இந்து மதத்தின் அடிப்படையே மனத்தெளிவு காண்பதிலேயே உள்ளது

இந்து மதத்தின் அடிப்படையே மனத்தெளிவு காண்பதிலேயே உள்ளது
Published on

அருளுரை

னித உடல் ஒரு காந்தக்கல் போன்றது. புருவங்களுக்கு நடுவில் ஒரு காந்த ஊசி அமைந்திருக்கிறது. இயந்திர சக்தி, மின்சக்தி, அணுசக்தி, காந்தசக்தி போன்றவை இந்தப் பகுதியின் மூலம் வெளிப்படுகிறது. சரியான பயிற்சி மூலம் நெற்றியில் இந்தப் பகுதியில் அவன் தனது சக்தியைத் திரட்டிக் குவிக்க முடியும். அது நெற்றிப்பொட்டின் வழியே வெளிப்படாமல் இருக்க அங்கே மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற பொருட்கள் மறைப்பாக விளங்குகின்றன. தடைப்பொருளாகவும், அதேசமயம் அழகு தரும் அலங்காரச் சின்னமாகவும் அதை நமது முன்னோர் நயமாக அமைத்தார்கள்.

நாம் ஏதாவது ஒரு பிம்பத்தை மனத்தில் கொள்ளாமல் பிரார்த்தனை செய்வது என்பது நாம் மூச்சுவிடாமல் உயிரோடு இருக்க முயல்வதைவிட சிரமமான காரியம். மனத்தில் பதிந்துள்ள ஓர் உருவமே நாம் மனதார அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு உதவுகிறது என்பது இயற்கையான ஒன்று. அதனாலேயே இந்துக்கள்  வழிபடுவதற்கு  ஒரு பிம்பத்தை மனத்தில் கொள்கிறார்கள். அது அவன் மனத்தை ஒருநிலைப்படுத்தி அவன் வணங்கும் தெய்வத்தின் மீது தன் பிரார்த்தனையை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு உதவுகிறது. அவனுக்கும்  சரி, நமக்கும் சரி அவன் உருவகப்படுத்திக் கொண்டுள்ள பிம்பம்தான்  கடவுள் என்பதில்லை என்பது  நன்றாகத் தெரியும். பார்க்கப்போனால் "எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளே" என்கிறோம். ஆனால், இந்த ஸர்வ வியாபகத்திற்கு என்ன பொருள்? அதை ஒரு வார்த்தையாக சாதாரணமாக உபயோகிக்கிறோம். இல்லாவிடில் எங்கும் வியாபித்திருக்கும் என்று குறிப்பிடும்போது ஆகாயத்தை மனதில் கொள்ளுகிறோம்.

இதேபோல்தான் நமது மனமுதிர்ச்சிக்கு ஏற்ப வியாபித்திருப்பது என்பதை எப்படி விண்வெளி, ஆகாயம் இவற்றோடு சம்பந்தப்படுத்துகிறோமோ, அதேபோல் 'புனிதத்தன்மை' என்று வரும்பொழுது அந்த எண்ணத்தை ஒரு மாதா கோயிலுடனோ, மசூதியுடனோ, சிலுவையுடனோ சம்பந்தப்படுத்துகிறோம். இந்துக்கள் புனிதத்தன்மை என்னும்போது அந்த எண்ணத்தைப் பரிசுத்தம், சத்தியம், எங்குமாயிருக்கும் பரம்பொருள் ஆகியவற்றுடன் ஐக்கியப்படுகிறார்கள். ஆனால், இதில் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. சிலர் சர்ச்சில் ஈடுபாடு கொண்டவுடன் அதைப் பற்றிய விசாரனைகளிலேயே ஈடுபட்டு, அதிலுள்ள பிம்பங்களிலேயே லயித்து அதற்கு அப்பால் செல்லாமல் நின்று விடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தின் அடிப்படையே சிந்தித்து விழிப்புணர்ச்சி கொண்டு, மனத்தெளிவு காண்பதிலேயே உள்ளது. மனிதன் தெய்வத்தை உணர்ந்துகொண்டு தெய்வமாக மாறவேண்டும். சிலைகள், கோயில்கள், சர்ச்சுகள், புனித நூல்கள் இவை எல்லாம் நமது தத்துவக் குழந்தைத்தனத்திலிருந்து முன்னேற உதவும் ஆதாரங்களே. இவற்றின் உதவி மூலம் நாம் தத்துவ விசாரணையில் முன்னேற்றம் காண வேண்டும்.

இத்தகைய முன்னேற்றம் முடிவற்றது. "வெளிப்படையாக நாம் செய்யும் பூஜைகள், பற்றற்ற நிலைகொள்ளாது செய்யப்படும் பிரார்த்தனைகள் இவை முதற்கட்டங்களே" என்று கூறுகின்றன நமது வேதங்கள். அதற்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல மனத்தை ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் தியானம் உதவும். ஆனால், எப்போது அந்தப் பரம்பொருளை நாம் மனத்தால் உணருகிறோமோ, அப்போதே நாம் உயர்ந்த நிலையை அடைகிறோம்.

சிலுவையின்முன் மண்டியிட்டவன்கூட என்ன ஜபிக்கிறான்? 'யாரொருவர் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும், மின்னல்களுக்கும், நெருப்புக்கும் மேம்பட்டவரோ, எவர் மூலமாக இவற்றுக்கு ஒளி கிடைக்கின்றனவோ, அவரை நான் வணங்குகிறேன்' என்கிறான். ஆனால், வேறு யாரொருவர் மனத்தில் கொண்டு தொழும் பிம்பங்களையோ, அவற்றை வழிபடுவதையோ குற்றமாகச் சொல்வதில்லை. ஆத்ம விசாரணையின் ஒரு கட்டத்தில் அத்தகைய வழிபாடு தேவை என்பதை அவன் உணருகிறான். ஒரு குழந்தையும், பிற்காலத் தகப்பனே என்பதை உணர்ந்துவிட்டால் ஒரு முதியவரின் குழந்தைத்தனமே தவறு என்றோ, இளைஞர்கள் பாவம் செய்கிறவர்கள் என்றோ கொள்ளமுடியுமோ?

– சுவாமி விவேகானந்தர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com