
"உலகிலுள்ள எல்லாவற்றையும், தன்னிலிருந்து உண்டாக்கி, படைத்து, காப்பாற்றி, மீண்டும்… உன்னுள்ளே இழுத்துக் கொள்ளும் பரம்பொருளே!
முதலும் முடிவும் இல்லாதவனே! வேதங்களில் அறியப்படும் பொருளே!அறிவுடையவர்கள், உன்னை எல்லாப் பொருளிலும் காண்பார்கள். மற்றவர்கள் உன்னைக் காண மாட்டார்கள். நீ எல்லாப் பொருளிலும் கலந்திருப்பதால், உன்னை எல்லா உயிர்களாலும் உணர முடியாது. எந்த வடிவத்தில் பூமியில் காணப்படுகிறீர்? ஸ்வர்க்கத்திலும் எந்த வடிவில் காணப்படுகிறீர்? என்று கூறுங்கள்…" என்று உத்தவர் கேட்க கிருஷ்ணன் சொல்லத் தொடங்கினார்.
கேள்வி கேட்பதில் மிகுந்த திறமையுள்ள உத்தவரே! இந்த கேள்வி அர்ச்சுனனால்… குருக்ஷேத்ர யுத்தத்தின் போது கேட்கப்பட்டது. அப்போது நான் பகவத்கீதையைக் கூறினேன்.
உத்தவரே! இப்போது அதே கேள்வியைக் கேட்கிறீர்கள்.
நானே, எல்லா உயிர்களிலும் கலந்து நிற்கும் ஆன்மா. அவர்களின் நண்பனும் அதிபதியுமாவேன். எல்லா உயிர்களின் பிறப்பும், வாழ்வும் பின்பு இறப்பும் நானே!
உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களின் அசைவும் நானே. எல்லாவற்றிற்கும் காரணமான காலமும் நானே!
எல்லா உயிர்களின் பிராணனும் நானே!
அந்தப் பிரபஞ்சத்தின் மூல அறிவு நானே! ஆன்மாவும் நானே! மனதும் நானே! வேதங்களில் கூறப்படும் பிரம்மனும் நானே!மந்திரங்களில் "ஓம்"நானே! காயத்திரி மந்திரமும் நானே!
ஆதித்தியர்க்குள் விஷ்ணுவும் நானே
ருத்திரர்களுள் நீலலோகிதாசனும் நானே.
மகரிஷிக்குள் நான் பிருகு
ராஜரிஷிக்குள் நான் மனு
தேவரிஷிக்குள் நான் நாரதர்
பசுக்களில் நான் காமதேனு
சித்தர்களில் நான் கபிலர்
பறவைகளில் நான் கருடன்
உலகைப் பரிபாலிக்கும் பிரஜாபதிக்குள் நான் தட்சன்
பிருதுக்களில் நான் அர்யமா
அரக்கருள் நான் பிரகலாதன்
நட்சத்திரங்களில் நான் சந்திரன்
யட்சர்களிலும் நான் குபேரன்
யானைகளுக்கு நான் ஐராவதம்
நீரில் வாழ்பவற்றில் அவற்றின் தலைவனான வருணன்
வெப்பத்திற்குக் காரணமான சூரியன்
குதிரைகளுள் "உச்சைசிரவல்" என்ற குதிரை
உலோகங்களுக்குள் பொன்
உலகைக் கட்டுப்படுத்துபவர்களில் 'இறப்பு" மரணம்
பெண் நாகங்களில் வாசுகி
ஆண் நாகங்களில் அனந்தன்
மிருகங்களில் சிங்கம்
நான்கு வருணங்களில் பிராமணன்
நதிகளுக்குள் கங்கை
நீர்நிலைக்குள் கடல்
ஆயுதங்களுக்குள் வில்
வில்விடுப்பவர்களில் முப்புரம் எரித்த சிவன்
மலைகளுக்குள் மேரு
மறைந்து தங்குமிடங்களில் இமயமலை
மரங்களில் அரசமரம்
விதைகளுக்குள் பார்லி
முனிவர்களுக்குள் வசிஷ்டன்
அறிந்தவர்களில் பிரம்மன்
ஆசாரியர்களுக்குள் பிரகஸ்பதி
தளபதிகளில் ஸ்கந்தன்
நல்வழி காட்டுபவர்களில் பிரம்மன்
வேதங்களின் முதல் பொருள் நானே
நானே காற்று, நெருப்பு,சூரியன் நீர்,ஆன்மா
நானே யோகத்தின் முடிவு
பெண்களில் சதரூபை
பிரம்மாவின் புத்திரர்களுள் மனு
புனிதர்களில் நாராயணன்
பிரம்மசாரிகளில் சனத்குமாரர்
தர்மங்களுக்குள் யாருக்கும் தீமை செய்யாதவன்
காலங்களில் சித்திரை, வைகாசி, பருவம்
மாதங்களில் மார்கழி
நட்சத்திரங்களில் உத்திரம், திருவோணம்
யுகங்களில் கிரேதாயுகம்
மனத்தை திடப்படுத்தியவர்களில் தேவலா அஸிடஸ்டா
வேதங்களைப் பிரித்தளித்த "துவைம்பாயனர்"(வியாசர்)
அறிவுடையவர்களில் சுக்கிராச்சாரியார்
கடவுள்களில் வாசுதேவர்
பக்தர்களில் நீ (உத்தவர்)
கிம்புருஷர்களில் ஹனுமான்
வித்தியாசுரர்களில் சுதர்சனர்
நவரத்தினங்களில் வைடூரியம்
அழகானவைகளில் தாமரை மொட்டு
புற்களில் தர்ப்பைப்புல்
யாகத்திலிடப்படுவதில் பசு மாட்டில் இருந்து எடுக்கப்படும் நெய்
பிறரை ஏமாற்றுவதில் சூதாட்டம்
நானே செல்வம்… நானே பொறுமை
குணங்களில் தைரியம்
பலமுள்ளவர்களின் விடாமுயற்சி
பக்தர்களின் பக்தி
பக்தர்களால் வணங்கப்படும் ஒன்பது அவதாரங்களில் வாசுதேவர்
(ஒன்பது அவதாரங்கள்.. வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அனிருத்தர், நாராயணர், ஹயக்ரீவர், வராஹர், நரசிம்மர், வாமனர்)
கந்தர்வர்களில் விஸ்வாஸ
அப்சரஸ்களில் பூர்வ சித்தி
மலைகளின் நிரந்தரமும், பூமியின் வாசனையும், நீரில் ருசியும், ஒளி வீசுவதில் சூரியனும், சப்தங்களில் ஆகாசமும் ஆகும்.
என்னை வணங்குபவர்களில் பலி (பலிச்சக்கரவர்த்தி)
வீரர்களில் அர்ஜுனர். நானே உலகிலுள்ள எல்லாப் படைப்புக்கும் வாழ்வதற்கும், இறத்தலுக்கும் காரணமானவன்.
நானே கர்மேந்திரியங்களின் செயலுக்கும்,ஞானேந்திரியங்களின் செயலுக்கும் காரணமானவன்.
(கர்மேந்திரியங்கள் கை,கால், வாய், ஆண் பெண் உறுப்பு, மலவாய்..
ஞானேந்திரியங்கள்..கண்,காது, மூக்கு,வாய்,உடம்பு)
நானே புருஷ தத்துவமகாவும்,பிரகிருதி தத்துவமாகவும் விளங்குகிறேன்.
நானே எல்லாவற்றுக்கும் காரணமாகவும், காரியமாகவும் இருக்கிறேன். முக்குணங்களும் நானே. மூல காரண பிரம்மனும் நானே.
இந்தப் பிரபஞ்சத்தில் எனது படைப்புகள் அளவிட முடியாதன. நானில்லாமல் இந்தப் பிரபஞசத்தில் எதுவுமில்லை.
புகழ், செல்வம், அதிகாரம், பணிவு, தயாள குணம், அதிர்ஷ்டம், தைரியம், பொறாமை, ஞானம் எல்லாம் என்னுடைய குணங்களே!
என்னுடைய வடிவங்கள் ஒரு சிறிய அளவில் உனக்கு விளக்கப்பட்டன. அவையாவும், எனது மனத்தின் படைப்புகளே. அவைகள்… வார்த்தைகளால் தெரிவிக்கப்பட்டன.
(தொடரும்)