பெருமிதமான தருணம்.

பெருமிதமான தருணம்.
Published on

தலையங்கம்

'செஸ்' என்ற சதுரங்க விளையாட்டும் உலகம் முழுவதும் விளையாடப்படும், ஓர் அறிவு சார்ந்த விளையாட்டு.  ஆனந்த விஸ்வநாதன் இதில் உலக சாம்பனாகி முதலிடத்தைப்பெற்று இந்தியாவிற்கு உலக அரங்கில் தனி மதிப்பைப் பெற்று தந்தவர். அவர் வழியில் பல இந்திய இளைஞர்களும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் தமிழ்நாட்டு இளைஞன்  ….

உலக செஸ் அரங்கில் இந்தியாவின் பெயரை நிலைநிறுத்தக் கிடைத்திருக்கும்  ஒரு நல் வாய்ப்பு 2022 செஸ் ஒலிம்பியாட். 2022ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக அங்கு நடத்த எடுத்த முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இந்தப் போட்டியை நடத்த பல நாடுகள் முயன்ற சூழலில் முதன்முறையாக இந்தியாவுக்கு நடத்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இந்தியாவிற்கு வாய்ப்பு என்றவுடன் "நாங்கள் நடத்தித் தருகிறோம்" என்று உடனடியாக முன்வந்த தமிழ் நாட்டின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டி வேறு எந்த மாநிலத்திற்கும் செல்லாமல் தமிழகத்திற்கு வந்ததற்குக் காரணம் விளையாட்டுக்களில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கும் ஆர்வம்.

200 நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் என்று சுமார் 2500 பேருக்கும் மேல் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வர உள்ளனர். இதனால் உலகம் முழுவதும் உள்ள செஸ் வீரர்கள் மத்தியில் தமிழகத்தின் பெயர்  இடம் பெற்று உள்ளது.

சென்னையில் இந்த போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முழு முன்னெடுப்பும், மிகச் சிறப்பான ஏற்பாடுகளும்   தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தகுதி வாய்ந்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பியாட் போட்டிக்காக    செஸ் ஆட்டத்தின் முக்கிய  காய்களில் ஒன்றான குதிரை தமிழரின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்த உருவம்.
"தம்பி" என்ற அடையாள சின்னமும் (MASCOT)  உருவாக்கப்பட்டிருக்கிறது. இது விளையாடுபவர்கள் அணிந்திருக்கும் உடைகளில் இடம் பெறும்.

தமிழ்நாட்டின்  பள்ளி மாணவர்களுக்கு  செஸ் விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க மாவட்டம் தோறும்  மாணவர்களுக்கு செஸ் போட்டிகள்  நடத்தி அதில் வெற்றிபெறுபவர்களை இந்த ஒலிம்பியாட்டுக்கு பார்வையாளராக அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.

விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் பெரிய அளவில் ஊக்கப்படுத்தப் பல முன்னெடுப்புகளைத் தமிழக முதல்வர்  செய்து வருகிறார்.

ஜப்பான் நாட்டில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தடகள விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி, ஸ்காட்லாந்தில் நடந்த ஸ்குவாஷ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், கார்த்திக், சவுரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கு ரூ.3 கோடி என்று நிதி உதவிகளைத் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது.

இந்த  "செஸ் ஒலிம்பியாட் 2022" மூலம் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் 'இந்தியா' என்ற பெயருடன் தமிழ்நாட்டின் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com