
படித்தவர் படிக்காதவர் என்றில்லாமல் அனைவரையும் ஈர்க்கும் ஒரு பொதுவான விஷயம் சினிமா. ஒரு கருத்தை மக்கள் மனதில் எளிதாகவும் வேகமாகவும் வேரூன்ற செய்ய சினிமாவை தவிர வேறு எந்த ஊடகத்தாலும் இயலாது. பக்கம் பக்கமாய் எழுதப்பட்ட கட்டுரைகள் செய்ய முடியாத மாயத்தை சினிமாவின் ஒரே ஒரு காட்சி செய்துவிடும். எனவே, தரமான சினிமாவை தேர்தெடுத்து பார்ப்பது நமக்கு பல வழிகளில் உதவக் கூடும். அந்த வகையில் சர்வதேச திரைப்படங்களில் சிறந்தவைகளை நமக்காக அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் திரு.சுரேஷ் கண்ணன் அவர்கள். குமுதத்தில் தொடராக வந்த இந்த கட்டுரைகளின் முதல் பாகம் தான் இது. இந்த பாகத்தில் மட்டும் முப்பத்திரண்டு திரைப்படங்களை அறிமுகப் படுத்துகிறார்.
ஆசிரியர் திரு. சுரேஷ் கண்ணன் அவர்களின் 'பிச்சைப்பாத்திரம்' என்ற வலைப்பூவை நான் முன்பெல்லாம் தொடர்ந்து வாசித்து வியந்ததுண்டு. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு OTT பிரபலமடையாத காலகட்டத்திலேயே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களை பற்றிய பதிவுகளை தனது வலைப்பூவில் பதிவு செய்திருப்பார். "எப்படி அவரால் இத்தனை படங்களின் DVDகளை கண்டுபிடித்து வாங்கி, அவைகளை பார்த்துவிட்டு உடனே வேகமாக அந்த படத்தை பற்றி பதிவையும் எழுத முடிகிறது" என்று வியந்திருக்கிறேன். இப்போது நாம் அவ்வளவு சிரமப் படவேண்டியதில்லை, இந்த புத்தகத்தை வாசித்துவிட்டு இதில் உள்ள திரைப்படங்களை OTTயில் பார்த்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த கட்டுரைகளின் எளிமையான மொழிநடையே சில சிக்கலான திரைக் கதைகளை கூட பார்க்கும் ஆவலை நமக்குள் ஏற்படுத்திவிடும்.
புத்தகத்தில் தென் கொரியா மற்றும் அமெரிக்க நாட்டுத் திரைப்படங்கள் அதிகம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சில ஐரோப்பிய நாடுகளின் படங்களும் இடையிடையே வருகின்றன. படங்களின் முடிவுகளை பொதுவாக கட்டுரையில் எழுதுவது தனக்கு உடன்பாடான செயலாய் தோன்றாத போதும் குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் அவைகளையும் பகிர வேண்டியதாய் இருந்தது என்று கூறுகிறார் ஆசிரியர் சுரேஷ் கண்ணன். எனக்கெல்லாம் சினிமாவை விட வாசிப்பதில் தான் அதிக ஈடுபாடு உண்டு. என்னைப் போன்ற பேர்வழிகள் சிலர் இருக்கக் கூடும், அவர்களுக்கு இந்த கட்டுரைகளே ஒரு சிறுகதை தரும் திருப்தியை தந்து விடுவதால் முடிவு
பகிரபடாமல் இருந்தால் மண்டையில் நண்டு குடையும், நல்ல காலம் கல்யாணராமன் சார் அந்த குறையை தீர்த்து விட்டார்.
படங்களுக்குள் நுழைந்தால் சுமார் முப்பத்தி இரண்டு படங்களை
அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவை எல்லாவற்றை பற்றியும் நான் இங்கு கூறப்போவதில்லை, நீங்கள் வாசித்து தெரிந்து கொள்ளலாம். எனக்கு பிடித்தவைகளை பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். இதில் பகிரப்பட்ட படங்களில் இரண்டை மட்டுமே எனக்கு தெரிந்திருந்தது. ஒன்று "Chef(செஃப்)", இந்த திரைப்படத்தை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். காய்களை அந்த செஃப் நறுக்கும் போதே நமக்கு நாவில் நீர் ஊறத் தொடங்கிவிடும். பிறகு அவர் சமைக்கும் போது அந்த வாசம் நம் வீட்டிற்குள்ளும் பரவுவதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் சிறப்பான படமது. மற்றொன்று "wolf totem", இந்த திரைப்படம் ஜியாங் ரோங்கால் எழுதப்பட்டு சி. மோகன் அவர்கள் மொழி பெயர்த்த "ஓநாய் குலச்சின்னம்" என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது தெரியும். அந்த புத்தகத்தின் மேல் இருந்த ஈர்ப்பினால் அதை பற்றி இணையத்தில் தேடிய போது தான் அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியும் என்றாலும் இன்னும் பார்க்கவில்லை. ஆசிரியர் எழுதி இருப்பதை படிக்கும் போது நாவலைத் தாண்டி கூடுதலாய் நிறைய விஷயங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாய் தெரிகிறது. ஏற்கெனவே அந்த நாவலை அதிகம் பிடிக்கும், இந்த கட்டுரை மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுவதால் உடனேயே திரைப்படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
"கஜினி தாத்தா" என்கிற தலைப்பில் இருந்த Remember திரைப்படம் பல எதிர்ப்பாராத திருப்பங்களுடன் இரண்டாம் உலக போரின் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது, சமீப நாட்களாய் இந்த விஷயத்தை பற்றி பல உண்மைகளை அறிந்து கொள்ள நேர்ந்தது இந்த திரைப்படம் மேலும் பல தகவல்களை தரும் விதத்தில் அமைந்திருக்க கூடும் என்பதால் இதையும் பார்த்துவிட வேண்டியதுதான். ஆனால், இந்த படத்தின் முடிவுதான் இதில் மிக பெரிய திருப்பமே. அதை பகிராமல் விட்டால்தான் வாசகர்கள் படத்தை அவசியம் பார்ப்பார்கள். எனினும் ஆசிரியர் வேறு வழியில்லாமல் அதை பகிர்ந்திருக்கிறார். "சல்லியின் சாகசம்" ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், நல்லது செய்தால்கூட விசாரணையில் சிக்கி கஷ்டப்பட நேரலாம் என்று தோன்ற வைத்த படம். "சின்னஞ்சிறு மணமகள்", நம் ஊரின் காதல் கதைகளையே பார்த்து பழகிய நமக்கு ஒரு வித்யாசமான அனுபவத்தை தரக்கூடும். "புலி வேட்டை" நம் கானகன் நாவல் சாயலில் உள்ள ஒரு கதை. எது முதலில் வந்தது என்று யோசிக்க வேண்டியுள்ளது. "கடவுளின் தூதரும் கழிப்பறையும்" நம்ம ஊர் ஜோக்கர் படத்தை போல இருக்கும் என்று கூறுகிறார் ஆசிரியர். எனினும் ஆவலை கிளப்பும் ஒரு வித்தியாசமான கதை. "சிறுமியும் வன்முறையும்" மனதை பாதிக்கும் ஒரு திரைக்கதையை கொண்ட படம், தற்போது தமிழ் சினிமாவிலும் இதை போன்ற படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை.
ஆசிரியரின் பரிந்துரைகள் எல்லாமே மிக வித்தியாசமான கதைகளாக இருந்தன. இன்று OTTயில் கொட்டிக்கிடக்கும் படங்களில் "எதை பார்க்கலாம்" என்று நாம் குழம்பத் தேவையில்லாமல் ஆசிரியர் பரிந்துரைக்கும் படங்களை தினம் ஒன்றாக பார்த்தாலே போதும். அப்புறம் நாங்கள் வேறு வேலை வெட்டி செய்ய வேண்டாமா என்றெல்லாம் கேள்வி கேட்டுவிடாதீர்கள். இது சினிமா காதலர்களுக்கான பரிந்துரைகள். உலகில் நம்மை சுற்றி எவ்வளவோ நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படங்கள் அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தும் சின்ன கண்ணிகள் அவ்வளவே…! சினிமா ஒரு கனவு தொழிற்சாலை என்பது நிஜம்தான். காணும் அத்தனை கண்களிலும் கனவை விதைத்து விடுகிறது. அந்த கனவுக்கு மேலும் வண்ணம் சேர்கிறார் ஆசிரியர். சுவாசம் பதிப்பகம் இந்த புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். அட்டைப்படம் உள் இருக்கும் கட்டுரைகளுக்கு பொருத்தமாக இருப்பது கூடுதல் சிறப்பு. சினிமா காதலர்களுக்கு இந்த புத்தகம் அறுசுவை விருந்தளிக்கும், அவசியம் வாசிக்கலாம்…!