​கடவுள் தரிசனம்!

​கடவுள் தரிசனம்!
Published on

சுந்தரி காந்தி

துறவி ஒருவர் ஆற்றில் நீராடிவிட்டு, கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இதை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். நீண்ட நேரம் கழித்து துறவி தியானம் கலைந்து எழுந்தார். அவர் அருகில் சென்ற மாடு மேய்க்கும் சிறுவன், "சுவாமி! நீங்கள் இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு அந்தத் துறவி, "நான் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்து கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அதைக் கேட்ட சிறுவன், 'இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்க முடியும் போலும்! நாமும் ஏன் அவரைப் போலவே இறைவனை பார்க்க முயற்சிக்கக் கூடாது' என்று நினைத்தான்.

உடனடியாக ஆற்றில் நீராடிவிட்டு, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, "இறைவனே! நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும்" என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்துடன், அவன் தன்னை நினைத்துப் பிரார்த்தனை செய்ததைக் கண்ட கடவுள், சிறுவன் முன்னால் தோன்றினார். சிறுவன் அதற்கு முன்பு இறைவனை நேரில் பார்த்ததில்லை என்பதனால் அவரிடம், "நீங்கள் யார்?" என்று வினவினான்.

"நான்தான் இறைவன். நீ என்னைப் பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய் அல்லவா! அதனால்தான் உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்" என்றார் கடவுள்.

"நீங்கள்தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? ஏற்கெனவே உங்களைப் பார்த்த ஒருவர் இருக்கிறார். அவர் வந்து, 'இவர்தான் இறைவன்!' என்று உங்களைக் கூறினால்தான் நான் நம்புவேன்!" என்றான் சிறுவன்.

அதற்கு இறைவனும், "சரியப்பாநீ கூறியபடியே அந்தத் துறவியை இங்கு அழைத்து வா! நான் காத்திருக்கிறேன்" என்றார்.

தைக்கேட்ட சிறுவன், "இப்படிச் சொல்லி விட்டு, நான் இங்கிருந்து சென்றதும் போய்விடலாம் என்று நினைக்கிறாயா? நீ இங்கிருந்து தப்ப முடியாதபடி நான் உன்னை மரத்தில் கட்டிவிட்டு, பிறகு சென்று துறவியை அழைத்து வருகிறேன்" என்றான்.

சிறுவன் நாலைந்து மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தான். அந்தக் கயிறுகளைக் கொண்டு இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான். பிறகு துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினான் சிறுவன்.

துறவியிடம் சென்ற அவன், "சுவாமி! நீங்கள் கூறியபடி நானும் ஆற்றில் குளித்துவிட்டு, மரத்தடியில் அமர்ந்து, இறைவனை நோக்கி தியானம் செய்தேன். அப்போது ஒருவர் என் முன்னால் தோன்றி, 'நான் தான் இறைவன்' என்கிறார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை. அதனால் நான் அவரை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் வந்து அவர்தான் இறைவனா என்று எனக்குச் சொல்லுங்கள்" என்றான். அதிர்ந்து போன துறவி, சிறுவனுடன் சென்றார்.

சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனைச் சுட்டிக்காட்டி துறவியிடம், "அதோ பாருங்கள்! நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா?" என்று கேட்டான்.

துறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவன் தெரியவில்லை. எனவே, அவர் சிறுவனிடம், "நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே!" என்றார்.

அதற்குச் சிறுவன், "என்ன சுவாமி சொல்கிறீர்கள்? நன்றாகப் பாருங்கள்! அதோ, அங்கு நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே!" என்றான்.

துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை. அப்போது மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவன், "சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால்தான் நான் உனது கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.

அதைக் கேட்ட சிறுவன், "கடவுளே! இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான், எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே, இவருக்கும் நீங்கள் தரிசனம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டான். சிறுவனின் பிரார்த்தனையை ஏற்ற, இறைவன் துறவிக்கும் தரிசனம் கொடுத்தார்.

ஆன்மிக வாழ்க்கையில் 'இறைவன் மீது நம்பிக்கை' என்பது மிகவும் முக்கியத்துவமானது. ஒரு குழந்தை, 'நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்' என்ற நம்பிக்கையுடன் தாயிடம் கேட்கிறது. அது போன்ற நம்பிக்கையுடன்தான், நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com