‘கல்விக்கு’ என வழங்குவது அதைவிட நல்ல திட்டம்

‘கல்விக்கு’ என வழங்குவது அதைவிட நல்ல திட்டம்
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? தி.மு.க. அரசால் "தாலிக்கு தங்கம்" திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா?
– மகாலட்சுமி, திண்டுக்கல்

! ஏழைப்பெண்களின் திருமணங்களுக்கு உதவ கலைஞரால்  அறிவிக்கப்பட்ட மூதலூர் ராமலிங்க அம்மையார் திட்டம்தான் காலப்போக்கில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாறியது.  ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு  தங்கம் வழங்குவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால்  அதையே 'கல்விக்கு' என வழங்குவது அதைவிட நல்ல திட்டம்.  இலவசங்களைத் தவிர்த்து இதுபோல சமூக மேம்பாட்டு திட்டங்களை அரசியல் கட்சிகளும்  மக்களும் வரவேற்க வேண்டும்.

? அமித்ஷா  ஆங்கிலத்திற்கு பதில் 'ஹிந்தி' என்கிறாரே?
– அ. சுஹைத் ரஹ்மான், திருச்சி

! இந்த நாட்டில் ஒரு போதும் ஹிந்தி மொழி  ஆங்கிலத்துக்கு மாற்றாக இருக்க முடியாது. இந்தியாவின் இளம் தலைமுறையினர்  ஆங்கிலமும் அறிந்த உலகக்குடிமகன்களாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

? தமிழணங்கின் படத்தைப் பார்த்தீர்களா?
– ரஞ்சனிப்பிரியன், ஈரோடு

! 'அணங்கு' என்ற சொல்லுக்கு 'அரக்கி' என்றும் ஒரு பொருள் உண்டு. 'ஓவியர் அதை மனதில் கொண்டு வரைந்துவிட்டாரோ' என எண்ணத் தோன்றுகிறது. அன்னையாக மதிக்கப்படும் அழகு தமிழுக்கு இப்படி அவலட்சணமா, வெள்ளைச் சேலையில்  அமங்கலமா, தலைவிரி கோலமா வரைய  வக்கர எண்ணங்கள் கொண்ட ஒரு ஓவியனால் மட்டுமே முடியும். அதை குறியீடுகள் என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் இன்னும் மோசமானவர்கள்.

? ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி என்கிறாரே?
– வைத்தியநாதன், மன்னை

! அபத்தம். ஒரு காஷ்மீரியும்  பஞ்சாபியும் தமிழில் பேசிக்கொள்ள முடியுமா?   இரண்டு  வெவ்வேறு மொழி அறிந்தவர்களை இணைக்க உதவுவது அவர்கள்  இருவரும் அறிந்த பொது மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க முடியும்.  அது தமிழாக இருக்க முடியாது.

? இன்றைய பாகிஸ்தான்/ இலங்கை நிலை?
– சரஸ்வதி, திருமங்கலம்

! 'ஜனநாயகம்' என்ற போர்வையில் நடக்கும்  'சர்வாதிகார ஆட்சிகள் நிலைத்ததில்லை' என்பதுதான் வரலாறு.

? 'டாணாக்காரன்'  படம் எப்படி ?
– குருமூர்த்தி, மதுரை

! படத்தின் டைரக்டர் தமிழ் இவர் 'ஜெய் பீம்' படத்தில் 'குருமூர்த்தி' என்கிற பெயரில் கொடூர இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தவர். இவர் 12 வருடம் அந்த இலாகவில் பணிபுரிந்துவிட்டு திரை துறைக்கு வந்தவர். தன் அனுபவத்தை அழகாக செதுக்கி உள்ளார்.

போலீஸ் துறையில் நமக்கு தெரியாத விஷயம் இவ்வளவு கடுமையான பயிற்சி. அதோடு அதிகாரிகளின் ஆணவ போக்கு. இவையெல்லாம் நமக்கு புதுசு.

தமிழ் மிக சிறந்த படைப்பாளி என்பதை தன் முதல் படத்தில் நிரூபித்து உள்ளார்.

? பெட்ரோல் விலை இறங்காதா?
– ப. முரளி, சேலம்

! இந்திய அரசு கடைப்பிடிக்கும்  எரிபொருள் விலைக்கொள்கை நீடித்தால் நிச்சயம் வாய்ப்பில்லை.

? கல்கியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறதே?
– நாராயணன், பாளையங்கோட்டை

!  "ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கல்கிதான். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மிகப் பெரிய சக்திகளை அவர் பத்திரிகையாளராக எதிர்கொண்டார். அவர் தன்னுடைய அரசியல் சார்புகளை மறைத்ததில்லை; ஆனால், தன்னுடைய இதழியலை அவை பாதிக்காமல் இயங்கினார். எழுத்தைத் தாண்டி, இசை, நடனம் எனப் பல்துறைகளில் கல்கியின் பங்களிப்பு விரிகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கடந்த நூற்றாண்டில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை; குறிப்பாக, கடந்த நூற்றாண்டின் முதல் பாதி குறித்த எந்த அறிதலும் இல்லை. தமிழில் எது எழுதப்பட்டாலும் அது 'ஆங்கிலத்தில் கிடைக்கிறதா' என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் வெளியாகியிருக்கும் கௌரி ராம்நாராயணனின்  இந்த மொழிபெயர்ப்பு நூல், இன்றைய தலைமுறையினரில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கடந்த நூற்றாண்டைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும்; மேலும், கடந்த தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்குமான பாலமாகவும் இந்த நூல் இருக்கும்."

? மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆரோக்கியம் தானே?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

!  அதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்களை சொல்லாமல், "வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க, ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தைப் பெற சிறு மாவட்டங்களாக பிரிக்கிறோம்" என்று சொல்லுகிறார்கள். ஆனால், அரசின் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் என்பதே உண்மை.

?அண்மையில் ரசித்த ஜோக்?
– நரசிம்மன், ஶ்ரீரங்கம்

! இது ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் பார்த்தது.  "பார்க்குகளின் மேம்பாட்டு  வசதிகளுக்கான பட்ஜெட்டை  75% குறைத்துவிட்டார்கள்"  என்ற செய்தியை அறிவிக்கும்போது வெளியான படம் இது.

?  கடவுளின் தீர்ப்பு , நீதிபதியின் தீர்ப்பு , மக்களின் தீர்ப்பு  என்ன வித்தியாசம் ?
– ஆ.மாடக்கண்ணு, பாம்பன்குளம்

!  கடவுளின் தீர்ப்பு வெளியாக நிர்ணயிக்கபட்ட நாள் தெரியாது.  நீதிபதியின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளில் வெளியாகும். மக்களின் தீர்ப்பு வெவ்வேறு நாட்களில் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாளில்தான் அறிவிக்கப்படும். மூன்று தீர்ப்புகளுமே வெளியானவுடன் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் தரக்கூடியவை.

? தர்மம், கூட்டணி தர்மம் என்ன வேறுபாடு?
– கண்ணன், நெல்லை

!  கூடா நட்பு கேடாகும் என்பது தர்மமாக இருக்கும் போது கூட்டணியில் எப்படி தர்மம் இருக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com