சித்திரைப் பூக்கள்

சித்திரைப் பூக்கள்
Published on

ராமன்                                         

ட்டிப் பார்க்கும் லேசான வெளிச்சமும், விலகிக் கொண்டிருந்த இருளும், ஒன்றையொன்று பிரிய தயாராகிக் கொண்டிருந்த விடியற்காலை நேரம்.

வாட்டசாட்டமான உடற்கட்டு, பரந்து விரிந்த மார்பு, மலைக்குன்று போன்ற தினவெடுத்த தோள்கள், குன்றிலிருந்து, முழங்கால் வரை நீண்ட கைகளில், எஃகு கம்பியாக இறங்கி ஓடிய நரம்பு கம்பிகள், பரந்து விரிந்த நெற்றியில் அளவெடுத்தாற்போல் மூன்று கற்றைகளாக இடப்பட்ட விபூதி, முறுக்கிய மீசை சகிதம் தோன்றிய மலையப்பன், வீட்டிற்குள்ளிருந்து வெளிப்பட்டு, தோட்டத்திற்குள் நுழைந்தார். அவர் வருகையை கட்டியம் கூறும் விதமாக, 'வேலன்' என்ற அவருடைய நாட்டு நாய், முன்னே சென்றது.

ஒவ்வொரு மரம், செடிகள் முன் நின்று, 'சௌக்கியமா… வசதிக்கு ஏதாவது குறை இருக்கா…?' என்று விருந்தினர்களை உபசரிப்பதுபோல் விசாரித்துக் கொண்டிருந்தவரை, வேலனின் மெல்லிய குரைப்பால், தன் பக்கம் ஈர்த்தான்.

அவன் காட்டிய பக்கம், சூரிய வெளிச்சம் போதாமல், ஒரு செடி தன் தலையை கவிழ்த்து, சாய்ந்து நின்றது.

செடியையும், வேலனையும் தடவிக் கொடுத்தவர், 'வெளிச்சம் வர்ற இடத்துக்கு இவரை மாத்திடலாம்'..என்று சொன்னவுடன், வேலன் தன் வாலை ஆட்டி ஆமோதித்தது.

மூன்று நாட்களுக்கு முன் தெளித்த சில விதைகள், லேசான கோடை மழையில் குப்பென்று முளைவிட்டு, அவை, பூமித்தாயின் கருப்பையிலிருந்து வெளிப்படும் பச்சை குழந்தைகளாக அவருக்கு தெரிந்தன.

"என்னை நம்பி வெளியே வந்துட்டீங்க. உங்களை பாசத்தோடு பராமரித்து, பெரிய புள்ளைங்களா வளர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு"… அவைகளை கைகளால் தொடாமல், அருகில் சென்று, வாய்விட்டு பேசி, வாக்குறுதி கொடுத்தார்.  வீட்டில் குழந்தை பிறந்தது போன்ற ஆனந்தத்தில் அவர் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அவைகளை அன்போடு வரவேற்கும் விதமாக, தண்ணீரை கையில் அள்ளி, பன்னீர் தெளிப்பது போல், அவைகள் மீது லேசாக தெளித்தார்.

தாவரங்களுக்கும் அன்பும், பாசமும் கலந்த அரவணைப்பு தேவை. ஒரு செடியை கிள்ளிப்போடுபவரை விட, அதற்கு தண்ணீர் ஊற்றி, அரவணைப்பவரிடம், நட்பு உணர்வை வெளிப்படுத்தும் குணம் செடிகளுக்கு உண்டு என்பது அவருக்கு தெரியும். 'வேம்பு' என்று தன் மகனின் பெயரை உரக்க உச்சரிக்கும்போதெல்லாம், அவர் வீட்டின் பிரமாண்ட  வேப்பமரமும் பதில் சொல்லுவதுபோல் அசைந்தாடுவதை கண்குளிர பார்த்து ரசிப்பார்.

"மரம், செடி, கொடிகள் வெறும் ஜடப்பொருள்கள் அல்ல; சந்தோஷம், துக்கம், பீதி போன்ற உணர்வுகள் அவைகளுக்கும் உண்டு" என்ற ஆழ்ந்த நம்பிக்கையில், அவைகளின் மீதான அவருடைய காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

சமீபத்தில், வீட்டு தோட்டத்தில் ஒரு மரம் இடி விழுந்து பட்டுப்போனபோது, வீட்டில் சாவு விழுந்ததுபோல், அழுது புலம்பி, ஒரு நாள் முழுவதும், சாப்பிடாமல் துடித்துப்போனார். மரத்தை பிளக்காமல் அப்படியே மண்ணில் குழிதோண்டி புதைத்து, தன் இறுதி மரியாதையை அதற்கு செலுத்தினார். அதற்கு ஈடாகத்தான் பல மரங்களுக்கு வித்திட்டார்.

சோகத்தையும், சந்தோஷத்தையும் அவர் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தபோதுதான், அந்த குரல் அவர் காதை பிளந்தது. குரல் வந்த திசையை நோக்கி பார்வையை செலுத்தினார்.

"உங்க வீட்டு வேப்ப மரம், எங்க வீட்டு சுவத்தை இடிச்சு நிக்குது. சுவர் பிளவு பட்டுதுன்னா நீங்கதான் கட்டிக்கொடுக்கணும். காய்ந்த இலை தழைகள் எங்க வீட்டு பக்கம் விழுந்து, அசிங்கமாகுது.  ஒன்னு… நீங்களா மரத்தை முழுசா வெட்டி சாய்க்கணும்… இல்லைன்னா, என்னோட கூர் தீட்டின கோடாரிக்கும், அரிவாளுக்கும் வேலை வந்துடும்…அந்த வேலைக்கான கூலியையும் கறந்துடுவேன்…ஆமாம் சொல்லிப்புட்டேன்"…….பக்கத்து வீட்டு சோலை, மலையப்பன் காதில் விழவேண்டும் என்ற நோக்கத்தில் வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டாக  கத்திவிட்டு, வீட்டிற்குள் வேகமாக சென்றார்.

சத்தம் கேட்டு, வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்த மலையப்பனின் மனைவி பார்வதி, கைகளை புடைவை தலைப்பில் துடைத்தபடியே, ஓட்டமும், நடையுமாக தோட்டதிற்கு வந்தாள். உள்ளே சென்றவர் திரும்ப வருவாரா என்று எதிர்பார்த்து, மலையப்பனின் கோப பார்வை பக்கத்து வீட்டு வாயிலையே குத்திட்டு நின்று கொண்டிருந்ததை கவனித்து, அதிர்ந்து போனாள்.

"வேண்டாங்க…வாயை விட்டுடாதீங்க…பெரிய சண்டையாயிடும். சுவர் இடிஞ்சுடக்கூடாதுங்கற நினைப்பிலே சொல்லியிருப்பார் போல… " தயங்கியபடியே பேசிய பார்வதிக்கு மகன் பற்றிய இன்னொரு பிரச்னையும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. பிரச்னையை எப்படியாவது அவன் மனம் கோணாதபடி தீர்த்து வைப்பதாக நேற்றுதான் வாக்கு கொடுத்திருந்தாள்.

"என்னை வெட்டி போடறேன்னு சொல்லியிருந்தா கூட நான் பொறுத்துக்கிட்டு இருப்பேன். ஆனால், நெடுங்காலமா வளர்ந்து, குடும்பத்தில் ஒருத்தர் போல நிக்கிற, வேம்புன்னு நான் செல்லமா கூப்பிட்டு நேசிக்கிற,  இந்த வேப்ப மரத்தை வெட்டிடுவேன்னு சொன்னதுதான் எனக்கு சோகமா இருக்கு. நம்ம வீடு, பக்கத்து வீடுன்னு பிரிச்சுப் பார்க்காம, எல்லோருக்கும்தானே அது நிழலையும், காற்றையும் கொடுக்குது. அந்த நன்றி கூட இல்லாம இவ்வளவு கொடுமை பேச்சு பேசறாரு"… புலம்பியபடியே, அந்த மரத்தை கட்டி, முத்தமிட்டார்.

"பொழுது சாயும் நேரத்தில், பறவைகள் எல்லாம், தங்கள் சொந்த வீடு மாதிரி, தப்பாம வந்து இந்த மரத்திலேதான் தங்குதுங்க. புதுசு, புதுசா, வேற இடத்தில் இருக்கிற மத்த பறவைகளையும் கூட்டிக்கிட்டு வர்றதை நான் பார்த்திருக்கேன். நேத்து கூட, நாலு கிளிங்க, மரத்திலே, புதுசா குடியேறி, கீச்…கீச்ன்னு சந்தோஷமா ஜோடியா கத்திச்சுங்க"…

'ஊரில் யார் மேல மாரியாத்தா குடிகொண்டாலும், இந்த மரத்திலிருந்துதான் தழைகளை உருவிக்கிட்டுப் போவாங்க. சுற்று வட்டாரத்தில், எந்த இடத்தில் அம்மன் திருவிழான்னாலும், தீ மிதிப்புன்னாலும், இவளோட தழைகள் இல்லாம அந்த விழா நிறைவு பெறாதே!" அவளைப் போய், வெட்டறேன்…குத்தறேன்னு வாய் கூசாம பேசறாரு"…மலையப்பனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியதை பார்வதி கவனித்தாள்.

அவருடைய கம்பீர தோற்றத்திற்குள் ஒளிந்திருந்த கருணை, கண்ணீராக வெளிப்பட்டதும் அதிர்ந்து போனாள்.

"அவர் கெடக்காரு… விவரம் தெரியாத ஆளு.  ஊரில், மரம் இல்லாத இடங்களில் எல்லாம் புதுசா மரக்கன்றுகளை நட்டுக்கிட்டு வருவதை, ஒரு விரதமா வச்சுருக்கிற உங்களிடம் மரத்தை வெட்டச்சொல்லி மிரட்டறாரே!" அப்படி வெட்ட விட்டுடுவமா?" நீங்க உள்ளே வாங்க"… மனைவி பார்வதி கணவன் மலையப்பனை சமாதானம் செய்து, வீட்டிற்குள் அழைத்துப் போனாள்.

பசுமையின் மீது தீராத காதல் கொண்ட மலையப்பன், காதலுக்கு எதிரி.  குடும்பத்தை பகைத்துக்கொண்டு, காதலித்தவனுடன் ஓடிப்போன அவருடைய சகோதரியின் வாழ்க்கை சோபிக்கவில்லை. அதுதான், அவருடைய காதல் எதிர்ப்புக்கு காரணம். வரதட்சணை கொடுமையில் இறந்துபோன அக்கா மகளை நினைத்து அவர் அடிக்கடி வருந்துருவார். அந்த வலியில், ' வரதட்சணை கேட்பது தவறு, கொடுப்பதும் தவறுன்னு' அடிக்கடி சொல்லுவார்.  தெரிந்தவர்கள் யாருக்காவது காதல் கல்யாணம் என்றால், அந்த கல்யாணத்திற்கு போவதை தவிர்ப்பார்.

மறுநாள் பௌர்ணமி. முழு நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து, சுற்றம், சூழல் சகிதம் நிலாச் சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லோரும் சாப்பிட்டு எழுந்து போனபிறகு, கணவனும், மனைவியும் தனியாக இருந்தனர். முழுநிலா வெளிச்சம் என்றால், மலையப்பனுக்கு கொள்ளை ஆசை. மனைவியின் மடியில் படுத்து, நிலா வெளிச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

"ஒரு பௌர்ணமி அன்னைக்குத்தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு. விளையாட்டுப்போல, முப்பது வருஷம் எட்டப்போவுது"… பழைய நினைவுகளை அசை போட்டார் மலையப்பன்.

"ஆமாங்க…கல்யாணத்தப்ப உங்களுக்கு இருபது வயசு. வயசு ஏறினாலும், காளையை அடக்கி, கல்யாணத்திற்கு பெண் கேட்ட, அன்னைக்கு இருந்த கம்பீரம் அப்படியேத்தான் இருக்கு. காளை அடக்கு விழாவில் பரிசாக கொடுத்த உங்க உருவ ஓவியத்தை எங்கிட்டே காட்டினாங்க… அந்த கம்பீரத்தை பார்த்து மயங்கிட்டேங்க.." தலையை குனிந்து மனைவி வெட்கப்பட்டதை, நிலா வெளிச்சத்தில் அவர் வெகுவாக ரசித்தார்.

"இப்ப அந்த படம் எங்கே இருக்கு….?"குனிந்த தலையை சேலாக நிமிர்த்தி செல்லமாக கேட்டார்.

"புதுசு பண்றதா சொல்லி, வேம்பு எடுத்துக்கிட்டு போயிருக்கான்…"

"20 இல்லைன்னாலும், 25லேயாவது நம்ம பையனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுக்க வேணாமா?" வாய்ப்பை பயன்படுத்தி, மெதுவாக அடித்தளம் போட ஆரம்பித்தாள்.

"நான் என்னமோ வேண்டாம்னு சொல்ற மாதிரியில்ல பேசற…"- மலையப்பன் எழுந்து உட்கார்ந்தார்.

"நான் அப்படி சொல்லலைங்க. நம்ம மகன் வேம்புவுக்கு கல்யாண வயசு வந்துடுச்சு. சுபகாரியத்தை சட்டு, புட்டுன்னு முடிக்கணுங்க"… தைரியத்தை துணைக்கு அழைத்து, பார்வதி பேச்சை ஆரம்பித்தாள்.

"பொண்ணை பார்த்து வச்சுருக்காப்பல சொல்றியே!" மனைவியை ஆச்சரியத்துடன் கேட்டார் மலையப்பன்.

"ஆமாங்க… பொண்ணு ரெடிங்க. ஒரு வாரம் முன்னாலதான், வேம்பு எங்கிட்டே சொன்னான். அன்னையிலிருந்து உங்ககிட்டே அதைப்பத்தி பேசணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். முழு வளர்பிறையிலே பேசறது நல்லதுன்னு இன்னைக்கு சொன்னேன்"..

"என்னது பொண்ணு ரெடியா…என்ன பார்வதி சொல்றே..?" நான் இல்லாதபோது, யாராவது வீட்டுக்கு வந்து விவரம் கேட்டாங்களா…?"

பக்கத்து வீட்டு சோலையின் பொண்ணு மீனாதாங்க… சென்னையில,  கம்ப்யூட்டர் கம்பெனியில் ஒன்னா வேலை செய்யற ரெண்டும் ஒண்ணை ஒண்ணு…விரும்பிடுச்சு!"

விருப்பம், சோலைமலை என்றதும் அவர் முகத்தில், ரத்தம் ஓட்டம் அதிகமாகியது. "அவன் பச்சை மரங்களை வெட்டி, அதை வியாபாரம் பண்ணுகிறவன்.  நாம சுவாசிக்கிற காற்றை கொடுக்கிற மரத்தை, பாவ புண்ணியம் பார்க்காம வெட்டுறவன், பொண்டாட்டி, பிள்ளையை கூட வெட்ட தயங்கமாட்டான்.  இதை நான் ஒத்துக்கமாட்டேன். அதுவும், இது ஏதோ காதல் மாதிரி தெரியுதே..?"

"இந்த விஷயம் மீனாவோட அப்பாவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.  நாம அவரிடம் பேசிப்பார்க்கலாமுங்க."

"அரிவாள் பிடிச்ச கையை அடக்கவே முடியாது. மரத்தை வெட்டாம ரோடு போடமுடியும்னாலும், பத்து மரத்தையாவது வெட்டியாகணும்னு ஊர் பஞ்சாயத்தில் விவகாரம் பண்ணி, அவனே அதை வியாபாரத்திற்காக வெட்டுவான். அவனால் அக்கம், பக்க ஊர்களில் இன்னும் எத்தனை மரங்கள் பலியாகப்போகுதோ தெரியலை. அவங்க ஜாதிக்கும் நமக்கு ஒத்து வராது. வேற நல்ல இடத்தில் பொண்ணு பார்க்கலாம்"…சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டார் மலையப்பன்.

••• ••• •••

றுநாள் காலையில் வீட்டு வாசலில் வந்து நின்ற சோலையை பார்த்து அவர் திடுக்கிட்டார். 'மரத்தை இன்னைக்கே வெட்டணும்னு சொல்ல வந்திருப்பானோ..?" கசாப்பு கடைக்காரரை பார்த்த ஆடு மாதிரி உள்ளுக்குள் மிரண்டார்.

"வெளியே நிக்கறீங்க…வீட்டுக்குள்ளாற வாங்க…"வீட்டுக்கு வந்த விரோதியை கூட உபசரிக்கும் பண்பாடு அவர் குரலில் வெளிப்பட்டது. குரல் கேட்டு பார்வதியும் அங்கு வந்தாள்.

"என்னோட ஒரே மகள் மீனா, உங்க மகனை விரும்பறதா நேத்து ராத்திரிதான் எங்கிட்டே சொன்னா…அதைப் பற்றி பேசிட்டு போகலாம்னுதான்…" தயக்கத்துடன் நேரடியாக சோலை பேச ஆரம்பித்ததும், மலை கலக்கமாகி, பார்வதியை பார்த்தார்.

"வேண்டாங்க…காதல், அது, இதுன்னு,…எங்க குடும்பத்துக்கு சரியா வராது"…நேரடியாக பதில் சொன்னார் மலை.

"கட்டினா, வேம்புவைத்தான் கட்டிப்பேன். இல்லைன்னா, கல்யாணமே வேண்டாம்னு உறுதியா சொல்றா. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு.  படிச்சவ, சரியாத்தான் முடிவு பண்ணியிருப்பா. சீர் வரிசையா, நீங்க எது கேட்டாலும் கொடுக்கத் தயாரா இருக்கேன்"…

"எனக்கு நீங்க சொல்ற எதுவும் பிடிக்கலை… வேண்டாங்க… இந்த பேச்சை இதோட விட்டுடுங்க…" எழுந்திருக்க தயாரானார் மலை.

"நீங்க மனதாற நேசிக்கிற மரத்தை வெட்டுறேன்னு என்னோட அப்பா சொன்னதில் உங்களுக்கு கோபம் இருக்கலாம் மாமா. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இந்த வேப்ப மரத்தை வெட்டமாட்டேன்னு என்னோட அப்பாவை இப்பொழுதே, கம்பீரமா உட்கார்ந்திருக்கிற உங்க உருவத்தின் மீது கை வைத்து சத்தியம்  பண்ணச் சொல்றேன்".. எதிர்பாராமல், மின்னலாக அங்கு வந்த சோலையின் மகள் மீனாவின் கையிலிருந்த ஓவியத்தை பார்த்து திகைத்து நின்றார் மலையப்பன்.

"முப்பது வருஷத்திற்கு முன்னால, காளை அடக்கு விழாவில எனக்கு கொடுத்த ஓவியம் உங்கிட்டே எப்படி…?"

"வேம்புவிடம் இருந்த புகைப்படத்திலிருந்து பிரிண்ட் எடுத்து, பிரபல ஓவியரிடம் கொடுத்து வரைஞ்சதுங்க.."

"என் ஒரே மகளின் காதலுக்காக, மரங்கள் வெட்டுவதையே இனிமேல் விட்டுடறேன் சம்பந்தி. இது சத்தியம். அதையே நான் என் பெண்ணுக்கு கொடுக்கற சீதனமா வச்சுக்கோங்க. அத்தோட, இனிமேல் என் வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் ஒரு மரக்கன்று நடுவதா உறுதி அளிக்கிறேன்…"  ஓவியத்தின் மீது கை வைத்து சத்தியம் செய்து, தன் மகள் சொன்னதற்கு பல படி மேலே போனார் சோலை. மகள் மீதான பாசம் அந்த சத்தியத்தில் வெளிப்பட்டு, அதற்கு, மேலும் உண்மை கூட்டியது.

மலையப்பனின் பசுமை காதல், பல வருடங்களாக கடைபிடித்த காதலுக்கு எதிரான கொள்கைகளையும், ஜாதி பேதங்களையும் வெட்டி எறிந்து,  அந்த காதல் கல்யாணத்திற்கு பச்சை கொடி காட்டியது.

"கொள்கைகளை விட்டுக்கொடுத்து, என் மகன் கல்யாண சீதனமா, உனக்கு நீண்ட ஆயுளை வாங்கிட்டேன்"…சின்ன குழந்தை போல், வேம்பின் கிளையை பிடித்து சந்தோஷ கூச்சலிட்டார் மலையப்பன்.

தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்து வந்த நிரபராதிபோல், புதிதாக பூத்திருந்த சித்திரைப் பூக்களை அவர் தலை மீதும், ஓவியத்தின் மீதும் தூவி, வேம்பு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com