அழியும் ஆபத்தின் விளிம்பில்

அழியும் ஆபத்தின் விளிம்பில்
Published on

தலையங்கம்

ண்மையில்  கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  "கோவையிலும்  அதன் அருகிலுள்ள பகுதிகளிலும்  தொழில்முனைவோர் அதிகமாக உருவெடுத்து வருகின்றனர்.  தற்போது நம் உற்பத்தி முறைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொழில்களில் உற்பத்தியை அதிகரிக்கக் கொள்கை மாறுதல்களை நமது மத்திய அரசு செய்திருக்கிறது.  இதன் மூலம் உற்பத்தி எளிதாக அதிகரிக்கும்"  என்று பேசியிருக்கிறார்.

இதைப் பேசியிருக்கும்  அமைச்சருக்குக் கோவைக்கு அருகிலிருக்கும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருக்கும் பகுதிகளில் 2016-ம் ஆண்டு முதல்  தொடர்ந்து ஜவுளித்தொழில் நலிவடைந்து வருவது தெரியாதோ?  என்ற அச்சமும்  ஆச்சரியமும் நமக்கு  எழுகிறது.

நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இத்தொழிலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி. அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஜவுளித்துறை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தற்போது, பஞ்சு விலை மற்றும் அதைத்தொடர்ந்து நூல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துக்கொண்டே போவதால், இத்தொழில்  மேலும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.

ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும் (அக்- செப்) தமிழக நூற்பாலைகள் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான பஞ்சு பேல்களை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வாங்கி வருகின்றன. ஆனால், தற்போது பஞ்சு கொள்முதல் பெரும் சவாலாகிவிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ₹45 ஆயிரமாக இருந்த ஒரு கண்டி பஞ்சு விலை இப்போது ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்த விலை ஏற்றம் காரணமாக, நூல் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 200 ரூபாய்க்கு (கிலோ) விற்கப்பட்ட நூல், இன்றைய நிலவரப்படி 395 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 95 சதவீத விலை உயர்வு ஆகும். இந்த விலை உயர்வு காரணமாக, ஆலைகளை இயக்கமுடியாத சூழலுக்கு ஜவுளித்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

பல ஆலைகள் மூன்று ஷிப்டுகளுக்கு பதிலாக, ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்குகின்றன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின்னலாடை,  ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளித்துறைக்கான ஆர்டர்கள் வழக்கத்துக்கு மாறாக 25 சதவீதம்  சரிந்துள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஏற்றுமதி ஆர்டர்களைச்  சார்ந்திருக்கும் இந்தத்தொழிலில்  மூலப்பொருளின் விலையேற்றத்திற்கேற்ப பொருட்களின் விற்பனை விலைகளைக் கூட்ட முடியாது.

இந்த நிலை நீடித்தால் நம் ஏற்றுமதி கட்டளைகளை நமது  போட்டி நாடுகளிடம் இழக்க நேரிடும்.   இதனால் கோவை,  திருப்பூர்,  ஈரோடு உட்பட  தமிழகம் முழுவதும் ஜவுளித்தொழில் அடியோடு அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது.

இதை ஒன்றிய அரசு  உணர்ந்ததாகத் தெரியவில்லை.  முதலையின் வாயில் சிக்கிக்கொண்டு கதறும் யானையைப் போல் இருக்கும் தமிழக  ஜவுளித்துறையை,  ஒன்றிய  அரசு உடனடியாகத் தலையிட்டு  ஆபத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றவேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com