
காளிகாதேவி நீல நிறமுடையவள். பரந்து கிடக்கும் வானமும் – நீள்கடலும் நீல நிறம். அவ்வாறே எங்கும் நிறைபொருளாக விளங்கும் பராசக்தி இயற்கை அன்னையின் வடிவானவள். இயற்கைத் தாயை மூடிமறைப்பதற்கு என்ன இருக்கிறது? திக்குகளை ஆடையாக அணிந்துள்ள திகம்பரி என்பதால், அவள் மறைப்பு ஏதுமின்றி அந்த நிலையில் காட்சி தருகிறாள். வெட்டிய தலைகளை மாலையாகக் கோர்த்து அவள் அணிந்து கொண்டிருக்கிறாள். 'முண்டமாலினி' என்ற பெயர் அதனால்தான் வந்தது. பிள்ளைப் பருவத்திலிருந்து விருத்தாப்பிய தசை வரையில் நானா வயதுடையவர்களது தலைகளைக் கொண்டும் தொடுக்கப்பட்டது அந்த மாலை. ஜீவப்பிராணிகள் அனைத்தும் மூலப் பிரகிருதியினின்று தோன்றி, மீண்டும் அவளோடு மறைவதற்கு அந்த மாலை அறிகுறியாகும். துண்டித்த கைகளைச் சரமாகக் கோர்த்துக் காளிகாதேவி தன் இடுப்பில் அணிந்து கொண்டிருக்கிறாள். மக்கள் செய்யும் வினை அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் அவள் மட்டுமே என்பதைக் கைகளால் ஆக்கப்பட்ட சரம் காட்டுகிறது. தேவி ஒரு சம்ஹார மூர்த்தி என்பது கையில் உள்ள வாளாலும், நாவினின்று சொட்டும் ரத்ததாலும் தெளிவாகிறது. சித்தியெல்லாம் பெற்றாலும் மனிதனது துன்பத்துக்கு முடிவில்லை என்பதை ஞாபகமூட்டுவதற்காகவே காளிகாதேவி தனது இடது கரங்களில் ஒன்றில் வாளை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அது மனிதனின் துன்பம் போக்கும் வாளேயன்றி வேறல்ல.
எவன் ஒருவன் இயற்கைத் தாயை நல்வழியில் உபாசிக்கக் கற்றுக்
கொள்கிறானோ அவனுக்கு வாழ்வு இன்பகரமாக இருக்கும். தீயவழியில் போகிறவர்களை நல்வழிக்குப் பயமுறுத்தித் திருப்புகிறாள் தேவி. இரண்டும் அன்னையின் வடிவமே. தேவி தாண்டவமாடும் இடம் சுடுகாடு. மனிதன் தன் மனத்தை ஆசை, காமம், வெகுளி முதலியவற்றை அழித்து மாய்க்கும் சுடுகாடாக மாற்றிக் கொண்டால் அங்கே தேவியின் தாண்டவத்தைக் காணமுடியும்.