
அண்மையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசும்போது, ஒன்றிய அரசு மீது இந்த NDA அரசிடம் புள்ளிவிவரங்கள் இல்லை. (NO DATA AVILABLE) என்று கிண்டல் செய்திருந்தார்.
'சற்று ஆழ்ந்து நோக்கினால் அவர் சொன்னதில் தவறில்லை' என்பதை உணர முடியும். பா.ஜ.க. அரசு பதவியேற்றதிலிருந்து நாடாளுமன்றத்தில் சரியான புள்ளி விவரங்கள் தரப்பட்டதில்லை. 'விவரங்கள் அரசிடம் இல்லை' என்றோ அல்லது 'விவரங்கள் சேகரிக்கப்படுகிறது' என்றோதான் அமைச்சர்களின் பதில்கள் அமைந்திருக்கும்.
இது இந்த அரசில் மட்டுமில்லை, சுதந்திர இந்தியா உருவான காலத்திலிருந்தே அரசுகளால் அதிகம் கவனம் செலுத்தப்படாத ஒரு விஷயம் சரியான புள்ளிவிவரங்கள். இதற்கு முன்னரும் சில சமயங்களில் ஆளும் கட்சியினர் 'தங்கள் அரசின் சாதனையாக காட்டிய புள்ளிவிவரங்கள் தவறானவை' என்று பின்னாளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அரசுகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடியவகையில் திரிக்கப்பட்டதாகக் கூடக் குற்றச்சாட்டுகள் எழுந்தது உண்டு.
அண்மையில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய இரண்டு முக்கிய கேள்விகளுக்கு ஒன்றிய அரசிடம் பதில் இல்லை. பெருந்தொற்றில் இறந்தவர்களுக்கான இழப்பீடு, பட்டினிச் சாவு போன்ற விவரங்களை நீதிமன்றம் கேட்டபோது சரியான தரவுகளை அரசால் தரமுடியாத அவலநிலை ஏற்பட்டது. பல மாநில அரசுகளும் இந்த விவரங்களையும் தரவுகளையும் முறையாகச் சேகரித்துச் சேமித்து வைக்கவில்லை.
நமது நிர்வாக அமைப்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் புள்ளியியல் துறை இயங்குகிறது. ஆனால் தரவுகளைத் திரட்டும் வேகம், அவற்றைப் பகுந்தாய்வு செய்யும் முறைகளில் மிகப்பெரிய தேக்கம் இருக்கிறது. நடுநிலையோடு செயல்பட சரியான வழிகாட்டுதல், முறையானக் கண்காணிப்பு இல்லாததால்தான் இந்தத் தேக்கம். இன்றையக் கணினி உலகில் இந்தத் துறையை நவீனப்படுத்துவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை.
பிறப்பு, இறப்பு, சரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்றவை அரசின் திட்டங்களுக்கு மிக அவசியமானவை. ஆனால் ஒன்றிய, மாநில அரசுகள் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை.
சரியான தரவுகள், புள்ளி விவரங்கள் இல்லாமல் வகுக்கப்படும் கொள்கைகளும், திட்டங்களும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லாது என்பதை அரசுகள் உணரவேண்டும், அரசுகளின் தலையீடு இல்லாமல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். அதன் கிளைகள் மாநிலங்களில் அமைக்கப்படவேண்டும். இவை கணினிகளால் ஒன்றிணைக்கப்பட்டுச் சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லாமல் செயல்படும் நிர்வாகம் இலக்கில்லாதப் பயணத்திற்கு ஒப்பானது.