எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்
Published on

சினிமா விமர்சனம்

– லதானந்த்

பொள்ளாச்சி சம்பவத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் இது.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குப் புதிய தீர்ப்பைச் சொல்லி, பாதித்த மிருகங்களுக்கு வித்தியாசமான முறையில் சூர்யா தண்டனை அளிப்பது திரைப்பட ஒன் லைன். சுத்தி முத்தி இதுவும் ஒரு பழிவாங்கல் படம்தான். முடிவுதான் கொஞ்சம் வித்தியாசமாயிருக்கிறது.

"தாங்கள் ஆபாசமாகப் படமெடுக்கப்பட்டு விட்டாலோ அல்லது அது பொது வெளியில் பகிரப்பட்டு விட்டாலோ, பயப்படத்தேவையில்லை; வெட்கப்படத் தேவையில்லை; மாறாக அப்படிப் படம் எடுத்தவர்கள், பரப்பியவர்கள் மற்றும் ரசித்தவர்கள்தான் வெட்கப்படவேண்டும்" என்ற வாதம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டப்படவேண்டிய கருத்து.

வடநாடு தென்னாடுகளுக்கிடையே பகை என்பதாகக் காண்பிக்கிறார்கள். உடனே இந்திய அரசியல் பற்றிய படமா எனக் கேட்காதீர்கள். தமிழகத் தென்பகுதியில் இருக்கும் இரு ஊர்களாம் அவை!

படத்தின் ஆரம்பத்தில் ஜாலியான கிராமத்து மைனர் போல வேட்டி சட்டையோடு குத்தாட்டுப் பாட்டுக்கு ஆடிக்கொண்டு திரிகிறார் சூர்யா. சடாலென்று அவருக்குக் கோட்டு மாட்டிவிட்டு வக்கீல் என்கிறார்கள். திக்கென்று ஆகிவிடுகிறது. ஜெய் பீமில் பார்த்த வக்கீல் சூர்யா மனதில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் சில பல கொலைகள் காட்டப்படுகின்றன. உடனடியாகப் படம் மசாலா பாணிக்குத் தாவிவிடுகிறது. சூர்யாவின் காதலும், கல்யாணமும் லேசாகச் சிரிப்பை வரவழைக்கின்றன. அதையே டெவலப் செய்து முழு நீள நகைச்சுவைப் படமாக எடுத்திருந்தால்கூடத் தேவலையாக இருந்திருக்கும்.

படு சீரியசான வில்லனின் சேட்டைகளும் அவனை சூர்யா துரத்திக்கொண்டிருக்கும் காட்சிகளுக்கும் இடையில் வலிந்து புகுத்தப்பட்டிருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் வெஜிடபிள் பிரியாணியில் வெங்காயப் புளிக் குழம்பைக் கலந்து சாப்பிட்டது போல மிஸ் மேட்சாய் இருக்கின்றன.

அடிக்கடி, '2 மாதங்களுக்கு முன்', 3 மாதங்களுக்கு முன்', 'சில மணி நேரத்துக்கு முன்' '30 நிமிடங்களுக்கு முன்' என டைட்டில் கார்டு போலக் காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். பரபரப்பைக் கூட்ட அப்படிச் செய்திருப்பார்கள் போல. ஒரு சுக்கும் கூடவில்லை.

இப்போதைய படங்களிலெல்லாம், 'சிஸ்டம் சரியில்லை' எனச் சொல்வது ஒரு ஃபேஷனாகிவிட்டது. இந்தப் படத்திலும் போகிற போக்கில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அப்படி ஒரு வசனம் வருகிறது.

"கோட்டுப் போட்டா ஜட்ஜு வேற ஆளு: வேட்டி கட்டினா நான்தாண்டா ஜட்ஜு" என்பன போன்ற பஞ்ச் டயலாக்குகளுக்கும் பஞ்சமேயில்லை.

ஆஸ்தான அம்மா சரண்யாவின் நடிப்புப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன ஒன்றாகத் தென்படுகிறது.

தேவதர்ஷினி, இளவரசுவை அநியாயத்துக்குக் கடுப்பேற்றும் காட்சிகள் பரவாயில்லை. இளவரசு நுழையும்போது சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் தேவதர்ஷினி, டைமிங்காக, "ஜோக்கர் வந்திருச்சு" என்பார். குறும்பு!

'வாட்ஸப்பில் ரூமர் கிளப்புவது போல' என்பன போன்ற நிகழ்காலச் சாடல் உரையாடல்களும் உண்டு. 'காவலன் என்ற செயலியைப் பெண்கள் தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்' என்ற அறிவுரைக் காட்சிக்கு ஒரு சபாஷ்!

சூர்யா ஒரு பாடல் காட்சியில் பலவித கெட்டப்களில் வருகிறார். அதில் முருகராக அவர் வரும்போது பயமாக இருக்கிறது.

செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கல் சூளை ஒன்றில் சண்டைக் காட்சி ஆரம்பிக்கும்போதே செங்கற்கள் நிலைகுலைந்து விழும் என்று நினைக்கிறோம். அப்படியே நடக்கிறது.

ஒரு பெண் மீது வாகனம் மோதி அவர் தூக்கியெறியப்படும்போது நாமே அடிபட்ட ஒரு ஃபீல். நுணுக்கமான காட்சியமைப்புக்கு இதை உதாரணமாகச் சொல்லலாம்.

திடீர் திடீரென வாய்ஸ் ஓவர்கள் இடையில் ஒலித்து ஓய்கின்றன.

கதாநாயகி பிரியங்கா மோகன் முற்பாதியில் அசமஞ்சமாக வந்து போனாலும் பிற்பாதியில் எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

பாடல்களும் பின்னணி இசையும் சொல்லிக் கொள்கிறார்போல இல்லை.

எதற்கும் துணிந்தவன் : எதற்கும் துணிந்தவர்கள் பார்க்கலாம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com