந்த அன்னையை வந்து தரிசித்துச் சென்ற வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, நவராத்திரியின்போதும், ஹரித்வார் கும்பமேளாவின்போதும் இந்தக் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்!

ஹரித்வார் வருபவர்கள் இந்த அம்மனைத் தரிசிக்காமல் திரும்பக்கூடாது என ஒரு நம்பிக்கை இப்பகுதியில் நிலவுகிறது!

அமைவிடம் : ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது! நடந்தே செல்லலாம்! டவுன் பஸ், ஆட்டோ வசதியும் உண்டு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com