எங்கிருந்தோ வந்த யானைகள்!

எங்கிருந்தோ வந்த யானைகள்!
Published on
லதானந்த்

வாழ்க்கையில் நமக்கு எவ்வளவோ முறை உதவி தேவைப்பட்டிருக்கும். தேவைப்படும் போது உதவிகளும் கிடைத்திருக்கும். ஆனால், நிர்க்கதியான நிலையில் எதிர்பாராமல் ஓர் உதவி, எதிர்பாராத வகையில் கிடைத்துப் பெரும் நிம்மதியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறதா?

நான் கண்கூடாகக் கண்ட ஓர் உதாரணம் சொல்கிறேன்.

வேலைக்குச் சேர்ந்த புதிது. அப்போது நான் தமிழ்நாடு வனத்துறையில் கூடலூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அங்கே அரசுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டக் கழகத்தில் ஒரு நண்பர் பணி யாற்றி வந்தார். பெயர்? ம்ம்ம்… நிலவரசன்னு வச்சுப்போம். அவரது பொறுப்பில் ஒரு லட்சம் தேயிலை நாற்றுகள் இருந்தன. ஒரு நாற்றின் விலை, அந்தக் கால மதிப்பிலேயே இரண்டு ரூபாய்.

அவசரத் தேவைக்காக அவரிடம் இருந்து பிற வன சரகர்கள் அவ்வப்போது நாற்றுகள் பெற்றுச் செல்வார்கள். முறையாகச் சிலர் திருப்பித் தராமலேயே பணி மாறுதலும் ஆகிச் சென்றுவிடுவார்கள். கொஞ்சம் திருட்டும் போயிருந்தது. திடீரென்று இவருக்கு மாறுதல் உத்தரவு வந்தது. கையிருப்பில் உள்ள நாற்றுகளை புதிதாகப் பொறுப்பேற் பவரிடம் ஒப்புவிக்க வேண்டுமல்லவா? நாற்றங்காலில் தேயிலை நாற்றுகளை எண்ணிப் பார்த்தார். அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது, ஏராளமான நாற்றுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது. பதவி உயர்வுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்படும் வேளை அது! குற்றத்தாள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அரசுப் பணி இழப்புக் காக ஊதியத்தில் ரொக்கம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலோ பணி உயர்வு தள்ளிப் போய்விடும்.

'எந்தவிதத் தவறும் செய்யாத தனக்கு இப்படி ஒரு சோதனையா?' எனத் துடித்துப் போய்விட்டார் நிலவரசன். கூடிய விரைவில் பணி ஓய்வு வேறு காத்திருக்கிறது. பணி உயர்வு வராவிட்டாலும், ஒழுங்காக ஓய்வு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுவிடுமே? மனிதர் ஆடிப்போய்விட்டார். அடுத்த நாள் ஆய்வுக்காக ஒரு குழு வேறு வருவதாக இருந்தது. மருகியபடியே தூக்கம் தொலைத்த இரவை எதிர்கொண்டார்.

அந்த நாள் இரவு… அடர் வனத்திலிருந்து கணிசமான யானைக் கூட்டம் ஒன்று இவரது பரந்து விரிந்த நாற்றங்கால் அருகே, நட்டநடு இரவில் நடமாடிக் கொண்டிருந்தது.

அதில் அந்தக் கூட்டத்துக்கே செல்லப் பிள்ளையான சின்னஞ்சிறு யானைக் குட்டி ஒன்று நாற்றங்காலுக்குள்ளே ஒரு சிறிய தடுப்பின் வழியாக நுழைந்துவிட்டது. நுழைந்த குட்டிக்கு, வெளியே வர வழி தெரியவில்லை.

அதனால், தனது கூட்டத்தை அழைக்கப் பிஞ்சுக் குரலில் கூக்குரல் இட்டது. தங்களின் செல்லக் குட்டிக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்த யானைக் கூட்டம், ஆவேசமாய் நர்சரிக்குள் நுழைந்தன; நாற்றங்கால் கம்பங்களைப் பிடுங்கி வீசின; நாற்றுள்ள பாத்திகளை துவம்சம் செய்தன. நாற்றுகளைப் பிய்த்துப்போட்டு செடிகள் இருந்த பாத்திகளில் கோர நடனம் ஆடி, மிதித்து, சின்னாபின்னமாக்கி, ஏராளமான பாலிதீன் பைகளையும், மண்ணையும், சேறையும் தேயிலை நாற்றுக்களையும் பிரித்தறியாதபடி சிறு குன்றுகளாகக் குவித்துப்போட்டு மிதித்திருந்தன. ஒருவழியாகக் குட்டியும் கூட்டத்துடன் சேர்ந்தவுடன், ஆசுவாசமாகி குட்டியை மீட்டுக்கொண்டு மீண்டும் காட்டினுள் சென்று அவை மறைந்தன.

அடுத்த நாள் சேதத்தை மதிப்பிட ஒரு குழு அமைக்கப்பட்டது. யானைகள் போட்டிருந்த லத்திகளின் அளவையும், எண்ணிக்கையையும் கொண்டு, அட்டகாசம் செய்த யானை களின் எண்ணிக்கை இருபது என அடுத்த நாள் வந்த குழு கணக்கிட்டது.

நாற்றங்காலில் நல்ல நிலையில் எஞ்சியிருந்த தேயிலை நாற்றுகளை மட்டும் எண்ணிக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மீதி நாற்றுகள் அனைத்தும் யானைகளால் சேதமாக்கப் பட்டது என்ற விரிவான அறிக்கையோடு, புகைப்பட ஆதாரங்களையும் அளித்தது அந்தக் குழு.

குழுவின் பரிந்துரையின்பேரில், 'சேதம் அடைந்த நாற்றுகள்' Right off (அரசுக் கணக்கில் இருந்து நீக்கம்) செய்யப்பட்டன. யானைகளின் இந்த எதிர்பாராத உதவியால் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நிலவரசன்.

************

ஹாய் வாசகீஸ்!

இதுபோன்ற, 'எதிர்பாராத உதவி, எதிர்பாராத வகையில், எதிர்பாராத நேரத்தில்' உங்களுக்குக் கிடைத்த சுவாரஸ்யமான சம்பவங்களை நமது www.kalkionline.com இணையதளத்தில் உள்ள, மென்பேனா வழியாகப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! தேர்வாகும் படைப்புகள் மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் இடம்பெறும்.
(- .ர்.)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com