‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா எப்படி?
– எம்.சண்முகம், எடப்பாடி

! ஒரு விளையாட்டுப் போட்டியின் உள்ளடக்கத்தை உள்வாங்கிப் பெரும் நிகழ்வாக்கிக் காட்டுவது எப்படி என்பதை  தொடக்க நிகழ்வுகள் காட்டின. சதுரங்கப் போட்டியின் விதிகளையும் நுட்பங்களையும் உள்வாங்கிய கலை நிகழ்ச்சிகளோடு, நிகழிடத்தின் பண்பாட்டுத் தொகுதிகளையும் உலகத்திற்குச் சொல்லும் வாய்ப்புகளைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது அருமையான விஷயம்  காட்சிகளையும் அழகியலையும் கொண்ட திட்டமிடல். கைவசமாகிப்போன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன்  வெளிப்படுத்துவதிலும் இருக்கவேண்டிய மேலாண்மையை நிகழ்வுகள் துல்லியமாகக் காட்டின. இந்தியா என்றால் டில்லி, மும்பை என்று மட்டுமே அறிந்திருந்த பல வெளிநாட்டவருக்கு தமிழ்நாட்டை அறிய தமிழர் பெருமையை உணர்த்திய உன்னதமான நிகழ்வு

? செவாலியே விருது பெற்ற காலச்சுவடு கண்ணன் பற்றி…?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

நடிகர் திலகத்தைப் போலவே பதிப்புத் திலகம் கண்ணனும் இந்த விருதிற்கு முற்றிலும் உரியவர். நட்புடன் பழகுபவர்.நேரடியாக பேசுபவர்.

செயல் வீரர். பல ஆண்டுகளாக புத்தக வெளியீட்டிலும் காலச்சுவடு அச்சு இதழிலும் இயங்குபவர்!

தொடர்ச்சியாக  இலக்கிய இதழ்களை வெளியிட்டு, புதிய குரல்களையும் மாற்று சிந்தனைகளையும் அறிமுகம் செய்தவர். உலகெங்கும் எங்கு புத்தகச் சந்தை நடந்தாலும் அரங்கு அமைத்து தமிழுக்கு தோரணம் கட்டியது…

"காலச்சுவடில் வெளியிட்டிருக்கிறார்களா?! நிச்சயம் நல்ல புத்தகமாகத்தான் இருக்கும்" என்னும் நம்பிக்கையை மூன்று தசாப்தங்களாக தந்துகொண்டிருபவர்.  பத்திரிகையாளர்களின் நண்பர்.

?  'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து வெளியான முதல் பாடல் எப்படி?
– அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை

கவிஞர்களை, திரைப்படப் பாடல் எழுதும்படி கூறுவது, வானில் சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளுக்கு எல்லை வகுத்து, ஒரு கூண்டுக்குள் திரிய விடுவது போன்றது. வந்தியத்தேவனின் பொன்னி நதி நோக்கிய பயணத்தை அழகுற விவரிக்கும், 'பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர்  இளங்கோ கிருஷ்ணன். பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் குரலில் பாடல் மிகவும் இனிமை. சோழ வரலாற்றுப் பெருமைகளை, இலக்கியத் தமிழிலும், வழக்குத் தமிழிலுமாகக் கலந்து, சந்தத்துக்கேற்ப அழகாக எழுதியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

'அந்த மொழி சோழர்காலத்து மொழியா' என்ற குரல் எழுந்திருக்கிறது. 'பொன்னி நதி' பாடல் 'சோழர் காலத்துப் பாடல் போலவே இல்லை' என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். சோழர் கால இசை எவ்வாறு இருந்தது என்பதும் நமக்குத் தெரியாது. மேலும் சினிமா இசை என்பதே தற்கால இசைதான். அதில் பழைமையின் தடங்களைக் கொண்டு வர முடியுமே தவிர, அசல் பழைமையை கொண்டு வந்து நிறுத்துவது இயலாத காரியம்.

? சதுரங்க மேடையில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அதிக நெருக்கம் காட்டியது போல் தோன்றியதே…?
 – டாக்டர். இரா. அருண்குமார்,  புதுச்சேரி – 605001

ஒரு மாநில முதல்வரும், நாட்டின் பிரதமரும் ஒரு சர்வதேச விழாவில் அருகில அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் கூட அரசியலைக் கண்டுபிடிக்கும் திறமையுள்ளவன் தமிழன்.

'மக்களுக்காக கண்ணகி போல் நியாயம் கேட்டு வருவேன்' என்கிறாரே பிரேமலதா?
– ச. இராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம்

புரியவில்லை…  கண்ணகி  மக்களுக்காகவா நியாயம் கேட்டார்?  சரி… யாரிடம் போய்  என்ன நியாயம் கேட்கப்போகிறார்?

? "தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இனி காலையும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும்" என்ற அறிவிப்பு பற்றி…?
– எம்.பானுமதி, கெங்கராம்பாளையம்

மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு. எண்ணற்ற கிராமப் பள்ளி குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். சில ஆண்டுகளில் பல மாநிலங்கள் பின்பற்றப் போகும்  ஒரு முன்னோடி திட்டம்.

"இந்தியா்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேமித்துள்ள பணம் அனைத்தையும் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது" என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பற்றி…
– எம். நிர்மலா, வாணரப்பேட்டை

சரி கருதவில்லை. இவர்கள் அப்படி கருதி அந்த நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்ற பட்டியல் என்னவாயிற்று? அதனை மீட்டு அந்த பணத்தைப் பதுக்கியவர்களை தண்டிக்கபோவது எப்போது  என்று சொல்லாமே?

"குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பையில் பணமே இருக்காது" என்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பேசியிருக்கிறாரே?
– கரிசல்புரி பாலமுருகன்,  பெருநாழி

"மாநில கவர்னர்கள் இப்படி ஏதாவது அரசியல் பேசி குழப்பத்தை உண்டுபண்ன வேண்டும் என்பது மேலிட கட்டலையாகயிருக்குமோ" என்ற சந்தேகம் எழுகிறது.

ராஜஸ்தானி, மார்வாரி மற்றும் குஜராத்தி  சமூகத்தினரால் மகாராஷ்டிரா மட்டுமல்ல நேபாளம், மொரீசியஸ் என நிறைய நாடுகளும் பயன் பெறுவதாக அவர்  புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுவல்ல பிரச்னை. ஆனால்,  "இவர்கள்தான் மும்பையில் பணம்" என்று சொல்லியதுதான் தவறு.  கடின உழைப்பாளிகளான மராட்டியர்களின் பங்கு அந்த  மாநில வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.  அவர்களை  ஆளுநர் கோஷியாரி அவமதித்துவிட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார். ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று சிவ சேனா கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். வலியப்போய் வாங்கிக்கொண்டு வம்பு என்பது இதுதான்.

? 'மேற்கு வங்க  ஆசிரியர் நியமனத்தில் ஊழல்' என்ற அதிர்ச்சி தகவல் வருகிறதே?
எஸ்.மோகன், கோவில்பட்டி

"கல்வித்துறையில் லஞ்சம் என்பதில் எந்த மாநிலமும் விதிவிலக்கு இல்லையோ" என்ற அச்சத்தையும் "நம் கல்வித்துறை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?" என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் இப்போது தொழில் துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டஜி முன்பு கல்வி துறை அமைச்சராக இருந்தபோது பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனத்திற்கு எக்கச்சக்கமாக லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்திருக்கிறது.  பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டவரின் வீட்டிலிருந்து 20 கோடி ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியது. பணம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கிறது.  'இவ்வளவு பணம் கொடுத்து ஆசிரியர் வேலை பெறும் இவர்களிடன் என்ன ஒழுக்கத்தையும் திறமையும் எதிர்பார்க்க முடியும்?  இவர்களிடமா நாம் மாணவர்களை ஒப்படைக்கிறோம். யார் இதை எப்போது திருத்துவது?

தனுஷின் ஹாலிவுட் பட  நுழைவு  எப்படி?
– ரஞ்சினிப்ரியன், ஈரோடு

கமலின்  எல்லாப் படங்களிலும்  கிளைமேஸ்ஸில் வந்து போகும்  பொன்னம்பலம் என்ற ஸ்ட்ண்ட் நடிகரைப் போல வந்துபோகிறார். இதற்கு இங்கேயே இன்னொரு  படத்தில்  ஹீரோவாக வந்து பத்துப்பேர்களை அடித்து பறக்க விட்டிருக்கலாம்.

? கொச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்டாலின்  மிக கடுமையாக மத்திய அரசை  தாக்கியிருக்கிறாரே?
– ஏ.எஸ். ராஜேந்திரன், விருதுநகர்

மிகத் தெளிவாக மாநில உரிமைகளை எப்படி மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. பறிக்க நினைக்கிறது என்பதை விளக்க முயற்சி செய்திருக்கிறார். முதல் நாள் பாராட்டிய பிரதமரை மறுநாள் இப்படி நேரடியாகத் தாக்க தனித்துணிவு வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com