எப்படிப் படித்தாலும் புரியும், ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

எப்படிப் படித்தாலும் புரியும், ரசிக்கும் வண்ணம் இருக்கும்.
Published on

நூல் அறிமுகம்

– சத்ய ஸ்ரீ

ல பதிவுகள் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களைப் பற்றியும் அவரது நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் "ஒற்றன்" பற்றியும்.

தலைப்பைப் பற்றி கேள்விப்பட்டதுமே ஏதோ 'துப்பறியும் நாவல் போல இருக்குமோ', என்ற எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

உண்மையைச் சொன்னால்…. கொஞ்சம் தயக்கத்துடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால்….

ஆரம்ப சில அத்தியாயங்களிலேயே என்னை முழுக்க முழுக்க உள்ளே இழுத்துக் கொண்டது, நானே அறியாமல்!! நான் துரிதமாகப் படித்து முடித்த புத்தகங்களின் வரிசையில் இதற்கும் இடமுண்டு.

இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால்…

பயணக் கட்டுரையாகவும் இல்லாமல் புதினமாகவும் இல்லாமல் இரண்டும் இணையும் புள்ளியில் மிகவும் ஜாக்கிரதையாகப் பயணம் செய்கிறது. இதுபோன்ற வெற்றிகரமான முயற்சிகள் கொஞ்சம் குறைவே.

சர்வதேச இலக்கிய கருத்தரங்கில் கலந்துக் கொண்டு, பல மாதங்கள் மற்ற நாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்து இலக்கிய கருத்துப் பரிமாற்றங்களுடன் சேர்த்து வாழ்க்கையையும் கற்று வந்த தன் பயணத்தைப் பற்றி அழகாக, மிக அழகாக ஒரு புதினம் போன்ற வடிவில் இதை எழுதியதற்கே அவருக்கு பெரிய ராயல் சல்யூட் அடிக்கலாம்.

பலப்பல வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட, அங்கு தான் சந்தித்த பழகிய மனிதர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சிலர் நம் மனதையும் கவர்ந்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனியாகவும் படிக்கலாம்…

ஒட்டுமொத்தமாகவும் படிக்கலாம்…

வரிசை மாற்றியும் படிக்கலாம்…

எப்படிப் படித்தாலும் புரியும், ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

தான் சந்தித்த யாரையும் அவ்வளவாக எடை போடாமல், சற்றே தள்ளி நின்று, அவருக்கும் தனக்குமான சந்திப்புகள் பற்றியும் மற்ற விஷயங்கள் பற்றியும் நடுநிலையாக எழுதியிருக்கிறார்.

"ஒரு சைவக்காரர் அந்தக் காலத்தில் அமெரிக்காவுக்குச் சென்றால் நல்ல சாப்பாட்டுக்கு எப்படி கஷ்டப்படவேண்டும்" என்று தன் அனுபவத்தை நன்கு விளக்கியிருக்கிறார்.

இவர் சந்தித்த சில மனிதர்களின் குணாதிசயங்களே மிகச் சுவாரசியமாக இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனி நாவலே எழுதலாம்.

'அம்மாவின் பொய்கள்' என்ற தலைப்பில் தான் மொழிபெயர்த்த கவிதையை அப்படியே கொடுத்திருந்தார்.

அருமையாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக ஒரு அருமையான

புத்தகத்தைப் படித்த திருப்தியான உணர்வைக் கொடுத்திருக்கிறார்.

புத்தகம்: ஒற்றன்
எழுத்தாளர்: அசோகமித்திரன்
பதிப்பகம்: காலச்சுவடு

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com