கொடியேற்றும் உரிமை… வாங்கிக்கொடுத்தவர் கலைஞர்

கொடியேற்றும் உரிமை… வாங்கிக்கொடுத்தவர் கலைஞர்
Published on

– ஆர்.முத்துக்குமார்

சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அதற்கான உரிமை அவ்வளவு சுலபத்தில் வந்துவிடவில்லை. அதன் பின்னணியில் மாநில உரிமைப் போராட்ட வரலாறு இருக்கிறது.

மாநில சுயாட்சி பற்றி தி.மு.க.வின் தலைவராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த மு.கருணாநிதி மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த 1970ஆம் ஆண்டு அது. மத்தியில் மைனாரிட்டி அரசாக இருந்த பிரதமர் இந்திரா காந்தி அரசுக்கு தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதன் காரணமாக, தி.மு.க. – இந்திரா காங்கிரஸ் இடையே நயமான நல்லுறவு இருந்தது.

அந்த இணக்கத்தைத் தனது கொள்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி. அந்தக் கோரிக்கை, தமிழ்நாட்டுக்கென்று தனிக்கொடி வேண்டும் என்பதுதான்.

'மாநில சுயாட்சி' என்று சொல்வதே 'பிரிவினை கோஷம்' என்ற விமரிசனம் தி.மு.க. மீது தீவிரமாக நிலவிய சூழலில், கருணாநிதியின் கொடி கோரிக்கைக்கு இந்திய அளவில் ஆதரவும் எதிர்ப்பும் கலவையாக வந்தன. "மாநிலத்துக்குத் தனிக்கொடி கோருவது ஒன்றும் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் கோரிக்கை அல்ல" என்றார் பஞ்சாப் முதல்வர் குர்ணாம் சிங்.

ஆனால், தனிக்கொடி கோரிக்கையை மைசூர் முதல்வர் வீரேந்திர பாட்டில் கடுமையாக எதிர்த்தார். "மற்ற மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்கவேண்டாம், நேரடியாக நிராகரியுங்கள்" என்றார் வீரேந்திர பாட்டீல். 'தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி தருவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும்' என்று தமிழ்நாட்டின் இந்திரா காங்கிரஸும் ஸ்தாபன காங்கிரஸும் ஒரே குரலில் பேசின. ஆனால், 'தனிக்கொடி கோரிக்கையை ஆதரித்த ம.பொ.சிவஞானம், சேர, சோழ, பாண்டியர்களின் வில், புலி, மீன் சின்னங்களை தமிழ்நாட்டுக் கொடியில் இடம்பெறச் செய்யவேண்டும்' என்றார்.

இதுவிஷயமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, "தனிக்கொடி கோருவதால் தேசிய ஒருமைப்பாட்டில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. தேசியக்கொடியை எப்போதும் போலத் தொடர்ந்து பயன்படுத்துவோம். அதேசமயம், தனிக்கொடி கோருவதால் தேசியக் கொடிக்குத் துளியளவு அவமதிப்பும் நேர்ந்துவிடாது" என்றார்.

தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளித்த பிரதமர் இந்திரா காந்தி, 'தமிழக அரசின் தனிக்கொடி கோரிக்கையை எந்தவித பரிசீலனையும் இல்லாமல் உடனடியாக நிராகரிக்கவேண்டும்' என்று சில தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தனிக்கொடி விஷயத்தில் இந்தியாவின் தேசிய கெளரவம் ஏதும் பாதிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கருதவில்லை. என்றாலும், இதுபற்றி மற்ற மாநிலங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டியது அவசியம் என்றார்.

மத்திய அரசின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட கருணாநிதி, மாநிலத்துக்குத் தனிக்கொடி விஷயத்தில் அரசியலமைப்புச் சட்டம் எந்தத் தடையும் போட்டுவிடவில்லை என்பதை பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து தெளிவுபடுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி மாதிரி தயாராக உள்ளது. அந்தக் கொடியின் கால் பகுதியில் இந்திய தேசியக் கொடி இடம்பெறும். மீதமுள்ள இடத்தில் தமிழ்நாடு அரசு இலச்சினையான கோபுரம் பிரதானமாக இடம்பெறும் என்றார். அந்தக் கொடியின் மாதிரியை செய்தியாளர்களிடமும் காட்டினார்.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் தனிக்கொடி கோரிக்கை குறித்து மத்திய அரசு எந்தவொரு பதிலையும் தெரிவிக்காத நிலையில், "சுதந்தர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குத் தரவேண்டும்" என்று 1974 பிப்ரவரியில் கோரிக்கை விடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி.

'குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும்', 'சுதந்தர தினத்தன்று பிரதமரும்' தேசியக் கொடி ஏற்றி வைப்பது போல, 'குடியரசு தினத்தன்று மாநில ஆளுநரும்', 'சுதந்தர தினத்தன்று மாநில முதல்வரும் கொடியேற்றலாம்' என்பது முதலமைச்சர் கருணாநிதியின் யோசனை. அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா காந்தி, ''சுதந்தர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றலாம்" என்ற ஆணையை வெளியிட்டார்.

அதன்படி 1974 ஆகஸ்டு 15 தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் சுதந்தர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றுவதற்கான உரிமைக்குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலித்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் மு.கருணாநிதி. அப்படி மு.கருணாநிதி முதன்முறையாகத் தேசியக்கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பும்போது எடுத்த புகைப்படத்தைத்தான் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com