
நான் இளைஞனாக இருக்கும் போது ஏர்போர்ஸில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரியவேண்டும் என்று ஒரு ஆசை என் அடி மனதில் வேரூன்றி
இலை தழையெல்லாம் கூட விட்டு விட்டது!
1976ம் ஆண்டில் ஏர்மென் வேலைக்கு ஆளெடுப்பதாக அறிந்த உடனே விண்ணப்பத்தை தட்டி விட்டேன்!
சென்னை தாம்பரத்தில் நடைபெறும் நேரடி அனுமதிக்கு வருமாறு விமானப்படையிலிருந்து கால் லெட்டர் வந்ததும் எனக்கு கையும் ஓடவில்லை!(கை எப்படி ஓடும் என்றெல்லாம் கேட்கக்கூடாது!) காலும் ஓடவில்லை!
முதலில் உடற் தகுதித்தேர்வு!
அதில் தேர்வு பெற்றால் அடுத்தநாள் எழுத்துத்தேர்வு! அம்புட்டுத்தேன்!
உயரம் 170 செமீ…
மார்பு சுற்றளவு….75 செமீ
விரிவாக்கம்………80செமீ
எடை……………58 கிகி ( மிகச்சரியாக 58 கிகி இருந்ததுதான் என்னை பயமுறுத்தியது! ஒரு நூறு கிராம் குறைந்தால்?)
குறிப்பிட்ட நாளும் வந்தது! நான் அதுவரை சென்னை போயிருக்காத சிறுவன் என்பதால் எங்கள் மூத்த அண்ணன் குருராஜன் தனது அலுவலக வேலைகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, என்னை சென்னை அழைத்துப்போய் வர சம்மதித்தார்!
நேர்காணலுக்கு முன்தினம் இரவு திருப்பத்தூரிலிருந்து அரசு விரைவுப்பேருந்தில் சென்னை பயணமானோம்!
இரவு வேலூரில் வண்டி நின்றபோது நான் தூங்காமல் விழித்துக்கொண்டு இருப்பதை பார்த்து ' ஏண்டா! தூங்கலயா? அப்பப்ப கண்மூடி தூங்கு டா!' என்று அட்வைஸ் செய்துவிட்டு ஒரு டீ வேறு வாங்கிக் கொடுத்தார் அண்ணன்!
ஒரு வழியாக விடிகாலை ஐந்து மணிக்கு பிராட்வே பஸ்ஸ்டாண்டில் பேருந்து நின்றதும் இறங்கி அங்கே இருந்த கட்டணக்கழிவறையில் அவசர அவசரமாக ( கட்டணக்கழிவறைகளில் ஆற அமர கடன் தீர்க்கவே முடியாது! வெளியேயிருந்து மக்கில் தண்ணீர் பிடித்து சள்ளென்று ஊற்றி " ஆச்சா? வெளியே வா! வெளியே வா!" என்று கத்துவான்!) காலைக்கடன்களை முடித்து பக்கத்தில் இருந்த குளியலறையில் குளித்து முடித்து அருகிலிருந்த பார்க் ஸ்டேஷன் வந்து எலக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து தாம்பரம் கிளம்பியபோது மணி ஆறரை!
ஒரு வழியாக எட்டு மணிக்கெல்லாம் தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம்!
அண்ணன்," நீ எதற்கும் பயப்படாதே! தைரியமாக பேசு! செலக்ட் ஆகவில்லை என்றாலும் கவலைப்படாதே! உனக்கு இன்னும் வயசு இருக்கு! நாட்டில் செய்ய ஆயிரத்தெட்டு வேலை இருக்கு!" என்றெல்லாம் சொன்னார்!
அங்கே இருந்த ஒரு புளிய மரத்தின் கீழ் ஒரு மனிதன் வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தான்!
வாடா வாடா! என்று என்னை அங்கே அழைத்துச் சென்ற அண்ணன் பெரிய பச்சை வாழைப்பழம் ஒன்றை வாங்கிக்கொடுத்து "சாப்பிடுடா! எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடு!" என்றார்!
அப்போதுதான் தாம்பரம் ஸ்டேஷன் கேன்டீனில் இட்லி, வடை, பூரி சாப்பிட்டு வந்ததில் வயிறு "அறிவு கெட்டவனே! எங்கேடா இருக்கு இடம்? வேண்டாம்னு சொல்லு!" என்று என்னை எச்சரிக்கை செய்தது!
ஆனால், அண்ணனோ " நீ ரெண்டு பழமாவது சாப்பிட்டே ஆகணும்!" என்றார்! "உன் வெயிட் பிரச்னை மறந்து போச்சா? இந்த பெரிய பச்சை வாழை இரண்டு சாப்பிட்டால் எப்படியும் ஒன்றரை கிலோ ஏறிடும்!" என்று அவர் சொன்னபோதுதான் அன்போடு அவர் சொன்னதன் காரணமும் அங்கே பச்சைவாழைப்பழ பிஸினஸ் சக்கை போடு போடும் ரகசியமும் தெரிந்தது!
மிகுந்த சிரமத்துக்கு இடையே இரண்டு பழங்களை உள்ளே தள்ளினேன்!
இருபது இருபது பேராக உள்ளே அழைத்து அவர்களை தனித்தனியாக தேர்வு செய்து குறைபாடு உடையவர்களை தாமதிக்காமல் உடனுக்குடன் வெளியேற்றி வந்தனர்!
"ஏறத்தாழ பத்து சோதனைகளில் தேறினால்தான் எழுத்துத்தேர்வு!" என்று நான்காவது சோதனையில் தோற்றவன் போகிறபோக்கில்சொல்லிவிட்டு சென்றான்!
ஒன்பதரை மணியளவில் அங்கே இருந்த ஸ்பீக்கர் எனது பெயரை சொன்னதும் நான் உள்ளே செல்ல ஆயத்தமானேன்! அண்ணன் சிரித்தவாறே என்னை வழியனுப்பினார்!
கேட்டை தாண்டி கொஞ்ச தூரம் உள்ளே சென்றதும் வெள்ளை நிற கட்டடம் ஒன்றில் தேர்வுகள் நடப்பது தெரிந்தது!
சற்று தயங்கியவாறே உள்ளே நுழைந்த என்னை ," ஹூம்! என்ன பெயர்?" என்று கைகளை நீட்டியவாறே கேட்ட அந்த மீசை வைத்த ஆபீஸரிடம் எனது சர்டிஃபிகேட்களை அநிச்சையாக நீட்டினேன்!
Indian Air force- Airmen Selection என்று எழுதிய படிவம் ஒன்றில் எனது பெயர் முகவரி ஆகியவற்றை எழுதியவர் எனது சர்டிபிகேட்களை பார்த்து மதிப்பெண் தேர்ச்சி விபரம் ஆகியவற்றை எழுதியவர் புன்னகைத்தபடி அங்கே போ! என்று அடுத்த மீசையை காட்டினார்!
எனது பேட்சில் வந்த இருபது பேரில் பத்தொன்பது பேர் அங்கே இருந்தனர்! எனது உயரத்தை அளந்து எழுதிய அவர் "கோ தேர் !" என்று எங்களை அடுத்த மீசையிடம் அனுப்பினார்! அது வெயிட்! என் முறை வரும் வரை மனம் திக் திக் என்று அடித்தது! 60 kg என்று எழுதியதும் அடுத்த ஒரு மீடியம் மீசையிடம் எங்களை அனுப்பினார்! தப்பித்தோம் என்று அந்த Chest Expansion பகுதியிலும் ஓகே வாங்கி அடுத்த சோதனையில் நுழைந்தோம்! என்ன ஆச்சரியம்! இதற்குள் பத்துப்பேர் தேவையான உடற்தகுதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட நாங்கள் பத்து பேர் மட்டுமே இருந்தோம்!
அந்தப் பிரிவில் எங்களை அட்டென்ஷனில் நிற்கச் சொல்லி முழங்கால் ஒன்றையொன்று இடிக்கிறதா? என்று சோதித்தார்கள்! ஆச்சரியம்! இதில் ஐந்து பேர் முழங்கால் இடிப்பதாக கூறி நிராகரிக்கப்பட்டனர்!
அடுத்ததாக சற்று தொலைவில் இருந்த மைதானத்திற்கு விரைந்தோம்!
அங்கே ஒரு மரத்தில் கயிறு ஒன்று கட்டப்பட்டு இருந்தது! மூன்று அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் முடிச்சுகள் போடப்பட்டு இருந்தது.!
சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்த அந்தக்கயிற்றின் முடிச்சுகளில் கட்டை விரலையும் பெரு விரலையும் கெட்டியாக பொருத்தி மேலே ஏறவேண்டும்! என்னாலேயே நம்ப முடியாமல் நான் இரண்டு நிமிடங்களில் இருபது அடியை ஏறிவிட்டேன்! இந்தத்தேர்வின் முடிவில் மூன்று பேர் மட்டுமே எஞ்சினோம்!
அடுத்ததாக ஒரு அறையில் பெரிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது! அதில் கால்களை நனைத்துக்கொண்டு பத்தடி நடக்கச்சொன்னார்கள்! முன்னங்கால்களுக்கும் குதிகாலுக்கும் இடையே பாதத்தில் குழி போல் இருக்க வேண்டும்! தட்டையான கால் Rejected!
இதில் ஒருவன் குறைய இரண்டு பேர் மட்டுமே இருந்தோம்!
அடுத்த மேஜர் சுந்தர்ராஜன் போல் இருந்த ஆபீஸரிடம் இருவரும் சென்றோம்! அவர் Attention, Stand at ease சொல்லி எங்களை வார்ம் அப் செய்து விட்டு இரண்டு கைகளையும் நீட்டச்சொல்லிவிட்டு குளோஸ் யுவர் பிங்கர்ஸ்! என்றதும் நாங்கள் எங்கள் விரல்களை கெட்டியாக மூடிக்கொண்டோம்! சரியாக இரண்டு நிமிடம் கழித்து ஓபன் யுவர் ஹேண்ட்ஸ் என்றார்!
சென்னை உப்புக்காற்றில் வெப்பம்! டென்ஷனான தேர்வுகள்! தேர்வாக வேண்டுமே என்ற பரபரப்பு…
எங்கள் உள்ளங்கைகள் அதிகம் வியர்ப்பதாக காரணம் சொல்லப்பட்டு நாங்கள் இருவரும் நிராகரிக்கப்பட்டோம்!
கண்களில் நீர் மல்க என் நெடுநாள் கனவு கரைந்து போக வெளியே வந்த என்னை அண்ணன் எவ்வளவோ ஆறுதல் படுத்தியும் குறைப்பிரசவத்தில் முடிந்து போனது எனது ஏர்போர்ஸ் ஆசை!
எனக்கு நெடுநாட்களாக இருந்த ஆசை நப்பாசையாய் போனது இன்றுவரை வருத்தமே?
அன்று பார்த்த மெரினா கடற்கரையும் அண்ணா சமாதியும் சாந்தி தியேட்டரும் சாப்பிட்ட இம்பாலா ஹோட்டலும் மனதில் பதியவில்லை!
இதுதான் எனது முதல் சென்னைப் பயணம்! எனது ஆசையில் மண் அள்ளிப்போட்ட பயணமாகவும் அமைந்ததில் வருத்தமே!!
அக்னிபாத் அப்போதே இருந்திருந்தால் ஒரு வேளை என் கனவு நிறைவேறி இருக்குமோ?