
அண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகம் பல துணிச்சலான இளைஞர்களைச் சந்தித்து வருகிறது. கதாநாயக நாயகிகளின் புகழ் வெளிச்சத்தை மட்டும் நம்பாமல், புதிய களம், வலுவான திரைக்கதை, இயல்பான சூழல் நம்பாமல் தங்கள் குழுவின் உழைப்பை மட்டுமே நம்பி செயலாற்றும் இளைஞர்கள் இவர்கள். இவர்களின் படைப்புகள் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் முன்னரே இம்மாதிரி படங்களைத்தேடி போற்றி பாராட்டும் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்று குவிக்கிறார்கள். அப்படி ஒரு படமான 'வாய்தா'வை இயக்கியிருக்கும் மஹிவர்மனை சந்தித்தோம். இவர் விஸ்காம் படித்தவர். கவிதை, கட்டுரை எழுதி வருபவர். பல்வேறு பத்திரிகைகளில் பக்க வடிவமைப்பாளராக இருந்தவர். மறைந்த இயக்குனர் தாமிராவிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார் மஹிவர்மன். அவரைச் சந்தித்தோம்.
படம் நீதிமன்றங்களின் நடைமுறைகளை விமர்சிப்பதாக சொல்லப்படுகிறதே?
விமர்சிக்கவில்லை. நிதர்சனத்தைப் பேசுகிறது. நமது அரசு, அரசியவாதிகள், அதிகார வர்க்கம் என பலவற்றில் நம்பிக்கை இழந்த மக்கள் கடைசி நம்பிக்கை வைத்திருப்பது நமது நீதிமன்றங்களை தான். நீதிமன்றங்களை கோயில் போல நினைப்பவர்கள் நம் மக்கள். ஆனால் நீதிமன்றங்கள் புனிதத் தன்மை கொண்டவை அல்ல. இங்கேயும் தவறுகள் நடக்கிறது. இதையும் கேள்விக்கு உட்படுத்த முடியும் என்று இந்த படத்தில் சொல்ல வருகிறேன். ஜாதிய ஏற்ற தாழ்வுகளும், பொருளாதார சம நிலையின்மை போன்ற பல்வேறு படிநிலைகள் நீதி மன்றத்தின் வழக்கின் போக்கை மாற்றும் தன்மை கொண்டவை என்று பதிவு செய்துள்ளேன். மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு சிறிய வழக்கு எப்படி மேற்சொன்ன காரணங்களால் பாதிக்கப்படுகிறது என்றும் சொல்லிருக்கிறேன்.
விளிம்பு நிலை மக்களை பற்றி சினிமாவில் சொல்லுவதே இப்போது பேஷன் ஆகிவிட்டது. பரபரப்புக்காகத்தானே இந்த கதையை தேர்வு செய்தீர்கள்?
தவறு. 'ஜெய் பீம்', 'கர்ணன்' படங்களுக்கு முன்பே 2017ல் இந்த கதையை தேர்வு செய்துவிட்டேன். கொரோனா பிரச்னையால் கால தாமதம் ஆகிவிட்டது. கலை, இலக்கியம் அனைத்தும் மக்களுக்கானது என்று நினைப்பவன் நான். நீங்கள் எப்படி நினைத்தாலும் என் படங்களில் வர்ண, வர்க பேதங்களை பற்றிய பதிவுகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
வண்ணார் சமூக மக்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது?
நமது உடலில் உள்ள இரண்டு கைகளில் வலதுகை திடீரென்று செயல்பட முடியாமல் போனால் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிப்போம். இரண்டு கைகளையும் பயன்படுத்தி தொழில் செய்ய வேண்டிய வண்ணாருக்கு ஒரு வலது கை செயல்பட முடியாமல் போனால், வாழ்க்கை சாவைவிட மோசமானதாக இருக்கும். மேலும் மற்ற விளிம்பு நிலை ஜாதி மக்களைவிட வண்ணார் சமூக மக்கள் எண்ணிகையில் குறைவு. எனவே, ஊரில் உள்ள இடைநிலை ஜாதிகளின் அடக்கு முறைகளை மனதளவில் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். எனவே, இந்த சமூக மக்களை பற்றிச் சொல்ல எண்ணினேன்.
பிரபலமான நடிகர்கள் பலர் இருக்க, நாடக கலைஞர் பேராசிரியர்
மு. ராமசாமி அவர்களை நடிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?
பிரபலமானவர்கள் எவரேனும் நடித்தால் அந்த நடிகரின் முகம்தான் மக்களுக்கு வரும். நான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போகலாம். மேலும் மு. ராமசாமி அய்யா அவர்கள் பல சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறாரார். சமூக அக்கறை கொண்டவர். இந்த கதையை எழுதும் போதே மு.ரா. அய்யா இயல்பாகவே வந்து விட்டார். நடிப்பிலும் இயற்கையாக பொருந்தி போய்விட்டார்.
நாசர் அவர்களை நடிக்க வைத்தது பாப்புலர் முகம் என்பதால்தானே?
நீதித் துறையில் இருக்கும் வழக்கறிஞர்கள் பலர் தன் கட்சிக்காரர் வெற்றி பெற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். சிலர் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் போராடுகிறார்கள். நீதியின் நம்பிக்கை வெளிச்சம் தரும் கதாபாத்திரத்தில் நாசர் சாரின் முகம்தான் நினைவு வந்தது. மக்களுக்கு நம்பிக்கை தரும் முகம் பரிச்சயமான முகமாக இருக்கவேண்டும் என எண்ணி, நாசர் சாரை அணுகினேன். சாரும் ஓகே சொன்னார். மேலும் நாசர் இம்மாதிரி முயற்சிகளை ஊக்குவிப்பவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன் அவர்களின் புதல்வர் புகழ் மகேந்திரன் நடிக்க வந்தது தற்செயலா? அல்லது திட்டமிடலா?
தற்செயல்தான். சி.பி.எம்.மின் இலக்கிய பத்திரிகையான தாமரை வடிவமைப்பிற்காக பலமுறை தோழர் மகேந்திரன் அவர்களை சந்திப்பேன். அவரது மகனும் 'முந்திரிகாடு' படத்தில் நடித்திருப்பதை தெரிந்து கொண்டேன். என்னுடைய வாய்தா திரைக்கதையை சொன்னவுடன் அப்பா, மகன் இருவருக்கும் பிடித்துவிட்டது. புகழ் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று உரிமையுடன் கேட்டு கொண்டார். வாய்தா படம் புகழுக்கு நல்ல திருப்புமுனையாக இருக்கும்.
கதாநாயகி எளிமையாக தெரிகிறாரே?
எளிமையான மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதையில் கதாநாயகியும் எளிமையாக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டமாக இருக்க கூடாது. நாம் சாலையில் அன்றாடம் பார்க்கும் பெண் போல இருப்பார் பவுலின் ஜெசிகா. இதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், வாய்தாவிற்கு பின் அதிகம் பேசப்படுவார்.
உங்களுக்குப் பிடித்த நீதித்துறை நபர்கள் யார்?
கோகுல் ராஜ் வழக்கில் வாதாடிய பாப்பா மோகன். மற்றும் நீதியரசர் சந்துரு.
இப்படிப்பட்ட யதார்த்தமான படங்கள் இயக்கினாலும் மக்கள் மத்தியில் பெரிய ஹீரோ நடிக்கும் படங்களுக்குத்தானே பெரிய வரவேற்பு உள்ளது?
பெரிய படங்கள் வருவது தியேட்டர்கள் விநியோகம் போன்ற விஷயங்களை காப்பதற்காக. எங்களைப் போன்றவர்கள் இயக்கும் படங்கள் சினிமா கலையை காப்பதற்காக. இதைப் புரிந்துக் கொண்டால் பிரச்னை இல்லை.