தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது..திறந்திருந்த ஜன்னலின் வழியே கசிந்து வந்த வெளிச்சக் கதிர்களும், மாணவர்களின் ரீங்காரக் குரல்களும் அறையினுள் அமர்ந்திருந்த என் மனதை மயிலிறகாய் வருடின. கூடவே என் பள்ளிக்கால ஞாபகங்களும் மெல்ல என்னுள் மொட்டவிழ்ந்தன..அரிதாக வாய்க்கும் இதுபோன்ற தனிமை எப்போதுமே எனக்குப் பிடிக்கும்..உணவு இடைவேளையின்போது அவசர வேலையாக வங்கிக்குச் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தேன். சக ஆசிரியர்கள் உணவறையில் இருப்பார்கள். இனிமேல் போய் அவர்களுடன் சேர்ந்துகொள்வதற்கும் அதிக அவகாசமில்லை. ஆகவே, பணியாளர்கள் அறையிலேயே அமர்ந்திருந்தேன்.."என்னங்க ஜீவா, எங்களோட வந்து ஜாயின் பண்ணியிருக்கலாமே?" எனக் கேட்டபடியே அறையினுள் வந்த சக ஆசிரியனான நந்தகுமார் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்..அக்குரலில் நிகழ்காலத்துக்கு வந்து, கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே, "லேட்டாயிடுச்சு நந்தா" எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் அப்பள்ளியில் ஆசிரியர்களாகச் சேர்ந்து நான்கு வருடங்களாகின்றன. கூடுதலாக, எங்கள் வீடுகளும் அருகருகில் இருக்கின்றன..நந்தகுமார் என்னிடம் நட்புடன் நெருங்கிப் பழகினாலும் நான் எப்போதும் ஒருவிதத் தயக்கத்துடனும், ஒதுக்கத்துடனுமே பழகி வந்தேன். அதை நந்தகுமார் இந்நேரம் உணர்ந்திருப்பான். இருந்தாலும் வெளிப்படையாக எதையும் கேட்டுக் கொண்டதில்லை.."மாஸ்டர்…" என்ற குரல் அறையின் வாசலில் ஒலிக்க, இருவரும் திரும்பிப் பார்த்தோம். ஒடிசலான தேகத்துடன், நெடுநெடுவென்ற வளர்த்தியுடன் ஒன்பதாம் வகுப்பு மாணவன், கதிர் நின்று கொண்டிருந்தான்..அதுவரையில் இலகுவாகப் பேசிக் கொண்டிருந்த நந்தகுமாரின் முகம் திடீரென்று இறுக்கமானது. "உள்ளே வா" என்ற நந்தகுமாரின் குரலில் இருந்த வேகமும் தொனியும் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது..விடைத்தாள்களைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்த எனக்கு, 'ஏன் இந்தக் கடுமை?' எனத் தோன்றினாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை..ஒருகணம் தயங்கிய கதிர் மெல்ல எட்டுகள் வைத்து அறையினுள் வந்தான். "ரொம்பப் பெரியவனாகிட்ட போல?" என்ற நந்தகுமாரின் பேச்சில், அது பாராட்டா, இல்லை, பரிகாசமா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. கதிரும் அப்படியே உணர்ந்திருப்பானோ என்னவோ பதில் சொல்லத் தெரியாமல் அமைதி காத்தான்.."நேத்து ஆடின மேட்சுல ஜெயிச்சுட்டீங்களாமே?" என நந்தகுமாரிடம் இருந்து அடுத்து வந்து கேள்வியிலும் அதே கடுமை. "வெற்றி பெற்றதற்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்" என்ற யோசனை எனக்குள் பிறந்தது.."ஆமாங்க மாஸ்டர்…" கதிர் சுருக்கமாகப் பதில் தந்தான். பட்டென்று தன் நாற்காலியில் இருந்து எழுந்தான் நந்தகுமார். அந்த வேகத்தில் நாற்காலி சற்று நகர்ந்து 'க்ரீச்' எனச் சத்தம் எழுப்பியது..அதுவரையில் குனிந்து என் வேலையில் கவனமாக இருப்பதை போல் அவர்கள் பேச்சின் மேல் கவனத்தை வைத்திருந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். நந்தகுமாரின் முகம் சினத்தில் சிடுசிடுவென்று இருந்தது..கதிரைப் பார்க்க, உள்ளுக்குள் சுரந்த பயத்தின் நிழல் அப்பட்டமாக அவன் முகத்தில் மண்டியிருந்தது .."நானில்லைன்னா 'பேஸ்கட் பால்' பத்தி யோசிச்சிருப்பியா? இல்லை, விளையாடத் தெரிஞ்சிருக்குமா உனக்கு?" எனக் கேட்ட நந்தகுமாரிடம் மிதமிஞ்சிய ஆத்திரம் வெளிப்பட்டது..ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் விளையாட்டுத் திறமைகளைக் கண்டுபிடித்து அதை வெளிக்கொணர்வது நந்தகுமார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை ஏன் கதிரிடம் சொல்லிக் காட்டுகிறான் என்ற சிந்தனை எனக்குள் ஓடியது.."ஜெயிச்சதை வந்து என்கிட்ட சொல்ல முடியலையா? கூப்பிட்டு வச்சுக் கேட்கணுமா? அவ்வளவு பெரியாளாகிட்டீங்க" அப்படித்தானே… நந்தகுமார் பொரிந்து தள்ளவும் அவன் கடுமையின் காரணம் எனக்கு விளங்கியது..கதிருக்கும் நந்தகுமாரின் கோபம் புரிந்திருக்க வேண்டும். அதன் எதிரொலி அவன் கருத்த முகத்திலும், நடுங்கிய உடலிலும் தெரிந்தது. முத்துக்கள் அணிவகுத்து நிற்பது போல் கதிரின் முகமெங்கும் வேர்வைத் துளிகள். மூக்கு விடைக்க, அழத் துடிக்கும் விழிகளைக் கட்டுப்படுத்த கதிர் வெகுவாகப் பிரயாசைப்பட்டது புரிந்தது எனக்கு..விஷயம் இதுதான்! சென்ற வாரக் கடைசியில் பள்ளிகளுக்கிடையே பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கூடைப்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. கூடைப்பந்து சொல்லித் தரும் பயிற்சியாளர் அதைப் பற்றிய விவரங்களை உடற்கல்வி ஆசிரியரான நந்தகுமாரிடம் பகிர்ந்து கொண்டார்..திடீரென்று அறிவித்ததால் பள்ளி அணியை அனுப்ப நந்தகுமார் விரும்பவில்லை. அத்தோடு பதினைந்து வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடம் போதிய திறமையுமில்லை என எண்ணினான்..ஆனால், மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கெஞ்ச, 'சரி, என்னைத் தொல்லை செய்யாதீங்க. கிளாஸ் கட் பண்ணக்கூடாது… என்கிட்டே எதையும் எதிர்ப்பார்க்காதீங்க…' என்ற எச்சரிக்கையுடன் அரைமனதாக அனுமதி வழங்கியிருந்தான் நந்தகுமார்..அனுமதி கிடைத்ததும் பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் மாணவர்கள் தீவிரமாகப் பயிற்சியை மேற்கொண்டனர். சொந்த செலவில் பள்ளியின் சார்பாகப் போட்டியிலும் பங்கேற்றனர். இறுதிச் சுற்று வரையில் முன்னேறி வெற்றியும் பெற்றனர். அவர்களுக்குச் சான்றிதழ்களுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன..பள்ளிக்கு வந்த மறுநாளே முதல் வேலையாக அணியின் தலைவனான கதிர் இதைப் பற்றி நந்தகுமாரிடம் தெரிவிக்கவில்லை. அன்று காலை வேளை உடற்கல்வி வகுப்பின் போது அணியிலிருந்த மற்றொரு மாணவன் வழியே பேச்சுவாக்கில் அவர்கள் வெற்றி பெற்றதை அறிந்து கொண்டிருக்கிறான் நந்தகுமார்..இதைப் பற்றி காலையில் நந்தகுமார் மற்றொரு ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தது என் செவிகளில் விழுந்தது. நான் வகுப்புக்குச் செல்லும் அவசரத்தில் அதற்கு மேல் பெரிதாக எதையும் சிந்திக்கவில்லை. ஆனால், நந்தகுமார் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுவான் என நான் எதிர்பார்க்கவில்லை. அதன் எதிரொலியாக இப்போது கதிரை அழைத்து கண்டித்துக் கொண்டிருக்கிறான்.."மாஸ்டர்… நீங்க வரலைன்னு…" கதிருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் இழுக்க,."அதுக்கு? என்ன ஆச்சுன்னு வந்து சொல்லக்கூட மாட்டியா? தனியாப் போய் ஜெயிச்சுட்டேங்கிற கர்வம் வந்திடுச்சு. அதான் கத்துக் கொடுக்கிறவங்களை மதிக்கத் தெரியலை. முதல்ல ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லி 'கோச்சை' நிறுத்தறேன். அப்புறம் எப்படி விளையாடறன்னு பார்க்கலாம்" என அடக்கப்பட்ட கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தான் நந்தகுமார்..வார்த்தைகள் வந்து விழுந்த வேகத்தில் அவன் நிச்சயம் அதைச் செய்து விடுவான் என்றே எனக்குத் தோன்றியது. அப்படியென்றால் கதிரின் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் கருகிப் போய்விடுமா? ஒருவித பயம் என் நெஞ்சை அழுத்த ஆரம்பித்தது.."மாஸ்டர், தெரியாம…" எனத் தவிப்புடன் சொன்ன கதிரின் வறண்ட உதடுகள் வெம்பித் துடிப்பது தெரிந்தது..இந்நிகழ்வால் நந்தகுமாரின் 'நான்' என்கிற அகந்தை சீண்டப்பட்டுவிட்டதைப் புரிந்துகொண்டேன். உயர்த்திவிட்ட தன்னை மாணவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனக் கருதுகிறான். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் சம்மந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் நல்லதல்ல. தடுக்க வேண்டும். என்னால் முடியும்! என்னால் மட்டுமே முடியும்!."கதிர், இனிமேல் இப்படிச் செய்யாத. என்ன ஆனாலும் கற்றுத் தர்ற ஆசானுக்கு மரியாதை தரணும். அவங்க இல்லாம உன்னால் எதையும் சாதிக்க முடியுமான்னு யோசி" என இடையிட்டுத் தன்மையாக எடுத்துச் சொன்னேன்..பாலைவனத்தில் கிடைத்தத் தடாகமென என் சொற்களைப் பற்றிக் கொண்ட கதிர், "சரிங்க சார்… சரிங்க சார்… இனிமேல் பண்ணமாட்டேன்" என அவசரமாகத் தலையாட்டினான்.."சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என மீண்டும் வலியுறுத்தி அவனை அனுப்பி வைத்தேன்..எதற்கும் ஒதுங்கிச் செல்லும் நான் எதிர்பாராதவிதத்தில் இந்த விஷயத்தில் தலையிட்டதை நந்தகுமாரால் நம்ப முடியவில்லை. அப்படியே பிடித்து வைத்தப் பிள்ளையாரைப் போல் அசையாமல் நின்றிருந்தான்..'கா… கா.. கா..' என வெளியில் இருந்து காக்கை ஒன்று கத்திய சத்தத்தில் சுயவுணர்வு பெற்ற நந்தகுமார், "ஏன், அவனைப் போகச் சொன்னீங்க? எனக்கு… எனக்கு…" என வார்த்தைகள் கிடைக்காமல் திணறினான்..வார்த்தைகளைக் கோர்த்து என்னாலும் பேச முடியவில்லை. நாழிகைகள் மௌனமாகக் கரைந்து கொண்டிருந்ததன. புருவ மத்தியில் ஒரு சுளிப்புடன் என்னையே பார்த்திருந்தான் நந்தகுமார்..கதிரிடம் நந்தகுமார் உதிர்த்த வார்த்தைகளின் அதிர்வில் என் நினைவடுக்குகளில் இருந்த பழைய ஞாபகங்கள் விழித்திரையில் படமாக ஓடின. என் இமையோரங்களில் நீர்த்துளிகளின் அணிவகுப்பு!."நந்தா, இந்த வேலைக்கு எதுக்கு வந்தீங்க? ஆத்ம திருப்திக்கா, இல்லை, உங்களை எல்லோரும் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடணும் என்கிற அல்ப சந்தோஷத்துக்கா?" என் கேள்வியால் மட்டுப்பட்டிருந்த நந்தகுமாரின் கோபம் மீண்டும் தலைதூக்கியது புரிந்தது..விளையாட்டுத் துறையில் நந்தகுமாருக்கு அதீத காதல். ஆகவே, விளையாட்டில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு முன்னின்று உதவுவதே அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் என முடிவு செய்து அதன்படி பயணிக்கிறான். படித்து முன்னேறி உடற்கல்வி ஆசிரியராகிப் பலரையும் வழி நடத்துகிறான். இவையெல்லாம் தெரிந்திருந்தும் நான் இப்படிக் கேட்பது அவனுக்குக் கண்டிப்பாகக் கோபத்தை வரவழைக்கும்..பதிலளிக்காமல் அவன் என்னையே உறுத்து விழிக்க, "கதிர் வந்து ஜெயிச்சதை சொல்லலைன்னு உங்களுக்கு 'நான்' என்கிற அகந்தைத் தலைத்தூக்கியிருக்கு நந்தா…" என்ற என் குற்றச்சாட்டில் அதிர்ந்து போனான். பின்னே பேசாமடந்தையாக இருப்பவன் இவ்வளவு பேசினால்?."ஜீவா !" என உரத்தக் குரலில் கத்தி, தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான் நந்தகுமார்..அதைப் பொருட்படுத்தாமல், "சுயநலமில்லாம மாணவர்களைச் சிறப்பா உருவாக்கிட்டு இருக்கிங்கன்னு நினைச்சேன் நந்தா. ஆனா பிரதிபலன் எதிர்பார்க்கறீங்க. எல்லோரும் உங்களைப் பாராட்டணும்னு நினைக்கறீங்க" என வார்த்தைக் கங்குகளைச் சுருட்டி அவனை நோக்கி எறிந்தேன்..அது அவன் மனதைச் சுட்டிருக்கக் கூடும். சிலையென நின்றிருந்தான். எனினும் என் பேச்சை நான் நிறுத்துவதாகயில்லை.."பசங்க இங்க பாடத்தை மட்டும் படிக்க வர்றதில்லை. நல்ல நெறிகளையும், ஒழுக்கத்தையும் கத்துக்கறதுக்கும் தான். கதிர் தப்பே செஞ்சிருந்தாலும் திருத்தறது நம்ம கடமை நந்தா. ஆனா, 'கோச்சை' நிறுத்தறேன்னு சொல்லி அவனுக்குப் பழி வாங்கற பழக்கத்தைக் கத்துத் தரப் போறீங்களா?" இப்போது சாட்டையாய் சுழற்றி அடித்தேன்.."வாழ்க்கையின் நெறிமுறைகளை மாணவர்களுக்குப் புரிய வைக்கறதில ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கு. அவங்க கல்லாகவே இருக்கிறதும் சிற்பமாக மாறுவதும் நம்ம கையில மட்டுமே இருக்கு..மாணவர்கள் கிட்ட தோன்றும் ஆணவம், அகங்கங்காரம், அகந்தை, கர்வம் போன்ற தேவையற்ற துகள்களை எல்லாம் நம்ம தான் உளி வச்சு செதுக்கணும். ஒவ்வொண்ணா உதிர்ந்து விழச் செய்யணும். அதையெல்லாம் உதிர்க்கிற சக்தி சிற்பியான நம்மகிட்டே இருக்கு" என மேலும் தொடர்ந்தேன்..நந்தகுமாரின் முகத்தில் கலவையான உணர்வுகள் தோன்றி மறைந்தன. ஆனால் கண்டிப்பாக முன்பிருந்த கோபம் அதில் இல்லை.."கதிர் மாதிரியே நானும் இப்படி ஒரு சூழ்நிலையில நின்னிருக்கேன். 'ஹாக்கி மேட்ச்'ல ஜெயிச்சதை எங்க மாஸ்டர்கிட்ட சொல்லலை. அந்த வயசுல அவ்வளவுதான் அறிவு.".அன்று சிறுவனான தான் செய்த தவறை ஆசிரியர் சுட்டிக் காட்டி விளக்கி இருந்திருந்தால் 'ஹாக்கி'யில் இன்று முன்னேறியிருப்பேன். விளையாடுவதில் அத்தனை தாகம் இருந்தது எனக்கு..மாறாக நான் செய்த சிறு தவறைப் பூதக் கண்ணாடிக் கொண்டு பார்த்து, தலைமையாசிரியரிடம் சொல்லி, மற்றவர்கள் முன்னால் அசிங்கப்படுத்தி, தன் அதிகாரத்தால் பயிற்சியாளரை நிறுத்தி, என்னை மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களையும் அறவே விளையாட்டிலிருந்து ஒதுக்கிவிட்டார் உடற்கல்வி ஆசிரியர்..அச்செயலின் வீரியம் என் மொத்த வாழ்க்கைப் பயணத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, என்னால்தான் மற்ற மாணவர்களும் விளையாட முடியாமல் போய்விட்டது என்ற குற்றக் குறுகுறுப்பும் சேர்ந்து கொண்டது..அன்றிலிருந்து ஒருவித தயக்கமும், கூச்ச சுபாவமும், ஒதுக்கமும் என்னை ஆட்கொண்டு இன்று வரையிலுமே என் தைரியத்தை உடும்புப்பிடியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதை யாராவது அறிவார்களா?.கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், 'எங்கிருந்து இவ்வளவு தயக்கமும், கூச்சமும் இவனுக்கு வந்ததோ? கொஞ்சம் கூட முதுகெலும்பு இல்லாம இருக்கிறான்' என என் அன்னை அடிக்கடி புலம்புவார். அவருக்கு அதன் பின்னனியில் உள்ள வலி புரியுமா?.இந்தச் சுபாவத்தாலேயே எனக்கு வேலை முதல் கல்யாணம் வரையில் அனைத்திலும் தாமதம்..என்னவோ நான் எதற்கும் லாயக்கில்லாதவன் என்ற எண்ணம் அடிக்கடித் தலைதூக்கும். ஆசிரியரான பின்னர் சற்று பரவாயில்லை. ஆனாலும் என் மனதில் சிறுவயதில் தோன்றிய தாழ்வுமனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதை எப்படிக் களைவது என்றும் புரியவில்லை..ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! மற்ற மாணவர்களின் மனதில் அது விதைக்கப்படுவதைக் கண்டிப்பாக என்னால் தடுக்க முடியும்.."எப்படியோ சயின்ஸ் டீச்சராகிட்டேன். ஆனா நிறைவேறாத ஆசைகளும் ஒதுக்கப்பட்ட வலிகளும் ஆழ்மனசுல உட்கார்ந்துட்டு அப்படியே கீழே இழுக்கும் நந்தா. இயல்பா பேசவும் நடந்துக்கவும் முடியாது" என நான் சொல்கையில், 'ஏங்க இப்படி முசுடா இருக்கீங்க…' என்றுஅடிக்கடி சீண்டும் என் மனைவியின் பேச்சு சன்னமாக என் செவிகளில் உரசிச் சென்றது.."அன்னைக்கு அவர் பெரிய மனசு பண்ணித் தட்டிக் கொடுத்திருந்தா என் கனவுகளுக்கு வண்ணம் பூசியிருக்கலாம். வாழ்க்கையையும் தைரியமா எதிர்கொண்டிருக்கலாம். ப்ச்ச்…" என நிறுத்தி தரையை வெறித்துப் பார்த்தேன்..மதியவேளை வகுப்புகள் தொடங்குவதற்கு நேரமாகிவிட்டது எனப் பள்ளி மணி ஒலித்து என்னை மீண்டும் பேச வைத்தது.."என் கதையை விடுங்க… கதிரை சிற்பமா மாத்தப் போறீங்களா? இல்லை, உங்க அகந்தைகக்குத் தீனி போடலைன்னு அவன் கல்லாகவே இருக்கட்டும்னு விடப்போறீங்களா?" என நிறுத்தி நந்தகுமாரைப் பார்த்தேன்..'இன்னொரு ஜீவாவை உருவாக்கப் போறயா?' எனக் கேட்காமல் கேட்டதை நந்தகுமார் புரிந்து கொண்டதை அவன் முகத்தில் இருந்த தெளிவும், புன்னகையும் எனக்குச் சுட்டிக் காட்டின..மெல்ல அருகில் வந்து என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டான். அதில் ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது!.சிற்பங்களின் துகள்களை உதிர்ப்பதற்குச் சிற்பியின் உளி தயாராகிவிட்டது!