‘வெற்றிபெறுவது கடினம்; பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம்

‘வெற்றிபெறுவது கடினம்; பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம்
Published on

KGF  2  திரை விமர்சனம்

– லதானந்த்

'வெற்றிபெறுவது கடினம்; பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம்' என்பார்கள். உண்மைதான். KGF முதல் பாகத்தில் வெற்றிபெற்றவர்கள், KGF இரண்டாம் பாகத்தில் அதைக் கடினப்பட்டுத் தக்கவைத்தும் இருக்கிறார்கள்.

முதல் பாகத்தைப் பார்க்காதவர்களுக்குப் படம் பிடிபடுவதற்கு கொஞ்சம் நேரம் ஆவதென்னவோ உண்மை.

முதல் பாகம் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் ஆதிக்கத்தைக் கொடூர வில்லனிடம் இருந்து ராக்கி (யஷ்) கைப்பற்றுவதோடு முடிந்திருந்தது. அப்படிக் கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்கவைக்க அவர் போராடுவதுதான் இரண்டாம் பாகத்தின் சுருக்கம்.

ஒரு பக்கம் முதல் பாகத்தில் இறந்துபோன வில்லனான கருடனின் கூட்டாளிகள், தாங்கள் இழந்த தங்கச் சுரங்கத்தை மீண்டும் கைப்பற்ற ராக்கியை வேட்டையாட முனைகிறார்கள்; இன்னொரு பக்கம் பிரதம மந்திரி உள்ளிட்ட அதிகார வர்க்கம், ராக்கியை ஒடுக்க சகல உபாயங்களையும் மேற்கொள்கிறது. இந்த இரு தரப்பு எதிர்ப்புகளையும் ராக்கி அசகாயசூரத்தனமாக எதிர்கொள்கிறார்.

முக்கால்வாசிப் படம் இருட்டிலும் நெருப்பு வெளிச்சத்திலுமே நடைபெறுகிறது. இருந்தாலும் ஒளிப்பதிவு சூப்பர்.

வசனங்கள் பலவற்றில் உவமைகள், உவமேயங்கள், உதாரணங்கள், பழமொழிகள் என்று சரளமாக வந்து விழுந்து தமிழ்த் திரைக்கு அன்னியப்பட்டு நிற்கின்றன. போதாக் குறைக்கு பஞ்ச் வசனங்கள் ஏராளம்.

"தலைகள் முக்கியம் அல்ல; கிரீடம்தான் முக்கியம்" என்பன போன்ற வசனங்கள் சிறப்பு. ஆனால் அதே சமயம், "பரமபதத்தில் பாம்புகளும் இருக்கும்; ஏணிகளும் இருக்கும்" போன்ற பல வசனங்கள் பாடாய்ப் படுத்திவிடுகின்றன. இன்னோர் உதாரணம்: "சாதாரணமா ஆட்டை வெட்டினால் பிரியாணி; சாமிக்காக வெட்டினால் அது குர்பானி!"

காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம் அதிசயப்படவைக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட துணை நடிக, நடிகைகள் தோன்றுகின்றனர். பான் இந்தியப் படங்களில் முத்திரை பதித்திருக்கிறது KGF 2.

தகுந்த வாய்ப்புக் கிடைத்தும் அதிரா வேடம் ஏற்ற வில்லன் சஞ்சய் தத்தைக் கொல்லாமல் ராக்கி விடுவதும், பர்த்திக்கு ராக்கியை உரிய வாய்ப்புக் கிடைத்தும் அதிரா போட்டுத் தள்ளாமல் இருப்பதும் படத்தின் வளர்ச்சிக்கு உதவலாம். ஆனால் லாஜிக் இடிக்கிறதே!

யஷ்ஷின் ஆஜானுபாகுவான தோற்றத்துக்கு இன்னும் கொஞ்சம் முரட்டுத்தனமான குரல் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவர் குரலிலும் எப்போதும் நையாண்டித்தனம் மிகையாய் இருக்கிறது. கதாநாயகன் தான் மெரிட்டில் வந்திருப்பதாகத் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கிறார்.

"I don' like violence" என்று சொல்லிக்கொள்ளும் யஷ், காட்சிக்குக் காட்சி வயலன்ஸிலேயே முக்குளிக்கிறார். பிரதமராக வரும் ரவிணா டாண்டன் மிகப் பொருத்தமான பாத்திரத் தேர்வு. கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் பாத்திரம், படத்தில் ஒட்டாமல் வெட்டியாகத் தெரிகிறது.

அதிகாரிகள் அபகரித்துச் சென்ற ஒரே ஒரு தங்க பிஸ்கட்டுக்காக  'பெரியம்மா' எனச் செல்லமாக அழைக்கப்படும் மெஷின் கன்னை முக்கோணத் தாங்கியில் பொருத்தி, காவல் நிலையத்தையே சல்லடையாக்கும் இடத்தில் கைதட்டல் பறக்கிறது. சண்டைக் காட்சிகளை அன்பறிவு மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார். பாராட்டுகள்! அதேபோல புவன் கௌடாவின் ஒளிப்பதிவும் நச்சென்றிருக்கிறது.

மொத்தத்தில் KGF 2 = K(known) G(ood) F(ilm)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com