புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்
Published on

தலையங்கம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பற்றி அதிகம் பேசிவருக்கிறார். பல திட்டங்கள்,  ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டை '78 லட்சம் கோடி பொருளாதாரத்துக்கு (ஒரு டிரில்லியன் டாலர்) உயர்த்த வேண்டும்' என்ற  தனது லட்சியம் குறித்தும் பேசிவருகிறார்.

அண்மையில் ஒன்றிய  அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் "தொழில் புரிய உகந்த இந்திய மாநிலங்களின் தர வரிசைப் பட்டியல் தமிழக முதல்வரின்  கனவுகளை நனவாக்கும்" என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் 301 தொழில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதை, மத்திய அரசாங்க தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செய்த மதிப்பீட்டில் 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 14-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது ஆந்திரா, குஜராத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.  இதற்கான முன்னெடுப்புகளைத் துரித வேகத்தில்  எடுத்துச் செயலாக்கிய  அமைச்சர் தங்கம் தென்னரசு வையும்  அவரது துறை அதிகாரிகளையும் பாராட்டுவோம்.

கடந்த மார்ச் மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை   6 தொழில் நிறுவனங்களோடு கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

அண்மையில் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.எஸ்.எஸ். வென்ச்சர்ஸ் உடன்  ஒரு "செமி கண்டக்டர்" உயர் தொழில்நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அடுத்த  5 ஆண்டுகளில் ரூ.25,600 கோடி முதலீடு கிடைக்கும். 1500 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் போன்ற செய்திகள்  பெரும் முதலீடுகளுடன் நம் இளைய தலைமுறையினருக்கும் வேலைவாய்ப்புகள் பெருகும்  என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

இதே வேகத்தில் சரியான திட்டங்களுடன்  தொழில்துறை அமைச்சரும் அதிகாரிகளும் செயல்பட்டால் தமிழகத்தின் தொழில் வளம் பெருகி புதியதோர் உலகை உருவாகும் என நம்புவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com