கவனிக்கப்படாத இயற்கை

கவனிக்கப்படாத இயற்கை
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

ங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில் தனியாக வசீகரிக்கும் – சோம்நாத்பூர்! ஒரு நாள் திடீரென 'சரி கிளம்புங்க' என்று குடும்பத்துடன் சோம்நாத்பூர் கிளம்பினேன்.

ஹோய்சாளர்களா செதுக்கிய இந்தக் கோயில் இன்று முழுமையாக இருக்கிறது. அதைக் குறித்து விரிவாக பிறகு எழுதுகிறேன். இந்தக் கடைசிப் பக்கத்தில் நம் அருகில் ஆனால் நாம் கவனிக்க தவறிய இயற்கையைப் பற்றிக் கூறுகிறேன்.

சோம்நாத்பூர் சென்று வரும் போது இரண்டு பக்கமும்  கரும்புத் தோட்டங்கள். அதற்கு மேல் அழகான பூக்களைக் கண்டேன். பொங்கலுக்குப் பொங்கல் மட்டும் கரும்பு பார்த்திருந்த எனக்குக் கரும்பு பூக்குமா? என்று சந்தேகம் வர, காரை நிறுத்திவிட்டு அந்த மக்காச் சோளக் கதிர் போன்ற 'கவரி வீசும்' அந்தக் கரும்புப் பூக்களை ரசித்துவிட்டுப் புறப்பட்டேன்.

சில வருடங்கள் முன் 'நெற்பூ' என்று இன்னொரு ஆச்சரியம் கண்களில் பட்டது. நெல்மணியை உற்று நோக்கினால் அதில் பூக்கள் தென்படும். நெல்லுக்கு இந்தப் பூதான் ஆதாரம். காற்றில் உள்ளக் கனிமங்களைக் கவர்ந்து அதை ஒளிச்சேர்க்கையின் மூலம் நெல்லுக்குப் பாலாக மாற்றி அனுப்புகிறது!

அவசரமாக 100 கிமீ வேகத்தில் பசுமையான வயல்களை உரசிக்கொண்டு செல்வதால் இதை எல்லாம் கவனிப்பதில்லை.

சில வருடங்கள் முன் ஸ்ரீ கூர்மம் என்ற இடத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு பெரிய குளம். அதன் அருகில் பெரிய அரச மரம். மரம் முழுக்க வௌவால்கள் பறவைகள் போலப் பறந்துகொண்டும் தொங்கிக்கொண்டு இருந்தது.

பொதுவாக வௌவால்கள் என்றால் பயம் கிடையாது, ஆனால் சுஜாதா 'கரைகண்ட ராமன்' என்ற சிறுகதையில் கடைசியில் 'வௌவால்களுக்கும் ரேபிஸ் (Rabies) உண்டாம்' அப்போது அவை கடிக்குமாம். கடித்து ஹைட்ரோ ஃபோபியா (hydrophobia) வந்து பலர் செத்துப்போயிருக்கிறார்கள் என்று எழுதியிருப்பார். அதைப் படித்ததிலிருந்து எனக்கு வௌவால்களைக் கண்டால் பயம்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வௌவால்களை கேமரா கொண்டு 'ஸூம்' செய்து பார்த்த போது நரிகள் தலைகீழாக தொங்கிக்கொண்டு இருந்தது போலக் காட்சி அளித்தது.

அரச மரத்தின் அருகில் இருந்த குளத்திற்கு நடுவில் ஒரு சிறு மண்டபம் தெரிந்தது. அதன் உள்ளே சிறு கல் போன்ற ஒன்று தெரிந்தது. மீண்டும் கேமரா கொண்டு அதை உற்று நோக்கிய போது அது ஓர் ஆமை என்று கண்டு பிடித்தேன்.

மைசூர் அருகில் இருக்கும் பாண்டவபுரா என்ற இடத்துக்குச் சென்ற போது முட்டை கோஸ் விளைந்திருந்தது. வண்டியை நிறுத்தினேன். அங்கே இருந்த  விவசாயிடம் கோஸ் கிடைக்குமா என்று கேட்டவுடன் கை நிறைய அள்ளிக் கொடுத்தார்.  எவ்வளவு வற்புறுத்தியும் பணம் வாங்க மறுத்துவிட்டு "சாப்பிடத் தானே கேட்கிறீர்கள், வியாபாரமா செய்யப் போகிறீர்கள்?" என்றார். இயற்கையுடன் மனிதர்களையும் பார்த்த திருப்தியில் அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com