நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்
Published on

முகநூல் பக்கம்

Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)

காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும், புத்தகங்கள் எடுத்துச் சென்று வாசிக்கவும் அனுமதி என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் முழுமுதற் காரணம் சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் பா.சேகர் அவர்கள்தான். இத்தனை தன்மையான அதிகாரி ஒருவரை இந்தத் துறையில் காண்பது மிக்க மகிழ்வான ஒன்றாகவே இருக்கிறது. படிப்பும், வாசிப்பும் சமூக மாற்றத்துக்கு பெரும் பங்காற்றும் என்பதை திடமாக நம்புகிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பல விஷயங்கள் உணர முடிந்தது. பலவற்றிற்கு மிக நுட்பமான பார்வைகளை முன் வைக்கிறார்.

குழந்தைகளுக்கான கலை, இலக்கியக் கொண்டாட்டம் சின்னமனூர் ஜூலை 30 நிகழ்வுக்கு முதல்நாள்தான் இவரைப்பற்றி என்னிடம் சொன்னார்கள் நண்பர்கள். உடனடியாக சந்திப்போம் எனச் சொல்லி சென்றோம். உட்காரவைத்து பொறுமையாக நிகழ்வைப் பற்றிக் கேட்டுக்கொண்டு, நேரம் ஒதுக்கி வருவதாகவும் கூறினார். சொன்னதுபோல் வந்து பாவனா ஸ்ரீக்கு சிறப்பு பரிசு வழங்கியும் சென்றார். இன்று மீண்டும் சந்தித்தபோது, "மிக முக்கியமான முன்னெடுப்பு. அடுத்து எந்த ஊரில் திட்டமிட்டிருக்கீங்க" என உடனடியாக கேட்கவும், பதில் இல்லை என்னிடம். பின் அவரே தொடர்ந்தார்… எந்த ஊரில் என்றாலும் முதலில் அங்கிருக்கும் காவல்துறை ஆய்வாளரை சென்று பாருங்கள், பல உதவிகள் கிடைக்கும். கொஞ்சம் முன்னமே நீங்கள் வந்திருந்தால் பல உள்ளூர் செலவுகளை நானே ஏற்பாடு செய்துக் கொடுத்திருப்பேன். எவ்வளவு முக்கியமான நிகழ்வு. எங்கள் காவல்துறை குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளையும் அனுப்பி வைத்திருப்பேன்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அன்றே கவனித்ததுதான் நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள் இருக்கிறது. அவற்றில் அரசியல் முதல் ஆன்மீகம் வரை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், போட்டித் தேர்வுகள் என அத்தனை தலைப்புகளிலும் புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் சிறார் நூல்கள் ஒன்று கூட இல்லை.

அதனை அவரிடமே பதிவு செய்துவிட்டு, அனைத்து நிகழ்வில் பங்குபெற்ற பள்ளிகளின் நூலகங்களுக்கு கொடுக்கப்பட்ட வானம் பதிப்பகத்தின் 55 நூல்கள் மற்றும் ஓங்கில் கூட்டம் + பாரதி புத்தகாலையம் இணைந்து வெளியிட்டியிருக்கும் 10 புத்தகங்கள் அடங்கியத் தொகுப்பை அவரிடம் கொடுத்தோம். அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. இன்னும் சொல்லப்போனால் "குழந்தைகளுக்காக இத்தனை புத்தகங்கள் வருகிறதா" என்னும் ஆச்சரியத்துடன்தான் அணுகினார்.

கூடவே நிகழ்வில் பேசியக் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினோம். ஓவியர் Sandran So Krishnan Sandru வரைந்த ஓவியத்தை சில வினாடிகள் ரசித்துப் பார்த்துவிட்டு புன்னகையுடன் பாராட்டிவிட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

இறுதியாக கிளம்பும்முன்,"தொடர்ந்து செயல்படுங்கள் இனியன். மிக முக்கியமான வேலைகள். எப்போது இந்தப்பக்கம் வந்தாலும் வாருங்கள் சந்திப்போம்" எனச் சொல்ல, விடைபெற்றோம்.

பல பிரச்னைகளுக்கு அதன் அடிப்படையை சீர் செய்யவேண்டும் எனச் சிந்திக்கும் காவல்துறை அதிகாரியை சந்தித்த  மகிழ்வுடன் கிளம்பி வந்தோம்.

– இனியன்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com