
அவளிடமிருந்து நல்ல பதில் வராமல் போனதால் நல்ல சம்பந்தம் கைநழுவி விடப்போகிறதே என்று அம்மா மிகவும் கவலைப்பட்டாள். "அவளுக்கு இளம் வயதுதானே? படித்து வேலை பார்க்கும் ஆசையில் நல்ல சம்பந்தத்தை வேண்டாம் என்கிறாள். அதுக்காக நாமும் சும்மா இருந்துட்டா எப்படி?" என்று தினம் புலம்ப, அப்பாவும் அக்காக்களும் விக்கிரமாதித்தன் கதை போல் அவள் மனதை மாற்ற தொடர்ந்து முயற்சித்தார்கள்.
வெகுநாள் ஸ்திரமாக இருக்க முடியவில்லை மைதிலியால். தன் மீது அன்பு கொண்ட அத்தனைபேரும் சொன்ன பிறகு மறுத்துப்பேச இயலாத நிலையில் அவள் திருமணத்திற்கு சம்மதித்தாள். அனைவரது முகமும் மலர்ந்தது.
"ஆனா என் பரீட்சைகள் முடிந்து ஒரு மாதம் கழித்துதான் கல்யாணம் வெச்சுக்கணும். அந்த ஒரு மாதமாவது நான் பிறந்த வீட்டில் ஜாலியா இருக்கணும். நல்ல புக்ஸ் படிக்கணும், நல்லா சாப்பிட்டு நினைச்சப்போ தூங்கணும். பிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தணும். சினிமா பார்க்கணும். சரியா?"
"அப்படியே ஆகட்டும்" என்றார் அப்பா.
பெரிய இடத்தில் வாக்கப்படப் போகிறாள் என்பதால், அவர்கள் எதுவும் கேட்காவிட்டாலும் அவர்களது கௌரவத்திற்குக் குறைவின்றி அப்பா மற்ற இருவருக்கும் செய்ததைவிட அதிகமாகவே நகைநட்டும் சீர்வரிசைகளும் செய்தார். அக்காக்கள் ஆசை ஆசையாக தங்கள் பங்கிற்கு நகைகளும், அவளுக்குப் பிடித்தாற்போல் விலை உயர்ந்த புடைவைகளும் வாங்கி பரிசளித்தார்கள்.
மார்ச் மாதம் கல்லூரி இறுதி தேர்வுகள் முடித்த கையோடு இருபது வயதின் துவக்கத்தில், ஜூன் மாதத்திலேயே திருமணம் படு விமரிசையாக நடந்தது. திரைத்துறை பிரபலங்களும், பெரிய மனிதர்களும் வந்தவண்ணம் இருந்தார்கள். திரையில் மட்டுமே பார்த்த நட்சத்திரக் கூட்டத்தை நேரில் பார்த்ததும் மைதிலியே வியந்தாள். "நடப்பது நம் திருமணம்தானா" என்று பிரமித்தாள்.
ஆனந்தனும் சினிமா ஹீரோ போல கம்பீரமாக அழகாகத்தான் இருந்தான். திருமணம் வேண்டாம் என்று முதலில் முரண்டு பிடித்த அதே மனம் மெல்ல மாறி, ஆனந்தனை நேசிக்க ஆரம்பித்தது. அவளது எதிர்காலக் கனவுகள் விதவிதமாக வர்ணம் பூசிக்கொண்டன.
பிறந்த வீட்டு உறவுகளைப் பிரியும் நேரம் வந்தது. அக்காக்கள் அவர்கள் திருமணம் முடிந்து அழுது கொண்டே கிளம்பியது நினைவுக்கு வந்தது. அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அவளும் அழுதாள். அப்பாவின் தோளில் சாய்ந்து கண்கலங்கினாள். அப்பா அவள் தலை வருடியவாறு ஆறுதலாகப் பேசினார். "பிறந்த வீட்டைப் பிரிவதென்பது எல்லா பெண்களுக்கும் நிகழ்வதுதான். வேரோடு பிடுங்கி வேறிடத்தில் நடப்படும் மரம் மெல்ல வேர் பிடித்து துளிர்ப்பது போல, புகுந்த வீட்டின் சூழலில் பிடிமானம் ஏற்பட்டு இனி இதுவே நாம் தொடர்ந்து வளர வேண்டிய நிலம் என்று மனது ஏற்கும்வரை பிரிவின் சுமை அழுத்தும். அதற்குப்பிறகு பிறந்த வீட்டிற்கு வந்தால்கூட மனசு நிலை கொள்ளாது. காலில் கஞ்சியைக் கொட்டிக்கொண்டு கிளம்பும். என் அம்மாவுக்கும் இது நடந்தது. உன் அம்மாவும் இப்படித்தான். நாளை நீயும் இதைப் புரிந்துகொள்வாய்.
நீ போகுமிடம்தான் இனி உன் வீடு என்றாகிவிடும். எங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் உன்னோடிருக்கும் என்பதையும் மறந்துவிடாதே"
"போலாமா?" ஆனந்தன் உள்ளே எட்டிப் பார்த்து அழைக்க அவள் எழுந்தாள். அப்பா அம்மாவை நமஸ்கரித்து விடை பெற்றாள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கார் தயாராக நின்றிருந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் அவர்கள் இருவரையும் ஏற்றிவிட்டு, பின்னால் நின்றிருந்த மற்ற கார்களில் மற்றவர்கள் ஏறிக்கொண்டார்கள். அப்பா – அம்மா, அக்காக்கள், மாமாக்கள் என அவளது உறவுகளும்கூட ஒரு காரில் ஏறுவது முன்புறக் கண்ணாடியில் தெரிந்தது. கார்கள் அனைத்தும் அணிவகுத்து வரிசையாகக் கிளம்பின. ஆனந்தன் அவளது இடக்கரத்தை தன் வலக்கரத்தால் பற்றி, விரல்களோடு விரல்களைக் கோர்த்துக்கொண்டான். முதல் ஸ்பரிசத்தில் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவியது.
*** *** ***
வீடு மாளிகை போலிருந்தது. கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள். சினிமாவில் பார்ப்பது போல, பெரிய ஹால், உயர்தர சோபா செட்டுகள் திரைச்சீலைகள், மிகப்பெரிய பிளாஸ்மா டிவி, அலங்கார மாடிப்படிகள், ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு நவீனமான, சகல வசதிகளோடும் கூடிய பெரிய சமையலறை, ஒவ்வொரு படுக்கையறையுமே ஆயிரம் சதுர அடிக்கு மேலிருக்கும். அலங்காரக் கட்டில், உயர்தர தரை விரிப்புகள். ஒவ்வொரு அறையிலும் டிவி, ஃப்ரிஜ், ஏசி…… மைதிலி ஒரு வினாடி பிரமித்தாள். இதெல்லாம் நிஜமா? அல்லது தான் ஏதேனும் கனவு கினவு காண்கிறோமா?
"எங்க வீடு பிடிச்சிருக்கா மைதிலி?" சட்டெனக் கலைந்து திரும்பினாள். கனவல்ல நிஜம்தான். கையில் பழச்சாறுடன் ஆனந்தனின் பெரிய அண்ணி நின்றிருந்தாள். காதிலும், கழுத்திலும் கையிலும் வைரம் ஜொலித்தது. "இது நம்ம தோட்டத்து மாம்பழத்திலிருந்து எடுத்த சாறு" என்றபடி கிளாஸ் தம்ளரை நீட்டியவாறு, "புது இடம் முதல்ல பயமா இருக்கும். எங்களுக்கும் இப்படித்தானிருந்துச்சு. போகப்போக இந்த வீடு பிடிச்சுடும். ஃப்ரீயா இரு. இனி இதான் உன் வீடு." அண்ணி புன்னகையோடு சொல்லிவிட்டு அவளையே பார்த்தாள்.
"ஜூஸ் ரொம்ப நல்லாருக்கு தாங்க்ஸ் அண்ணி."
"நமக்குள்ள எதுக்கு தாங்க்ஸ் எல்லாம். நான் கல்யாணமாகி இங்க வரும்போது ஆனந்தன் பத்தாம் வகுப்பு படிச்சுட்டிருந்தான். அம்மா இல்லாத பிள்ளைக்கு நான்தான் அம்மா மாதிரி. வீட்டுக்கு கடைசி பிள்ளை என்பதால் எல்லாருக்குமே அவன் ரொம்பவும் செல்லம். அதனால கொஞ்சம் பிடிவாதம் அதிகம். அவன் இஷ்டத்துக்குத்தான் எல்லாம் செய்வான். இவங்க தாத்தா காலத்துல ஊர் உலகமே வியப்பது மாதிரி சினிமா உலகத்துல தலைநிமிர்ந்து பேரும் புகழுமா வாழ்ந்த குடும்பம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன்னு எத்தனையோ பிரபலங்களை வெச்சு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை எடுத்து தள்ளினவங்க. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி படங்களும் ஏகப்பட்டது எடுத்திருக்காங்க. உனக்கு பொழுது போகலைன்னா இரண்டாவது மாடியில் ஒரு பெரிய ஆவண அறை இருக்கும். ஹோம் தியேட்டரும் கூட. அங்க நம்ம சினிமா கம்பெனி எடுத்த படங்களோட விவரம், சினிமா ஆல்பங்கள், பழைய சினிமாக்களோட டிவிடி என்று ஏகப்பட்டது இருக்கும். போட்டு பார்க்கலாம். சாவித்திரி, பத்மினி, வைஜயந்திமாலான்னு எல்லோரது அழகழகான திரைப்பட ஸ்டில்களும் இருக்கும். ஆனா, சினிமால்லாம் எடுப்பதை நிறுத்தியே பதினஞ்சு இருபது வருஷமாச்சு. பிள்ளைகள் எல்லாரும் படிச்சு சொந்தமா தொழில் செய்து நல்லாவே சம்பாதிக்கறாங்க. ஆனா, ஆனந்தனுக்கு மட்டும் பரம்பரை ரத்தம் ஓடுது போல… அவன் மனசு சினிமாவை சுத்தியே வருது. தன் தாத்தா காலத்தைப் போல மறுபடியும் வெற்றிப் படங்களா எடுத்து குடும்பத்தோட பேரை மறுபடியும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரணும்னு ஒரு ஆசை. நாங்க அவனிடம், காலம் மாறிடுச்சு, முந்தி மாதிரியில்ல இப்போ திரைத்துறை. சினிமா எல்லாம் வேணாம்னு சொல்றோம். கேட்டாத்தானே? இந்த ரெண்டு வருஷத்துல சினிமா எடுக்கப்போறேன்னு, அப்பாவை நச்சரிச்சு ஊரிலிருந்த ஒரு பண்ணை வீட்டை அடமானம் வெச்சு பேங்க்கில் இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கான். அது பத்துமா? மேற்கொண்டு பணத்துக்கு என்ன செய்வான்? கல்யாணம் பண்ணி வெச்சுட்டா உலகம் புரியும்னுதான் உடனடியா வரன் தேடினோம். பொறுப்பான மிடில் கிளாஸ் பெண் என்று உன்னைப் பற்றி கேள்விப்பட்டதும் எல்லோர்க்கும் பிடிச்சு போச்சு. என்னமோ மைதிலி, நீதான் அவனை நல்ல வழிக்கு கொண்டு வரணும். கடனா வாங்கிய பணத்தை அவன் கண்டமேனிக்கு செலவழிக்காம பாத்துக்க. சினிமா ஆசைலேர்ந்து அவன் மனசை மாத்தி, அந்த பணத்தை வெச்சு வேற ஏதானம் நல்ல தொழில் துவங்கி அவன் முன்னுக்கு வர நீதான் ஏதாவது செய்யணும்."
அண்ணி எழுந்தாள்.
*** *** ***
மதிய விருந்து அமர்க்களமாக இருந்தது. ஒரே நேரத்தில் இருபத்தி ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு நீளமான டைனிங் டேபிள். இவள் வீட்டினரை முதலில் அமரவைத்து மீதமிருந்த இருக்கைகளில் மாமனார், மைத்துனர்களோடு ஆனந்தனும் அமர்ந்துகொள்ள பணியாளர்களின் உதவியோடு அண்ணிகள் மூவரும் பரிமாறினார்கள். மைதிலியின் குடும்பத்தினரை அனைவரும் அன்போடும் மரியாதையுடனும் கவனித்தனர். சாப்பாட்டுக்குப் பின் வெற்றிலை மென்றபடி அனைவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
முதலிரவுக்கு முன்பு நடத்தப்பட வேண்டிய சில வைதீக சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டதும் பெரியவர்கள் அனைவரையும் நமஸ்கரித்து ஆசி பெற்றனர் இருவரும்.
"இந்த வீட்டு பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள். பார்த்து நல்லபடியா நடந்துக்கோ மைதிலி. எல்லாரிடமும் நீ வாங்கப்போற நல்ல பேர் உனக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்தான்." அம்மா அவளுக்கு முத்தத்தோடு அறிவுரையும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அனைவரும் வாசல்வரை வந்து அவர்களை வழியனுப்பினார்கள். அவர்கள் சென்றதும் தனித்து விடப்பட்டாற்போல் ஒரு உணர்வு.
மூன்று அண்ணிகளும் அவளை அழகாக அலங்கரித்தார்கள். பெரியண்ணி ஒரு நகைப் பெட்டியைத் திறந்தாள்.
இது நம்ம புகுந்த வீட்டின் பூர்வீக நகை மைதிலி. எல்லா மருமகள்களுக்கும் சமமா பிரிச்சு வெச்சிருக்காங்க. இது உனக்கானது. நூற்றி ஐம்பது சவரன் இருக்கும். இது மொத்தத்தையும் உனக்கு போட்டுவிட்டு உன்னை அழகு படுத்தணும்னு ஆசையிருந்தாலும் இதுலேர்ந்து ஒருசில நகைதான் உனக்கு போடப்போறோம். மிச்சத்தை உன்னிடமே கொடுக்கிறோம். உனக்குன்னு நம்ம மாமனார் ஒரு லாக்கர் ஓப்பன் பண்ணி குடுத்திருக்கார். இது அதோட சாவி. நாளைக்கோ நாளை மறுநாளோ நகைகளை கொண்டு போய் லாக்கர்ல வெச்சுட்டு சாவியை பத்திரமா வெச்சுக்க. அப்பறம் இன்னொரு விஷயம். இந்த நகைகளை உனக்கு கொடுத்திருக்கும் விஷயம் இப்போதைக்கு ஆனந்தனுக்குத் தெரியவேண்டாம். சினிமா எடுக்கும் செலவுக்குத் தேவைன்னு கேட்டு வாங்கிக்க வாய்ப்பிருக்கு. இதெல்லாம் விலை உயர்ந்த பூர்வீக நகைகள். அடமானம் அது இதுன்னு போய்டக்கூடாதுன்னுதான் சொல்றேன். பாத்து சாமர்த்தியமா இருந்துக்க. அவனையும் நல்ல வழிக்கு கொண்டு வா, சரியா?
பெரியண்ணி நகைப் பெட்டியையும், லாக்கர் சாவியையும் அவளிடம் ஒப்படைத்தாள். ஏனோ தெரியவில்லை. இனம் புரியாத கவலை சூழ்ந்தது. அடிவயிற்றில் பெரும் பாரமொன்று அழுத்துவதைப் போல உணர்ந்தாள் மைதிலி.
(தொடரும்)