ஒரு நாய்கூட மீறாத சட்டம்

ஒரு நாய்கூட மீறாத சட்டம்
Published on

ஆதித்யா

1975, ஜூன் 25. அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.

பிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.

எண்: 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.

நாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.

பிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்".

அரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.

இந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.

"உள்நாட்டு பிரச்னைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்" என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.

"எமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம்" என்று யோசனை கேட்டார் இந்திரா. "அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம்" என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.

இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.

குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.

இந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.

பிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.

அமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார். இதை இந்திராகாந்தி சொல்லும்போது ஏற்கெனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.

அடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.

தவணின் அறையில் அமர்ந்து ஓம் மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சார இணைப்பை எப்படி துண்டிப்பது, பத்திரிகைகளை எவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்துவது போன்ற திட்டங்களையும் இந்த மூவர் அணி உருவாக்கியது.

இந்திரா காந்தி வானொலியில் ஆற்றவேண்டிய உரையை தயாரித்து முடிக்கும்போது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.

ஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திரா உறங்கச் சென்றபோது, கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் மொரார்ஜி தேசாய் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ், பிகார் மாநில அரசியல் தலைவரும், ஜெயபிரகாஷ் நாராயணனின் சகாவுமான கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை

முதல் நாள் பரபரப்பாக இயங்கிய இந்திரா காந்தி சில மணி நேரமே ஓய்வெடுத்தபோதிலும், அடுத்த நாள் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது உற்சாகமாகவே காணப்பட்டார்.

அந்த கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் டெல்லியில் இல்லை.

அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.

அமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?' என்பதுதான்.

அதற்கு இந்திரா மெல்லிய குரலில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலை அங்கு அமர்ந்திருந்த பிற அமைச்சர்களால் கேட்கவே முடியாத அளவுக்கு கட்டுப்பாடான குரலில் பதிலளித்தார் இந்திரா.

கூட்டத்தில் வேறு எந்த எதிர்கேள்வியும் எழுப்பப்படவில்லை, 'எமர்ஜென்சிக்கு அனுமதி கொடுக்கும் அமைச்சரவை கூட்டம் வெறும் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது' என்று 'த எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி' என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார்.

எமர்ஜென்சியை எதிர்த்து யாரும் சவால் விடவில்லை. சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை,

'When I imposed the Emergency Not Even a Dog breached'.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com