என் புகழ் பாட அனுமதியில்லை

என் புகழ் பாட அனுமதியில்லை
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? "சட்டமன்றத்தில் என் புகழ் பாட அனுமதியில்லை. அப்படி யாராவது செய்தால் கண்டிக்கப்படுவர்" என்று முதல்வர்  ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?
– வெற்றி செல்வி திருமாறன், திருச்சி

! சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தில் அப்படிச் சொன்னது பதிவாகியிருக்கிறது. ஆனால், அண்மையில் பள்ளித்துறை அமைச்சர் பேசியிருப்பதை பாருங்கள்.  மேலும், இந்த விதி மற்றவர்களுக்கு பொருந்தாது என்பதை உதயநிதி நடித்த படங்களின் மூலமாகவே அவர்  புகழ் பாடி  ஒரு அமைச்சர் நிரூபிக்கிறார்.

"ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆனால், நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த படம் 'கெத்து'. நீங்கள்தான் தமிழகத்தின் 'சொத்து'. எதிரிகளை தனது சிரிப்பால் 'நண்பேண்டா' என்று சொல்ல வைக்கும் நீங்கள், உங்கள் நடிப்பில் உருவானதோ 'மனிதன்', நிஜத்தில் நீங்கள்தான் 'மாமனிதன்' " என்று அமைச்சர் பி.மூர்த்தி தன் பங்குக்கு உதயநிதிக்கு புகழுரை பாடினார்.
மெல்ல  அம்மா தி.மு.க. பாதைக்கு மாறிக்கொண்டிருக்கிறது
கலைஞர் தி.மு.க.

? இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்கிறாரே உத்திரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத்?
– விஸ்வநாதன், சென்னை

! சொல்லியிருப்பவர் பா.ஜ.க. ஆளும் , உத்திரப்பிரதேச அரசின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த   மீன்வளத்துறை அமைச்சர். "இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் கட்டாயமாக இந்தியை நேசிக்க வேண்டும். இந்தியை நீங்கள் நேசிக்காவிட்டால் நீங்கள் வெளிநாட்டவர் என்றோ அல்லது வெளிநாட்டுச் சக்திகளுக்குத் துணை போகிறீர்கள் என்று அர்த்தம்"  – இப்படி பேசியிருக்கிறார்.

"அரசியலமைப்பு சட்டத்தை காப்பேன்" என்று உறுதிமொழி எடுத்திருக்கும் அமைச்சர் இப்படிப் பேசுவது தவறு. அதைவிடப்  பெரிய தவறு மாநில முதல்வரும் அவரது கட்சியும்  அவரை கண்டிக்காமல் இருப்பது.  இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறவேண்டியவர் நாமல்ல,  அப்படிச் சொன்ன அவர்தான்.

? "கொரோனா தொற்றிலிருந்து  இந்தியா வெற்றிகரமாக  மீண்டெழுந்திருப்பதை உலக நாடுகள் பாராட்டுகின்றன" என்கிறாரே பிரதமர்?                                – ஜோஷ், அயன்புரம்

! அவர் நம் ரிசர்வ் வங்கி அறிக்கையைப்படிக்கவில்லை, அல்லது படிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. "கொரோனா பரவலால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்பிலிருந்து  மீள இன்னும் 13 ஆண்டுகள் ஆகலாம்" என்கிறது  ரிசர்வ் வங்கியின் அறிக்கை.

அதில், கடந்த 2021 ஆம் ஆண்டில் மைனஸ் 6.6 சதவிகிதம் என்று பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் 7.5 சதவிகிதம் என வளர்ச்சி அடையும் எனக் கருத்தில் கொண்டால்கூட கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை 2034 – 2035 ஆம் ஆண்டில் தான் சரிசெய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

? 'இலங்கைக்கு உதவ அனுமதிக்க வேண்டும்' என்ற தமிழக அரசின் தீர்மானம் குறித்து?
-சம்பத் குமாரி, சென்னை

! ஒன்றிய அரசின் அனுமதியோடு மனிதாபிமான அடிப்படையில் ஶ்ரீலங்காவிற்கு உதவுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பதால் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். தீர்மானத்தின் உடனடி பலன் அண்ணாமலையின் இலங்கைப் பயணம். "எங்களால்தான் அவர்களுக்கு உதவி கிடைத்தது"  என்ற பெருமையைப் பேசுவதைவிட,  பாதிப்புக்குள்ளானோர் உதவி பெறுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைவோம்.

? டிவிட்டரை வாங்கிவிட்டார் எலான் மஸ்க். அவரைப் போல் நீங்களும் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தால், முதலில் வாங்க நினைப்பது என்னவாக இருக்கும் ?
– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி – 605001

! எலான் மஸ்க்கைதான்,  அவரது அனைத்து நிறுவனங்களுடன்.

"பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும்" என நினைக்கிறீர்கள்… ஆளுநரிடமா? தமிழ்நாடு அரசிடமா?
– எம். நிர்மலா, , புதுச்சேரி – 605001

! இரண்டிலுமே  அரசியல்வாதிகளின் தலையீடும் குறுக்கீடும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உயர் கல்வித்துறையை நிர்வகிக்கும் மாநில அரசு அரசியல் சார்பற்ற நிலையில் இயங்கக்கூடிய குழுவில் ஆளுநரின் பிரதிநிதி இடம் பெற்றிருக்கும் குழுவை அமைத்து அந்த குழு தேர்வு  செய்யும் முறை வந்தால் பிரச்னைகள் குறையும்.

?  வாரம் தவறாமல்  கேள்வி கேட்கும் தராசாரின் வாசர்கள் குறித்து தராசார் என்ன நினைக்கிறார்?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான் குளம்.

! ஒரு சின்ன திருத்தம். பல கேள்விகள் கேட்கும்  சில  வாசகர்கள் என்றிருக்க வேண்டும்.  அவர் கல்கியின் பால் கொண்டிருக்கும் அன்பால் மகிழ்ச்சியும், பல விஷயங்களைப் பற்றிக் கேட்கும் திறனைக்கண்டு ஆச்சரியமும், அனைத்துக்கும் ஒரே இதழில் பதில் சொல்லமுடியாத நிலையினால் வருத்தமும் அடைகிறார் தராசார்.

சசிகலாவிற்கு அ.தி.மு.க.வில்  அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டதே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

! சில கதவுகள்  தட்டும் நேரத்தைப் பொறுத்து திறக்கப்படும். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று சொல்லப்பட்டிருக்கிறதே.

"தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட  7 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காதது தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சைப் பற்றி…
– ம. நிர்மலா மகாதேவன், மாங்குப்பம்

! மக்களை முட்டாள்கள் என நம்புகிறாரோ என ஐயம்  எழுகிறது . "2014 ஆம் ஆண்டு பா.ஜ.க.ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற்போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக்கூடிய தலைவரியையும் தலமேல்வரியையும் (செஸ் செஸ் பிளஸ்), மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கத் தேவையில்லை என்பதால் இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்ற காரணத்திற்காகத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு. தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரமே மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் பிரதமர் இப்படிச் சொல்வது முழுக்க முழுக்க அரசியல் மட்டுமில்லை மக்களின் சிந்தனைத்திறனைக் குறைத்து மதிப்பிடுகிறார்.

"கேக்கறவங்க கேணையன்களாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுதுன்னு சொல்லுவாங்க"  என்ற கிராம சொலவடையை நீங்கள் கேட்டதுண்டா?

ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் எப்படி மின் வெட்டு ஏற்பட்டது?
– சண்முகநாதன், நெய்வேலி

! அரசின் அலட்சியம்தான். ஆண்டுதோறும் கடும் கோடைக்காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பது எந்தவொரு சாமானியனுக்கும் தெரியும். மார்ச் வரை நிலக்கரி தட்டுப்பாடு இருக்காது என்று நிலக்கரியை நிர்வகிக்கும் கோல் இண்டியா கடந்தாண்டு டிசம்பரிலேயே சொன்னது. அப்படியானால் மார்ச் மாதத்துக்குப் பிறகும் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்ய போதிய அவகாசம் இருந்தது. நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கும் என்று ஏப்ரல் துவக்கத்திலிருந்தே பல பத்திரிகைகளும் எழுதிக் கொண்டிருந்தன. அப்போதே விழித்துக் கொண்டிருந்தாலும், தேவையான இடங்களுக்குத் தேவையான நேரத்துக்கு நிலக்கரியை அனுப்பியிருக்க முடியும். இப்போது, நாடெங்கும் மின்வெட்டு ஆரம்பித்த பிறகு, 670 பயணிகள் ரயிலை ரத்து செய்துவிட்டு, நிலக்கரி அனுப்புகிறது.
வருமுன் காப்போன் உத்தமன்,
வருங்கால் காப்போன் மத்திமன்,
வந்தபின் காப்போன் அதமன்.

"பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது? !" என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
– ச. ராமதாசு சடையாண்டி, விழுப்புரம்

! "பேரறிவாளனை விடுதலை செய்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்வதுதான் அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள நடைமுறை. அவ்வாறு செய்யாமல் ஆளுநர் அந்த தீர்மானத்தை ஒன்றிய அரசு/குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே மறுதலிக்கும் செயல்" என்று கண்டித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தியாவைப் பொறுத்தவரைச் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பது முக்கியமானது.

அதனால் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. ஏனெனில் "அவர்கள் ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள்" என்றுதான் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான தண்டனையாக முப்பதாண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தேசிய முக்கியத்துவம் என்பதோ, மத்திய புலனாய்வுத் துறைகள் விசாரணை மேற்கொண்டதோ ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் கொண்ட மாநில அரசின் இறையாண்மைக்கு உட்படாத ஒரு குற்றமாக மாற்றிவிட முடியாது. ஆனால், அப்படி ஒரு தேசியக் கோணம் இந்த தண்டனை குறைப்பிற்கு இருப்பதாகக் கற்பித்துக்கொள்கிறார்கள் என்பதுதான் பிரச்னை.

இதில் சட்டத்தைத் தவறாக புரிந்துக்கொள்வது மட்டுமல்லாமல், தமிழக அரசிற்குத் தேசிய நலனில் அக்கறை கிடையாது என்பது போலவும், ஒன்றிய அரசிற்கு மட்டுமே அந்த அக்கறை இருப்பது போலவும் தோற்றம் உருவாவது மிகவும் அபத்தமானது, ஆபத்தானது.

? ஆளுநரிடம் எதிர்பார்ப்பது நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே..?
– இரா. அருண்குமார், வாண்ணரப்பேட்டை, புதுச்சேரி

! தபால் பெட்டிகளிலிருந்து தபால்களை எடுத்துப் பிரித்து முகவரிகளை சரிபார்த்தால்தானே தாபல்களை  கொடுக்க முடியும். தபால் பெட்டியையே திறக்க வேண்டாம் என்று சொல்லி  போஸ்ட் மேன்களை நியமித்திருக்கிறார் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்.

? இறைவனின் படைப்பில் தராசாரை வியப்பில் ஆழ்த்திய அம்சம் ?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! 256 எலும்புகளுடனும், சிலந்தி வலையாகப் பின்னப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஜோடிகளாக நரம்பு மண்டலங்களையும் கொண்ட ஒரு சிக்கலான இயந்திரத்தை செல்வனே இயக்க  அத்தனை விதமான சாஃப்ட்வேர்களையும் உள்ளடக்கி 1400 கிராமில்  ஒரு மினி கம்யூட்ரையும் படைத்திருப்பதுதான்.

"கொடநாடு எஸ்டேட் எங்களுக்குக் கோயில்" என்கிறாரே சசிகலா?
 – சா.சொக்கலிங்க ஆதித்தன் ,ரோஸ்மியாபுரம்

! "வருமான வரி பாக்கிக்காக வழிபாட்டுத் தலங்களை கையகப்படுத்த முடியாது" என்ற பிரிவைப் பின்னாளில் பயன்படுத்திக்கொள்ள  இப்போதே  இப்படிச் சொல்லி வைக்கிறாரோ?

தராசார் அண்மையில் ரசித்த ஜோக்?
– மாடக்கண்ணு,  நெல்லை

! பழையதாக இருந்தாலும் படித்தவுடன் பளிச்சென்று சிரிப்பு வந்த ஜோக் இது.

சொர்க்கத்தில் காந்தி …… அவ்வளவாக யாரிடமும் பேசுவதில்லை !

அன்றைக்கு என்னவோ , வாக்கிங் போனபோது, எதிரில் வந்த நாரதரிடம் , சும்மா கேட்டு வைத்தார் :

" அப்புறமா அந்த மூணு குரங்குகளும் , என்னவாய் பிறந்தன ? ஏதாவது விவரம் தெரியுமா !"

"அது வந்து…., கண்ணை மூடிண்டு இருந்தது : நீதித்துறை மந்திரியாய்ப் பிறந்திருக்கு ….

காதை மூடுண்டு இருந்தது, அரசு அதிகாரியாய்ப் பிறந்திருக்கு …..

வாயை மூடிண்டு இருந்தது , பொதுஜனப் பிரதிநிதியாய்ப் பிறந்திருக்கு !"

கண்களை மூடிண்டு , ஓசையில்லாத இடமாய்த் தேர்ந்தெடுத்து ,

காந்திஜி , உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து விட்டார் !

சுத்தி முத்தும் பார்த்துட்டு …..பேசறத்துக்கு ஆளைத்தேடி, நாரதர் புறப்பட்டார்…

"நாராயணா ! நாராயணாய ! நாராயணாய !

நயந்தாரா, சமந்தா இருவரில் சிறந்த நடிகை யார்?
-மலர்க்கொடி, வேலூர் 

! ஒரே படத்தில் இருவருடனும் சேர்ந்து நடித்த நடிகர் விஜய் சேதுபதிதான் இதற்கு விடை  சொல்ல முடியும் என்பதால்,  உங்கள் கேள்வி அவருக்கு அனுப்படுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com