“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”
Published on

சினிமா விமர்சனம்

– லதானந்த்

ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த இளம் பெண் ராஷ்மிகா மந்தனா. அப்படி அவர் நூல் பிடித்து ஒவ்வோர் இடமாக விசாரிக்கும் நேரத்திலேயே ராணுவ வீரரான ராம் (துல்கர் சல்மான்)  அவரது மனைவி  சீதா (மிருணாள் தாகூர்) ஆகியோரின் காதல் ஓர் அருமையான கவிதையைப் போலச் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்தக் கடிததத்தில் அப்படி என்னதான் இருக்கிறது, 1964ல் எழுதப்பட்ட கடிதத்தை 1985 வரை ஏன் சேர்க்க முடிவதில்லை என்பன போன்றவற்றைத் தொய்வில்லாமல் எதிர்பார்க்க வைத்திருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள்.

படம் ஆரம்பித்து 30 நிமிடம் கழித்துத்தான் துல்கர் படத்தில் என்ட்ரி ஆகிறார்.

கதை நிகழ்விடங்களான காஷ்மீர், காதலி வசிக்கும் ஹைதராபாத் மாளிகை, தீவிரவாதிகளின் இருப்பிடம், பாடல் காட்சி இடம்பெற்றிருக்கும் சிற்ப வேலைப்பாடமைந்த அரங்கம், பாகிஸ்தான் சிறை எனப் பலவும் தத்ரூபமாகக் காண்பிக்கப்படுகின்றன. நேர்த்தியான ஒளிப்பதிவு. விறுவிறுப்பான பின்னணி. ஆனால், பாடல்களின் எண்ணிக்கை அதிகம். அவைதான் சற்றே அலுப்பூட்டுகின்றன. படத்தின் நீளமும் கொஞ்சம் அதிகம்தான்.

டப்பிங் என்பது கொஞ்சம்கூடத் தெரியாமல் உதட்டசைவுகள் ஒத்துப்போயிருக்கின்றன. பாராட்டுகள். ஆனால் பல பாத்திரங்களின் முகங்களும், புராணங்களில் இருந்து எடுத்தாளப்படும் வசனங்களும்  'அக்கட தேச'த்தை அவ்வப்போது நினைவூட்டிச் செல்கின்றன.

இடைவேளை வருவதற்குள் மிருணாள் தாகூர்- துல்கர் அறிமுகக் காட்சி ஒரு திருப்பம் என்றால் இடைவேளையின்போது வரும் திருப்பமும் சுவாரசியமானது. அதைப்போலவே உச்சக் காட்சியிலும் உள்ள திருப்பமும் நன்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இடைவேளைக்கு மேல் மிருணாள் துல்கரைக் காணப் பரிதவிக்கும்போதே துல்கரின் முடிவை ஓரளவு நம்மால் யூகிக்க முடிந்துவிடுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், ரோஹிணி போன்ற   அறிமுகமான முகங்களைப் பார்ப்பதில் ஆறுதல் ஏற்படுகிறது.

காதல் மட்டுமல்ல, நாட்டுப்பற்றையும் சரியான விகிதத்தில் குழைத்துக் கதை செய்திருக்கிறார்கள்.

படம் நடக்கும் காலகட்டத்துக்கு ஏற்ப, புகைப்படக் கேமிரா, தொலைபேசிக் கருவிகள், வாகனங்கள் மற்றும் ஆடையணிகலன்களைப் பார்த்துப் பார்த்துக் கவனமுடன் கையாண்டிருக்கிறார்கள்.

"நாட்டுக்காகப் போராடுபவன் வீரன்; தர்மத்துக்காகப் போராடுபவன் ராமன்", "Love may be blind; but people around are not" போன்ற வசனங்கள் கவனிக்கவைக்கின்றன.

ஹைதராபாத், ஜம்மு, காஷ்மீர், கார்கில், அகர்தா, ராஜமுந்தரி, பாகிஸ்தான் எனப் பல லொகேஷன்களில் படம் பயணித்தாலும் அலுப்பு ஏற்படுவதில்லை.

காதலர்கள் இருவரில் ஒருவர் பெரும் பணக்காரராக இருப்பதும் அதைத் தன் இணையருக்குத் தெரிவிக்காமல் மறைப்பதும் ஏற்கெனவே 'கஜினி' திரைப்படத்தில் பார்த்ததை நினைவூட்டுகின்றன.

"குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்" என்று விடுகதை போலச் சொல்லப்படும் வாசகம் படத்தின் முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. அதைச் சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரசியம் இருக்காது என்பதால் அதை சொல்லாமல் விட்டுவிடுவோம்.

துலகர், மிருணாள்சென் மற்றும் ராஷ்மிகாவின் நடிப்பு கனகச்சிதம்.

மொத்தத்தில்: சீதா ராமம் = பார்த்தால் ரசிக்கலாம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com