இது  அவருடைய அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்

இது  அவருடைய அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்
Published on

? நகராட்சி, ஊராட்சி தேர்தல்களில்  கட்சி கட்டளையை மீரியவர்களை  தி.மு.க. தலைவர் கண்டித்திருக்கிறாரே?
– மனோகரன், திண்டுக்கல்

! கட்சிக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் 'கழகத் தலைவர்' என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்.

"மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்ற மு.க. ஸ்டாலினின் அறிவிப்பைப் போல  அண்மைக் காலத்தில் எந்தவொரு கட்சித் தலைவரோ, முதல்வரோ இப்படி பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததில்லை.  இது  அவருடைய அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்.

? மதம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் எந்த அளவு இருக்க வேண்டும்?
– சி.கார்த்திகேயன், சாத்தூர்

! 'அவனுக்கு பிடித்ததாக இருந்தாலும், அது அவனைப்  பிடித்துவிடக்கூடாது' என்ற நிலையில் இருக்க வேண்டும்.

? 'இந்திய – சீன உறவு சிக்கலான கட்டத்தில் உள்ளது' என்கிறாரே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்?
– மதுரை குழந்தைவேலு, சென்னை

! 'உலகத்துக்கே பல ஆண்டுகளாக தெரிந்த இந்த விஷயம் இப்போதாவது அமைச்சருக்குத் தெரிந்திருக்கிறதே' என்று மகிழ்ச்சி அடைவோம்.

? சில ஆன்மிக குருக்களிடம் மட்டும்  எப்படி இவ்வளவு பணம் சேருகிறது?
– சண்முகசுந்தரம், கோவை

! அவர்களின் மார்கெட்டிங் தந்திரங்களால் மக்கள் ஏமாறுகிறார்கள்.  தங்களையும் தங்கள் சொத்துக்களையும்  காப்பாற்றிக்கொள்ள அரசியல் வாதிகள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  அதன்  மூலம் அரசு நிர்வாகத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தும் அதிகாரத்தை இந்த "ஆன்மீக குருக்கள்" பெறுகிறார்கள். இது எல்லாவற்றிற்கும் அடிப்படை அவசியம் பணம். அதுதான் அவர்களிடம் சேருகிறது.

? விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் தனியாருக்கு விற்கப்பட்டால் சாமானிய மக்கள் விமானத்தில் பறப்பது சாத்தியமில்லை தானே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! எந்த மாதிரியான தனியார் நிறுவனங்கள் என்பதைப் பொருத்தது இந்த விஷயம்.  'இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில் சாமானியனும் விமானப் பயணங்கள் செய்ய முடியும்' என்று நிருபித்தவர் தென்னகத்தைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத்.

? சசிகலாவின் ஆன்மீக பயணங்களால்  என்ன விளைவுகள் ஏற்படும்?
– மதியழகி, மதுரை

! தொண்டன் குழம்பிப்போவான்.  கட்சியில் அவர் விரும்பும் பிளவு வரும்.  கட்சியில் மீண்டும் ஒற்றைத் தலைமை ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிந்த  இரண்டு அணிகளும் இணையும்.

?  ரகசியத்தை பாதுகாப்பது எப்படி?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! அதைத் தெரிந்து கொள்ளாமலிருப்பதுதான்!

? சசிகலா ???  ஷேன் வார்ன்!!!! சென்னை மேயர் ஆர். பிரியா!!!   கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு!!!
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

! இப்படி வார்த்தைகளை  கேள்விக்குறி,  வியப்புக்குறியுடன் அனுப்பினால் என்ன கேள்வி என்று எப்படி புரிந்துக்கொள்வது?

'நிழலாகயிருந்து தமிழக அரசியலை மோசமாக நடத்திய சசிகலாவைப்போல் இல்லாமல், தோழமைக்காக காங்கிரசுக்கு  ஊக்க போனஸாக கிடைத்த கும்பகோணம் மேயர் பதவிபோல் இல்லாமல்,  உழைப்பால் தனக்குக் கிடைத்த மேயர் வாய்ப்பைப் பயன்படுத்தி
ஆர். பிரியா,   ஷேன் வார்ன் போல சாதனைகள் செய்ய வேண்டும்' என்ற பதிலைச்  சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ?

? அ.தி.மு.க.வில் தற்போது யாருக்கு அதிக பலம்?
– நெல்லை குரலோன்

! சந்தேகமில்லாமல் அதன்  தொண்டர்களுக்குத்தான்.

நம்பிக்கை, மூட நம்பிக்கை, தன்னம்பிக்கை . வேறுபாடு…!
– வாசுதேவன், பெங்களூரு

! நம்பிக்கைகள் பொதுவானவை. ஒருவருக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும் விஷயம் மற்றவருக்கு தெய்வ நம்பிக்கையாக இருக்கலாம்.  இவற்றில் 'எது தனக்குச்  சரியானது' என்று புரிந்துகொள்ளவும் அதைப் பின்பற்றவும் தன்னம்பிக்கை அவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com