
2022 தொடக்கத்தில் நல்ல விஷயத்துடன் ஆரம்பிக்கலாம். சமீபத்தில் 'வீடு தேடி வரும் கல்வி' என்று தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கல்கியில் இது குறித்து தலையங்கம் கூட வந்திருந்தது.
கொரோனாவால் பள்ளிக்குச் செல்ல முடியாமல், ஆன்லைன் வகுப்பு போன்ற வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் வழியாக மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று பாடம் சொல்லிக்கொடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
நல்ல திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இத்திட்டத்தை முதலில் வகுத்தவர் சுகதா மித்ரா(Sugata Mitra) என்பவர். 1999ல் 'சுவரில் ஓட்டை' ஒன்றை அமைத்து சேரிக் குழந்தைகளுக்கு கல்வியைப் புகட்டிய விஷயத்தையும் தெரிந்துகொள்ளச் சிபாரிசு செய்கிறேன்.
இருபது வருடங்களுக்கு முன் 'ஸ்மார்ட் போன்' அதிகம் அறியப்படாத காலத்தில் (1999ல்) டெல்லியில் படிப்பறிவு இல்லாத, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கீழ்த் தட்டு மக்கள் வசிக்கும் ஒரு சேரிப் பகுதியைத் தேர்ந்தெடுத்தார் மித்ரா. அங்கே கணினிகளை ஓர் அறையில் அமைத்து, குழந்தைகள் அதை எப்போது வேண்டுமானாலும் உபயோகிக்க வசதியாக அறையின் சுவற்றில் ஓர் ஓட்டை அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
சில மாதங்கள் கழித்து சேரிக்குத் திரும்பினார். அங்கே அந்தச் சேரிக் குழந்தைகள் தாங்களாகவே பலவற்றைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். ஆங்கிலச் சொற்கள் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் பேசினார்கள். கணினியை அதுவரை பார்த்திராதவர்கள் கணினி கொண்டு தாங்களாகவே இசை அமைத்தார்கள்.
அடுத்து மித்ரா தன் பரிசோதனையைத் தமிழ்நாட்டுப் பக்கம் திருப்பினார்.
'குப்பம்' என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்தார். அங்கே 25 ஆங்கிலம் தெரியாத 6-12 வயதுக் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தார். வழக்கம் போல ஒரு கணினி அறையை அதன் சுவற்றில் ஓட்டை அமைத்து, மாணவர்களிடம் "இந்த கணினி உங்களுக்கு. நீங்கள் இதன் மூலம் பையோடெக்னாலஜி(Biotechnology) கற்றுக்கொள்ளுங்கள். நான் இரண்டு மாசம் கழித்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
இரண்டு மாதங்கள் கழித்து "என்ன படித்தீர்களா? என்ன புரிந்தது?" என்று கேட்டார்.
"சார், எங்களுக்கு டி.என்.ஏ. மூலக்கூறுகளின் முறையற்ற பிரதிபலிப்புதான் மரபணு நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் புரியவில்லை" என்று ஆங்கிலத்தில் கூறினார்கள் அந்தக் கிராமத்துக் குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தை மற்ற குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து, கிட்டத்தட்ட ஆசிரியர் போலவே ஆகியிருந்தாள்!
"இவர்களின் கல்வி அறிவு மேலும் வளர என்ன செய்யலாம்" என்று யோசித்த மித்ரா, "இவர்களுக்கு ஊக்கம் அளிக்க ஒருவர் தேவை" என்று முடிவு செய்தார். அவ்வூரில் அக்கௌண்டன்ட் வேலை செய்யும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து ஒரு வேலை கொடுத்தார். "இந்த குழந்தைகள் கணினியை உபயோகிக்கும்போது, அவர்களை 'சூப்பர், அருமை' என்று ஊக்கப்படுத்த வேண்டும்!" என்றார்.
அடுத்த இரண்டு மாதத்தில் அந்தக் குழந்தைகள் பையோடெக்னாலஜியில் 50% மதிப்பெண் பெற்றார்கள். மித்ரா இதைப் பல தேசங்களில் செயல்படுத்தி வெற்றியைக் கண்டார்.
இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள் –
இள மனங்களின் இயல்பான ஆர்வம், அவர்களை ஊக்கப்படுத்த ஒரு நல்ல ஆசிரியர்.
கிராமங்களில் சிறுவர்களைக் கண்டுபிடித்துவிடலாம், ஆனால் அவர்களை ஊக்கப்படுத்த நல்ல ஆசிரியர்கள்? இருக்கிறார்கள்.
சீர்காழி அருகில் திருநகரி (திருமங்கை ஆழ்வார் பிறந்த இடம் ) என்ற கிராமத்துக்கு 2018ல் சென்றிருந்தேன். பெருமாளைச் சேவிக்கும்போது ஒரு பெண் எனக்கு அறிமுகமானாள். சிரித்த முகம். பேச்சுக் கொடுத்தேன்.
"என்ன செய்யறீங்க?"
"தமிழ் ஆசிரியராக இருக்கேன். 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கிறேன்."
"என்ன படிச்சிருக்கீங்க"
"எம்ஃபில் தமிழ். 'திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் வைணவ நெறி' என்ற தலைப்பில் எம்ஃபில் செய்தேன்!"
அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தபோது – ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அவள்தான்.
"நனைகிறீர்களே… இந்தாங்க" என்று தன்னுடைய குடையை வலுக்கட்டாயமாக என்னிடம் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டமாக நனைந்துகொண்டு ஓடி, ஒரு வீட்டில் ஒதுங்கினாள். குடையைக் கொடுத்துவிட்டு "நீங்க தமிழ் ஆசிரியரா, இல்ல… பீ.டி. மாஸ்டரா… இப்படி ஓட்டமா ஓடறீங்க…" என்றேன்.
"எங்களுக்கு மழையில் நனைந்து பழக்கம்… ஆனால் நீங்க நனையக் கூடாது!" என்றாள். மழையில் மேலும் அவளிடம் பேசியபோது "அம்மா இல்லை. தாத்தா பாட்டி வீட்டில் இருக்கேன். அரசுப் பள்ளியில் வேலை, வெளியூருக்குச் சென்றால் சம்பளம் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்!"
"ஏன் போகவில்லை ?"
"சாமி! இது என் ஊர். என் கிராமம். இங்கே இருக்கும் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று ஆசை. அதனால் இங்கேயே இருக்கிறேன். திருமங்கை ஆழ்வாரும் இங்கேதானே இருக்கிறார்!" என்றாள்.
மித்ரா போன்ற அறிஞர்களையும், ஊர் பற்று உள்ள ஆசிரியர்களையும் அரசு முதலில் தேட வேண்டும்!