இதுதான் ‘நயமான பயம்’

இதுதான் ‘நயமான பயம்’
Published on

யானை சினிமா விமர்சனம்

– லதானந்த்

லைப்பைப் பார்த்ததும் வன விலங்குகள் மற்றும் வனம் சார்ந்த படம் என்று நினைத்துவிடாதீர்கள். யானையைப் போன்ற வலிமை மிக்கவனாம் கதாநாயகன். அதனால் உவமேயமாகத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

மிகப் பெரிய செல்வாக்கும் பண பலமும் படைத்த குடும்பத்தின் தலைவர் ராஜேஷ். அவரின் முதல் தாரத்துக்குப் பிறந்த ஆண்கள் மூவர். அவர்களுக்கு மாற்றாந்தாய் மகனான அருண் விஜயை அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால் வீட்டைவிட்டே அருணை வெளியேற்றி விடுகின்றனர் முதல் தாரத்து மகன்களான சமுத்திரக் கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் ஆகியோர். அதன் பின் வெளியேற்றப்பட்ட அருண் பல அபாயங்களில் இருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவதுதான் கதை.

கதையின் பெரும்பாலான கதைக் களம் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளைச் சுற்றியே வட்டமடிக்கிறது.

அருண் விஜய் கம்பீரமாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தின் தலைப்புக்கேற்றார்போல ஆயுதம் தாங்கிய பத்துப் பதினைந்து பேரை ஒற்றை ஆளாய் துவம்சம் செய்வது கொஞ்சம் ஓவர்தான்.

மத நல்லிணக்கம் பேணுபவராகவும், சாதிய அடக்குமுறைகளை எதிர்ப்பவராகவும் அருண் விஜயின் பாத்திரம் நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிரது. அதனை அருணும் செம்மையாகச் செய்திருக்கிறார்.

ராதிகா அழைப்பதுபோல, 'பாசக் கிறுக்கன்' பாத்திரமேற்றிருக்கும் யோகி பாபுவின் நடிப்பும், டைமிங் வசனங்களும் குறிப்பிடத்தக்கன.

சமுத்திரக் கனி பற்றிச் சொல்லவா வேண்டும். சாதிவெறி ரத்தத்தில் மிதக்கும் பாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருகிறார். அதேபோல ராஜேஷும் நடுநிலைமை காக்கும் வேடத்தை அனாயசிமாக ஏற்றிருக்கிறார்.

படத்தில் பாடல்கள் அதிகம். குறைத்திருக்கலாம். பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

தலைவாசல் விஜய், அருண் விஜய், யோகிபாபு சம்பந்தப்பட்ட பிரியாணிக் காட்சி இயல்பான நகைச்சுவை!

பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதிலும் சில சென்டிமென்டுகள், திருப்பங்கள் போன்றவற்றைக் கலந்திருப்பதால் அதிகம் உறுத்தவில்லை. காணாமல் போனவர்களை நூல் பிடித்துத் துப்பறியும் காட்சிகளும் கொஞ்ச நேரம் உண்டு.

படம் முழுக்க யாராவது யாரையாவது கன்னத்தில் அறைந்துகொண்டும், பின்புறத்தில் எட்டி உதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். பெண்களும் இந்த அடி உதைக்குத் தப்பவில்லை. கத்தி, வீச்சரிவாள், கொடுவாள், சங்கு, ஈட்டி, மரக்கட்டை, துப்பாக்கி, கல் போன்ற பலவற்றாலும் ஒருவரையொருவர் தாக்கிகொண்டு வனமம் தீர்க்கின்றனர்.

எதிரி ஒருவரைத் தாக்கிவிட்டு, "இதுதான் நயமான பயம்" என்பார். நறுக் வசனம் அது!

படத்தில் பேசப்படும் வசனங்கள் பலவற்றிலும் வார்த்தைகள், 'பீப்' செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவை அனுமானிக்கக்கூடிய அருவெறுப்பு வார்த்தைகளே.

மஞ்சள் சுரிதார் பெண் சஸ்பென்ஸ் பலே!

இறுதியில் ராதிகாவிடமிருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்பால் அ.வி. மனம் மாறி எதிரியைக் கொல்லாமல் விடும் அந்த உச்சகட்டக் காட்சி கிளாஸ்!

மொத்தத்தில்: யானையின் பிளிறல் கதையிலும் நடிப்பிலும் மிரட்டுகிறது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com