ஐந்து மாநிலத் தேர்தல்கள்: மூன்று  செய்திகள்

ஐந்து மாநிலத் தேர்தல்கள்: மூன்று  செய்திகள்
Published on

தலையங்கம்

ரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.

அடுத்த இரண்டாண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன.  இந்த முடிவுகள்  மூன்று முக்கிய செய்திகளைச் சொல்லுகின்றன.

முதலாவது, மக்கள் பிரதமர் மோடியின் தலைமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். விவசாயிகளின் ஓராண்டு போராட்டம்., லக்கீம்பூர் விபத்து  தொடர்ந்த விலைவாசி உயர்வு போன்றவற்றால்  மக்களிடம் பிரமரின் செல்வாக்கு சரியவில்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க., தனது செல்வாக்கைத்  தக்கவைத்துக்கொண்டுள்ளது,

இரண்டாவது, தேசிய அரசியலில் காங்கிரஸின் இடம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ், தாங்கள் ஆட்சியிலிருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்துவிட்டது.

மூன்றாவது, பஞ்சாபில் பா.ஜ.க. மீதான விவசாயிகளின் அதிருப்தி காங்கிரஸுக்கு ஆதரவாக மாறவில்லை. மாறாக  ஆம் ஆத்மி கட்சி பெறும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்திய அரசியலில்  அவர்கள் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.

ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதற்கு எதிர்கட்சிகள் ஓரணியில் ஒன்று படவில்லை என்பதும் ஒரு காரணம். உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும் சமாஜ் வாதி கட்சியிடம் இழந்த இடங்கள் கடந்த தேர்தலைவிட அதிகம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலில் எதிரொலிக்குமா?

மாநில தேர்தல் முடிவுகளும் மக்களவைத் தேர்தல் முடிவுகளும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதில்லை என்பதே சமீப காலத்திய  அரசியல் நிலவரம். ஆனால் ஒன்றிய அரசில் மக்கள் ஒரு வலிமையான  தேசியத் தலைமையைத்தான் விரும்புகிறார்கள். என்பதைக் கடந்த தேர்தல்கள் உணர்த்துகின்றன.  மாநிலங்களில் செல்வாக்கு மிகுந்த கட்சிகள் இதை உணர்ந்து  ஒன்றிணைந்து அவர்களுக்கு ஒரு தேசிய தலைமையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com