அதென்ன “க்” ன்னு ஒரு தலைப்பு ?

அதென்ன  “க்” ன்னு ஒரு தலைப்பு ?
Published on

நேர்காணல்

– ராகவ் குமார்

"சார் என் சொந்த ஊர் வத்தலகுண்டு பக்கத்துல இருக்குற அய்யம்பாளையம். விவசாய குடும்பம். சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு காலேஜில் ஆசிரியராக வேலை பார்த்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் சினிமா ஆசை விடாததால், சென்னை வந்து முயற்சி செய்ய ஆரம்பித்தேன். சினிமாவில் அசிஸ்டென்ட்டாக வேலை சேர்வது அவ்வளவு சாதாரணமான விஷயமாக இல்லை. ஒரு வழியாக என் நண்பன் இயக்கிய 'ஜிவி' படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது என்கிறார் 'க்' படத்தின் இயக்குனர் பாபு தமிழ்.  சமீபத்தில் வெளியான 'க்' திரைப்படம் ரசிகர்களிடையே மாறுபட்ட திரைப்படம் என்பதற்கான பாராட்டைப் பெற்று வருகிறது.

அதெப்படி, சொல்லி வெச்ச மாதிரி இன்ஜினீயர் எல்லாரும் படம் எடுக்க வந்துடுறீங்க?
"இன்ஜினீயரிங் படிச்சது வேலைக்காக,  அறிவை வளர்த்துக்க, சினிமா பெரும் கனவு. கனவை நினைவாக்க சில காத்திருப்புக்கள், போராட்டங்கள் இருக்கத்தானே செய்யும்."

'க்' என்ற ஒரு எழுத்தை  தலைப்பாக வைக்க காரணம் என்ன?
"நமது உரையாடல்களில்,  சில சமயம் சிலரைப் பற்றிப் பேசும் போது "ஒரு க் வெச்சு  சொன்னான்" என்று சொல்லுவோம். அதாவது முழுமையாக சொல்லவில்லை; "ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது" என்று அர்த்தம். சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு இந்த தலைப்பு சரியாக இருக்கும் என்பதால் இந்த தலைப்பு வைத்தேன்."

அசிஸ்டென்ட் டைரக்டராக இல்லாமலும், குறும்படம் இயக்காமலும் டைரக்டர் ஆன ரகசியத்தை சொல்லுங்களேன்?
"தொடர்ந்து சினிமா பார்த்தேன். நிறைய கமர்சியல் படங்களின் திரைக்கதைகள் ஒரே போன்றுதான் இருந்தன. இதிலிருந்து எப்படி வித்தியாசப்படுவது என்று யோசித்தேன்., liner, மெத்தேட் முறை அதாவது ஹீரோ அறிமுகம், சாங், சண்டை பிரச்னை என்று போகாமல்,  non liner முறையில் கதை சொல்ல ஆரம்பித்தேன். இம்முறையில் கதையை முதலில் இருந்து ஆரம்பிக்காமல் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து துவங்கும்படி திரைக்கதை அமைத்தேன். ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது."

இதுபோன்று வித்தியாசமான  படங்கள் வரும்போதெல்லாம் இது கொரியன் பட சாயல், இத்தாலி பட தழுவல் என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிடுகிறார்கள். 'க்' படத்தின் இன்ஸ்பிரேஷன் பற்றி சொல்லுங்களேன்….?
நான் உண்மையில் தமிழ் படங்கள் மட்டும்தான் பார்ப்பேன். அரிதிலும், அரிதாகத்தான் பிற மொழி படங்களைப் பார்ப்பேன். எனவே, நெட்டிசன்கள் சொல்வதை போல இன்ஸ்பிரேஷன், தழுவல் என் கதையில் வாய்ப்பே இல்லை.

 நீங்கள் கதை சொல்லும் விதம் A  சென்டர் ரசிகர்களுக்கான படம் போல தெரிகிறதே?
'க்' படம், படித்த A சென்டர் ரசிகர்களுக்கான படம்தான்.  'கால் பந்து வீரர்' என்று கதை வைக்கும் போதே, இது ஒரு குறிப்பிட்ட வகை ரசிகர்களுக்கான ஒன் லைன் என்று புரிந்து கொண்டேன். சைக்கோ த்ரில்லர் மற்றும் உயர் தட்டு குடும்பத்தின் பிளாக் மெயில் விஷயங்கள் எல்லாம் புரிந்து கொள்ள A  சென்டர் ரசிகர்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று எண்ணி திரைக்கதை அமைத்தேன்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட கதாபாத்திரதை உருவாக்க தூண்டுதலாக அமைந்த விஷயம் எது?

என் மருத்துவ நண்பர் சொன்ன ஒரு விஷயம் தூண்டுதலாக அமைந்தது. PTSD(post traumatic stress disorder ) என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் களைப் பற்றி நண்பர் பகிர்ந்து கொண்டார். இக் குறைபாடால் பாதிப்படைந்தவர்களுக்கு  சிறு வயதில் ஏற்பட்ட துயரமான சம்பவம் அவர்களின் நினைவில் திரும்பத் திரும்ப வந்து அன்றாட பணிகளை பாதிக்கும். இதனால் இவர்கள் அடிக்கடி  கோபப்படுபவர்களாகவும், சோகம் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களின் செயல்பாடுகள் பற்றி கேள்விப்பட்டவுடன், சைக்கோ திரில்லர் கதைக்கு கரு கிடைத்து விட்டதாக உணர்ந்தேன்.

 உங்களுக்குப் பிடித்த டைரக்டர் யார்?
பாலச்சந்தர் மற்றும் பாக்யராஜ் சார். பாலச்சந்தர் சாரின் கதை களம் பரந்து பட்டதாக இருக்கும். வித்தியாசமான மாந்தார்கள் கதையில் இருப்பார்கள். பாக்யராஜ் சார் அமைக்கும் திரைக்கதை நாம் கற்று கொள்ளவேண்டிய ஒன்று.

 உங்களைப் போன்ற யாரிடமும் உதவியாளராக இல்லாமல் டைரக்டர் ஆன இளம் இயக்குனர்கள் அடுத்தடுத்து வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியவில்லையே ஏன்?
ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதும் டைரக்டர்களுக்கான கமிட்மென்டும் காரணமாக இருக்கலாம்.

 உங்களின் அடுத்தப் படம் எப்படி இருக்கும்?
வேறு வகை படமாக இருக்கும். காமெடி, ஃபேமிலி எதுவாகவும் இருக்கலாம். ஆனால், கதை இதுவரை சொல்லாத ஒன் லைனாக இருக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com