இந்தச் சிறுமி எதிர்காலத்தில்  இந்தியாவிற்காக செஸ் ஆடுவார்

இந்தச் சிறுமி எதிர்காலத்தில்  இந்தியாவிற்காக செஸ் ஆடுவார்

Published on

வினோத்

சத்தலான ஆரம்ப விழா, சிறப்பான ஏற்பாடுகளுக்காக அனைத்து நாட்டு வீர்களின் பாராட்டுகளைத்தாண்டி  இந்த ஒலிம்பியாட்டில் கவர்ந்த விஷயங்களில் ஒன்று சிறுவர் சிறுமியர் பெருமளவில் பங்கேற்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த எந்த ஒலிம்பியாட்களிலும்  இத்தனை சிறுவர்களை பார்த்ததில்லை என்றார் சர்வதேச செஸ் அமைப்பின் தலைவர்.

இந்த சிறுவர் பட்டாளத்தில் பலர் தமிழக நகரங்களிலிருந்து பெற்றோர்களுடன்  வந்திருப்பவர்கள். அமைதியாக கவனமாக ஆட்டங்களை கவனிக்கிறார்கள். உடன் வந்திருக்கும் பெற்றோர்கள் விளக்கிச் சொல்லுகிறார்கள். " டிஸ்ட்ர்ப் பண்ணாதே  நான் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்" என்று ஒரு பையன் அம்மாவை அதட்டியதைக்கூட பார்க்க முடிந்ததது.

இந்த  ஒலிம்பியாட்டில் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர்  பாலஸ்தீன நாட்டின் பெண்கள் அணியைச் சேர்ந்த 8 வயது ராண்டா செடர். செஸ் ஒலிம்பியாட்டின் மிக இளவயது பங்கேற்பாளரான இவர் 4 சுற்றுகளில் ஒரு சுற்றில் 20 வயதுடைய வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். இவர் டீமீல் உடன் வந்திருக்கும் அக்காக்களுக்கு வயது 20க்கும் மேல்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் ராண்டா. அந்த டீமில் ஒருவருக்குத்தான் ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது.  இந்த சிறுமி சொல்லும் ஒரு வார்த்தையை இரண்டு  வரிகளாக மொழி பெயர்க்கிறார் அவர்.

"பாலஸ்தீன  நாட்டில் நிலவும் போர் கலவரம்  போன்ற  அத்தனை பிரச்னைகளுக்கும் நடுவே இந்த விளையாட்டைக் கற்று, உள் நாட்டு போட்டிகளில் ஜெயித்து, இப்போது ஒலிம்பியாட்  அரங்கில் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் இந்தப்பெண்" என்று  வியந்து கொண்டே நகர்ந்த நம்மை அடுத்து  தாக்கியது ஓர் உள்ளூர் ஆச்சரியம்.

மாமல்லபுரத்தில் நடைபெறும்  போட்டியைக் காண  வந்தவர்களில் அரியலூரைச் சேர்ந்த 7 வயது  ஷர்வானிகாவும் ஒருவர். அவர்  ஆர்வத்துடன் விளையாட்டுக்களை  கவனித்துக்கொண்டிருந்தார்.

இரண்டாம் நாள் போட்டிகள் முடிந்தபின் போஸ்வானவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் பார்வையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பார்வையாளர்களுக்காக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. சிலர் செஸ் போர்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த டிங்க்வென்  என்னுடன் யாராவது விளையாட வருகிறீர்களா?  என கேட்டார். அவரின் அந்த கேள்வி சவால் விடுவது போல இருந்தது. அப்போது  இந்த அரியலூரை சேர்ந்த மாணவி ஷர்வானிகா, "நான் வருகிறேன்" எனக் கூறினார். அப்போது அங்கிருந்தவர்கள் அச்சிறுமியின் தைரியத்தை பாராட்டி கைதட்டி வரவேற்றனர்.

டிங்க்வென்னும் "வா மோதி பார்க்கலாம்" என சிறுமியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டருடன் 7 வயது சிறுமி ஆடுவதை அங்கிருந்தவர்கள் ஆர்வமாகப் பார்த்தனர். அப்போது சிறுமியின் ஒவ்வொரு நகர்த்தலிலும் டிங்க்வென்னை  திக்குமுக்காட வைத்தது. சிறுமியை  "கத்துக்குட்டி"  என்று  நினைத்து ஆடத் தொடங்கிய அவர் ஒருகட்டத்தில் சீரியஸ் ஆக ஆடவேண்டியதாயிற்று.  சிறுமியின் ஒவ்வொரு நகர்த்தலையும் பார்த்து வியப்படைந்தார் அவர்.  சிறுமி  அவரது ஒவ்வொரு காய்களையும் வெளியேற்ற ஆரம்பித்ததை கண்டு ஆடிப்போனார். ஒரு கட்டத்தில் அவர் எவ்வளவோ முயற்சித்தும் அவரின் காய்கள்  ஷர்வானிகாவிடம் இருந்து தப்பவில்லை.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த காய்களை வெளியேற்றி போஸ்வானா நாட்டு கிராண்ட்மாஸ்டரை ஷர்வானிகா வீழ்த்தினார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் பயங்கர சத்தத்துடன் கைதட்டி சிறுமியை ஆரவாரம் செய்து கொண்டாடினர்.  அரங்கமே அதிர்ந்தது.

"நான் நான்கு வயதிலிருந்தே செஸ் விளையாடி வருகிறேன், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறேன், ஏழு வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளேன்" என்றார் அந்தச் சிறுமி.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடியன்ஸ் ஆக வந்து வெளிநாட்டு செஸ் கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி வீழ்த்தியுள்ள சம்பவம் ஒர் புதிய சரித்திரம்.

ஷர்வானிகாவின் வெற்றியை போஸ்வானா நாட்டு வீரர் டிங்க்வென் வெகுவாக பாராட்டினார். "இச்சிறுமி எதிர்காலத்தில் பெரிய வீராங்கனையாக வருவார்… இந்தியாவுக்காக விளையாடுவார்"  என்று சொல்லி அந்த குழந்தையை அப்படியே தூக்கிக்கொண்டார் டிங்க்வென்.

ஷர்வானிகா இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பண வசதி இல்லை என்பதால் அரசின் உதவியை அவர் கோரியுள்ளார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com