கடலை சாப்பிடும் கிளி

கடலை சாப்பிடும் கிளி
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

பிரைஸ் டே (Price Day )எழுதிய 'ஃபோர் ஓ கிளாக்' ( Four O' Clock ) என்ற சிறுகதையைப் படித்த போது சுஜாதா எழுதிய 'தேவன் வருகை' கதை ஞாபகத்துக்கு வந்தது.

சஸ்பென்ஸ் கதை வகையைச் சார்ந்த விஞ்ஞானச் சிறுகதை. என்ன செய்யப் போகிறார் என்பதை விட எப்பொழுது என்பதுதான் சுவாரசியம்.

பிரைஸ் டே எழுதிய கதையைக் கொஞ்சம் தமிழ்ப்படுத்தி சுருக்கியிருக்கிறேன். மூலக் கதையைக் கூகிளில் தேடிப் படித்துப்பாருங்கள். இனி கதை…

மேஜை மீது இருந்த டிஜிட்டல் கடிகாரம் 3:57.00 என்றது. சரியாக 4 மணிக்கு, அதாவது இன்னும் மூன்று நிமிடத்தில் அது நிகழப்போகிறது.

"நிறைய யோசித்தாகிவிட்டது … பலமுறை விவாதித்தும் விட்டோம் எனக்கு வேறு வழி தெரியவில்லை" தீர்மானமாக கடிகாரத்திலிருந்து கண்ணை எடுக்காமல்(ககஎ) சொன்ன போது, அவர் தலைக்கு மேல் கூட்டிலிருந்து எட்டிப்பார்த்த அந்த வயதான கிளி "கடலை" என்றது.

ககஎ, மேஜை மீது இருந்த கிண்ணத்திலிருந்து ஒரு வேர்க்கடலையை எடுத்து கையை உயர்த்திய போது கிளி அதைக் கவ்விக்கொண்டு, காலுக்கு அடியில் வைத்து மூக்கால் உடைத்துச் சாப்பிட்ட போது ஜன்னலுக்கு வெளியே வண்டிகளின் ஹார்ன் சத்தம், பள்ளிக்கூடம் விட்ட குழந்தைகள் போடும் கூச்சல், எங்கோ விமானம் போகும் சத்தத்துடன் கலந்து கேட்டது.

கடிகாரம் 3:57:30 என்றது.

"விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள்… எதுவும் இருக்கக் கூடாது… வெளியாளாக, கடவுள் போல் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்" என்று கிளியிடம் சொன்ன போது மணி 3:57.48. அவர் முகத்தில் பதட்டம் அதிகரித்தது.

"இன்னும் இரண்டு நிமிஷத்தில் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் உலகத்தில் உள்ள எல்லா கெட்டவர்களையும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் உயரத்தில் பாதியாகிவிடுவார்கள்!

பிக்பாக்கெட் அடிப்பவர்கள், திருடர்கள், பில் கட்டாமல் ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், கஞ்சன், கஞ்சா அடிப்பவர்கள், கொலை, ஊழல், கடத்தல், பெண்களைக் கிண்டல் செய்தவர்கள், சிகரெட் குடித்தவர்கள், வாய்தா கேட்டவர்கள், லஞ்சம் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள்…. நல்லவர்கள் போலச் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர்கள், சமூக ஊடகத்தில் பொய்யை பரப்புபவர்கள்… எல்லோருக்கும் … விதி ஒன்றுதான்… விதிகளை மீறியவர்கள்.. அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்"

கிளி "கடலை" என்றது.

"கெட்டவர்களை அடையாளம் காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருக்கிறது!" என்றவர் ஒரு கடலையைக் கொடுக்க கிளி பெற்றுக்கொண்டது. நேரம் 3.58.30

"யார் கெட்டவர்கள் என்பதை எப்படித் தீர்மானித்தேன் என்று நீங்கள் கேட்கலாம். ஒரே விதிதான். கெட்டவர்களின் செயலைப் பார்த்து ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தவர்கள்கூடக் கெட்டவர்கள்தான் என்பது என் விதி"

"முதலில் அவர்கள் நெற்றியில் ஊதா நிறத்தில் ஒரு குறி போடலாம் என்று நினைத்தேன் பிறகு இன்றைய டாட்டூ கலாசாரத்தில் அதையே ஃபேஷனாக கருதக்கூடும் என்று விட்டுவிட்டேன். கெட்டவர்கள் அழிய வேண்டும்"

"கெட்டவர்களின் உயரத்தைப் பெரிதாக்கிவிடலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் அதுவே அவர்களுக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும். வன்முறை மேலும் அதிகமாக ஆகும். எனக்கு வன்முறை பிடிக்காது. உயரத்தைப் பாதியாக்கினால் ? பல விஷயங்களை அவர்கள் செய்ய முடியாது. பேருந்து படிக்கட்டில்கூட ஏற முடியாது. தங்களுடைய சட்டை கால் வரை வரும் பாலுமகேந்திரா பட ஹீரோயின் மாதிரி …எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கும்" என்று புன்னகைத்தார்.

மணி சரியாக 3:59:01 என்று காட்டிய போது "கடலை" என்றது கிளி.

ககஎ கடலை ஒன்றை கொடுத்தார்.

"நீதிமன்றத்தில் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. விசாரணை நடக்கும் போது குற்றவாளியா என்று தீர்மானிக்கும் முன் குற்றவாளி என்றால் குள்ளமாகிவிடுவான். ஏன் நீதிபதி கூட குள்ளமாக வாய்ப்பு இருக்கிறது"

3:59.30 படபடப்பு உச்சிக்கு சென்றது.

"டாஸ்மாக் பின்புறம் உரிமம் இல்லாத பார், தெரியாமல் ஓடிடியில் A படம் பார்க்கும் கூட்டம், ஏன் கோயிலில் கூடப் பலர் குள்ளமாகப் போகிறார்கள்"

3:59.41 "கடலை". கொடுத்தார்.
.

"முதலில் இந்த நிகழ்வைச் செய்தித்தாள்கள், டிவி சேனல் … யாரும் நம்பமாட்டார்கள். அவர்கள் அலுவலகத்திலேயே பலர் குள்ளமாவார்கள். பிறகு அவர்களுக்கே கொஞ்சக் கொஞ்சமாகப் புரிய ஆரம்பிக்கும். கெட்டவர்களை அடையாளம் காண்பார்கள். என்னுடைய வடிவமைப்பு அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்"

3:59:52

"செய்தித்தாளுக்கு இது அருமையான கவர் ஸ்டோரி, அல்லது கடைசிப் பக்கத்திலாவது போடுவார்கள்.. யார் செய்தார்கள் என்று எனக்கும் கடலை சாப்பிடும் உனக்கும் மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் தெரியப் போவதில்லை… "

3:59:57 கடிகாரத்தின் ':' புள்ளிகள் கண் சிமிட்டிக்கொண்டு இருக்க…. இன்னும் இரண்டு நொடிகளில் அது நிகழப்போகிறது.

4:00:00 என்று கடிகாரம் காண்பித்த போது அந்தக் கணத்துக்குக் காத்துக்கொண்டு இருந்தவர் கண்களை மூடிக்கொண்டு மெதுவாக "இப்பொழுது" என்றார்.

"கடலை" என்றது கிளி

கடலையுடன் கையை உயர்த்திய போது முழங்கை சரியாக ஒன்றரை அடி சின்னதாக இருந்தது.

பிகு : நான் இந்தக் கதையை எழுதியிருந்தால், நான்கு மணிக்கு எந்த மாற்றமும் இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தார்கள் என்று முடித்திருப்பேன்.
இதில் ஓர் அறிவியல் உண்மை இருக்கிறது என்ன என்று யோசித்துப்பாருங்கள் !

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com