​ஜன்ம தோஷ நிவர்த்தி தரும் ஆதிகேது!

​ஜன்ம தோஷ நிவர்த்தி தரும் ஆதிகேது!
Published on

பழங்காமூர் மோ.கணேஷ்

சோழவள நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் சிறப்புக்குரியவை. அவற்றுள், செம்பங்குடியும் ஒன்றாகத் திகழ்கிறது. அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்
ஸ்ரீ மகாவிஷ்ணு. விப்ரசக்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும் பிறந்தவன் ஸ்வர்பானு. அசுர குலத்தைச் சேர்ந்த இவன், தேவ வடிவம் பூண்டு அமிர்தத்தை உண்டான். இதனை உணர்ந்த சந்திர சூரியர்கள், அவ்வசுரனின் தலையில் ஓங்கி அடிக்க, கேதுவின் தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என்னும் செம்பங்குடியிலும் விழுந்தது.

சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம் இங்கு குடி கொண்டதால் இத்தலம், 'செம்பாம்பினன்குடி' ஆனது. பேச்சு வழக்கில் தற்போது இந்த ஊர், 'செம்பங்குடி' என்று அழைக்கப்படுகிறது.

அமுதுண்ட அது, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ஈசனை நோக்கிக் கடுந்தவமிருந்து பூஜித்து, 'அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர, சூரியர்களை விழுங்கும் பலமும்' கேட்டன. ஈசனோ, சந்திர சூரியர்கள் இன்றி, உலகம் தத்தளிக்கும். இருப்பினும், கிரஹண காலங்களிலும், அமாவாசையிலும் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார். இருவருக்கும் கிரக பதவியும் வழங்கினார். அவர்களே, ராகுகேது. எனவே, ஆதிகேது தலமாகப் போற்றப்படுகின்றது இந்த செம்பங்குடி.

அருணாசல கவிராயரின் சீர்காழி தல புராணத்தில் இப்பதி செம்பாம்பினன்குடி, கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையுள் மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இந்தத் தலத்தை வைப்புத் தலமாகப் போற்றியுள்ளார்.

ருக்கு சற்றுத் தள்ளி, ஒதுக்குப்புறத்தில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. சுற்றிலும் வயல்வெளிகளின் ரம்மியமான சூழல். தோரண வாயிலின் நேராக ஈசன் சன்னிதி அமைந்துள்ளது. விதானத்தில் அம்மையப்பர் தரிசனம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையுள்ளே அழகிய சிறிய திருமேனியராய், ஆனந்தமாய் வீற்றருள்கின்றார் ஸ்ரீ நாகநாதஸ்வாமி. ஆதியில் கேது பூஜித்த லிங்கமாதலால், 'கேதீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார். பல ஜன்ம நாக தோஷங்களையும் நொடிப்பொழுதில் நீக்கி, சுகத்தை அருளுபவராக இவர் திகழ்கிறார்.

ஆலய வலம் வருகையில், முறையான கோஷ்ட தெய்வங்களோடு, தனிச் சன்னிதிகளில் வீற்றிருக்கும் கணபதி, கந்தன் மற்றும் கஜலட்சுமியை வணங்குகின்றோம். ஸ்வாமிக்கு வாம பாகத்தில் அம்மையின் சன்னிதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. அம்பிகை
ஸ்ரீ கற்பூரவல்லி சிறிய திருமேனி கொண்டு புன்னகை சிந்துகின்றாள். திரிபுரசுந்தரி என்றும் அம்பிகைக்கு மற்றொரு பெயர் உண்டு. ஆதிகேதுவின் சன்னிதி ஆலயத்தின் வாயு பாகத்தில் தனியாக அமைந்துள்ளது. சிறிய ஆலயமாக இருந்தாலும், இக்கோயில் சீர் மிகுந்து விளங்குகின்றது. தினமும் ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. ஆலய மெய்க்காவலர் உதவியுடன் எப்போது வேண்டுமானாலும் ஸ்வாமி தரிசனம் செய்யலாம்.

ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பசும்பாலால் அபிஷேகம் செய்து, சிவந்த அல்லி மலர்களால் அர்ச்சித்து, புளியோதரை நிவேதனம் செய்து பிரார்த்திக்க, முன் ஜன்மங்களில் ஏற்பட்ட நாக தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம். அதோடு சிறந்த அறிவையும், பேராற்றலையும் பெற்றிடலாம்.

சிவ பக்தியில் சிறந்தும், மோக்ஷ காரகனாகவும் திகழும் இத்தல ஆதிகேதுவை எமகண்ட வேளையில் அபிஷேகித்து, பல வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, சிவந்த நீர் வகை புஷ்பங்களால் அர்ச்சித்து, கொள்ளு சாதம் நிவேதனம் செய்து ஆராதிக்க, சகலவித பாபங்களிலிருந்தும் விடுபட்டு, சுகபோகங்களும், சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடலாம்.

அமைவிடம் : நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செம்பங்குடி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com