நமக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான உறவு அவரது இசை மட்டும்தான்.

நமக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான உறவு அவரது இசை மட்டும்தான்.

Published on

? இளையராஜா,  அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகிறாரே ?
– ஜெயராமன், தூத்துக்குடி

! மோடி புகழ் பாடும் ஒரு புத்தகத்துக்கு இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடும் பகுதிகள் மிகவும் நெருடலாக இருப்பது உண்மைதான். அவர் எழுதினாரா ghost writing செய்தார்களா என்பதெல்லாம் அனாவசியம். அவர் சொந்தமாக எழுதினாரோ இல்லையோ, அவர் பெயர் அதில் இடம்பெற ஒப்புக்கொண்டதின் மூலம் அவர் அந்தக் கருத்துகளை ஏற்கிறார். நமக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான உறவு அவரது இசை மட்டும்தான். அதைத் தாண்டி அவர் பற்றிய கவலை நமக்குத்  தேவையில்லை. பாட்டு நல்லா இருக்கா, பாராட்டுவோம். இல்லையா, பாட்டை விமர்சிப்போம். "நாம் விரும்பும் கட்சியை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் புத்திசாலிகள். நாம் எதிர்க்கும் கட்சியை ஆதரிப்பவர்கள் அறிவிலிகள்" என்பது ஒரு மந்தை மனநிலை.

? கம்பன் கழக நிறுவனரும் / தலைவருமான கண. சிற்சபேசன் மறைவு?
– மதுரை குழந்தைவேலு, சென்னை

! நகைச்சுவையை தன் வாழ்வின் ஒர் அங்கமாகவே கொண்டிருந்த தமிழ் அறிஞர். இலக்கிய மேடையாக இருந்தாலும் சரி,  ஹ்யூமர் கிளப் அரங்கமாக இருந்தாலும் சரி தன்  நகைச்சுவைப் பேச்சால் கலக்குபவர்.

பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்க முதல் நாளே அவர் வந்திருந்தார். அன்று மாலை ஒரு கவியரங்கம். கவியரங்கத் தலைவர் வரவில்லை. சிற்சபேசனை தலைமைத் தாங்க கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒப்புக் கொண்டார். கவியரங்கம் நிறைவில் அவர் பேசியது.

"கவியரங்கத் தலைவர் வரவில்லை என்பதால் என்னை தலைமை தாங்க அழைத்தீர்கள். நானும் வந்து செய்து கொடுத்தேன். அழைப்பிதழில் பார்த்தேன், 'நாளை காலை குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கச்சேரி' என்று போட்டிருந்தது. அவர் வராவிட்டாலும் ஒன்றும் பிரச்னை இல்லை நான் இங்கு தான் இருக்கிறேன். என்னை நீங்கள் அழைத்துக் கொள்ளலாம். எனக்கு வயலின் வாசிக்க தெரியுமா என்று நீங்கள் கேட்பீர்கள். இதை மட்டும் என்ன தெரிந்தா செய்தேன்" என்றதும் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

? இந்த ஆண்டு ராம நவமி கொண்டாட்டங்களில்  மட்டும் ஏன் இவ்வளவு வன்முறை?
– மகாலட்சுமி, திண்டுக்கல்

! "இறைவழிபாடு"  என்ற பெயரால்  நாட்டில் வெறுப்பரசியல் புகுந்து கொண்டிருக்கிறது. ராம் ஜன்ம பூமியில் ஆண்டுதோறும் ராம் தினத்தன்று தமிழக டிரஸ்ட் கோவில் ஒன்றின் பூஜைக்கான அத்தனை உதவிகளையும் செய்பவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தினர்.  இந்த ஆண்டு சில நகரங்களில் ராம நவமி பண்டிகை ஊர்வலத்தில் பக்தர்கள்  கைகளில் வாள், கம்பு, துப்பாக்கி ஏந்திச் சென்ற காட்சியைப் பார்த்தபோது  மனதில் தோன்றியது,  'ராமர் இவர்களை மன்னிக்கட்டும்.'

? கவர்னர் ஏன் தமிழக அரசின் மசோதாக்களை தாமதப்படுத்துகிறார்?
– தமிழன்பன், சேலம்

சந்தேகமில்லாமல் அரசியல் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. கவர்னரின் பணிகளுக்கு  கால வரம்பு நிர்ணயம் செய்யப்படாததால் இது போன்ற தாமதங்கள் ஒன்றிய அரசில் ஆட்சியிலிருக்கும் கட்சியால்
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின்மீது பயன்படுத்தக்கூடிய ஆயுதமாகிவிட்டிருக்கிறது.

? தமிழக அரசு கல்விக் கொள்கையை அறிவிக்க ஒரு குழு அமைத்திருக்கிறதே?
– கண்ணபிரான், நெல்லை

! புதிய கொள்கை அறிவிப்பது இருக்கட்டும். இருக்கும் கொள்கையின் கீழ நடந்து கொண்டிருக்கும் தவறுகளை முதலில்  சரி செய்யட்டும்.

அரசு தமிழ்ப்பாடப் புத்தகத்தின் இந்தப் பக்கங்கள் ஔவையாரை edit செய்து, 'அ'னா 'ஆ'வன்னாவை குழந்தைகள் மனத்தில் பதிய வைப்பதற்காகவே என்று  எழுதப்பட்ட கொன்றைவேந்தனை
இஷ்டப்பட்டபடி மாற்றியிருக்கிறார்கள். இப்படி  மாற்றும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. தமிழ் நாடு பாடப்புத்தகக் கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழில் உயிரெழுத்து எத்தனை என்று கேட்டால் பல குழந்தைகளுக்குத் தெரியாமல் இருப்பதற்கு  இதுவும் ஒரு காரணம்.

? இந்தியாவின் நான்கு திசைகளிலும் பிரும்மாண்ட அனுமன் சிலை அமைக்கிறார்களே?
– நமச்சிவாயம், சிதம்பரம்.

! அனுமனின் மகிமையை அனைவரும் அறிந்து கொள்ளவும் நாட்டை பாதுகாக்கவும்  நாட்டின் நான்கு திசைகளிலும் பிரும்மாண்ட அனுமன் சிலைகளை (108 அடி உயரம். ஒவ்வொன்றும் 100 கோடி) நிறுவ ஒரு தனியார் அறக்கட்டளை முன்வந்திருக்கிறது. ஏற்கெனவே வடக்கே சிம்லா, கிழக்கே குஜராத் இடங்களில் நிறுவியுள்ள இந்த அறக்கட்டளை, தற்போது தெற்கே ராமேஸ்வரத்தில் பணியைத் தொடங்கி உள்ளது. அனுமதிகள் பெற்று தெய்வச் சிலைகள் அமைப்பதும் வழிபடுவதும் பக்தர்களின் உரிமை. தவறில்லை. ஆனால்  மதச்சார்பின்மையை கொள்கையாகக் கொண்ட அரசியலைமைப்பு சட்டத்தை காக்கவேண்டிய  நாட்டின் பிதமர் இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட மத விழாக்களில் பங்கெடுப்பதுதான் தவறு.

? நம்மிடம் முரண்டு செய்துகொண்டிருக்கும்  இலங்கைக்கு   இப்போதைய நெருக்கடியில் ஏன் இந்தியா உதவுகிறது?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! "பக்கத்து வீட்டுக்காரன் கஷ்டப்படுகிறார்" என்ற மனிதாபிமானத்துடன்தான். இதில்  இந்தியாவின்  வெளியுறவுகொள்கையின் ராஜதந்திர முன்னெடுப்பும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் நண்பரே.

? எதிர்கட்சிகளின் கூட்டறிக்கை  எதைக்காட்டுகிறது?
– சம்பத்குமாரி, சென்னை

! மக்களின் மனத்தை.  இந்திராவின் எமர்ஜென்ஸி இந்திய அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்குப் புரியும். அன்றும் இதுபோல் வெளியான கூட்டறிக்கை தான்  எழுந்த எதிர்ப்பலைகளின் முதல் துளி.

? இனி பிரும்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சினிமாக்கள் மட்டும்தான்  வெற்றிபெறுமா ?
– ரஹ்மான், திருச்சி

! அப்படிச்சொல்வதற்கில்லை. 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் காசை வாரி இறைத்து எடுக்கப்பட்ட படம்  'ராதே ஷ்யாம்'. கைரேகை ஜோசியம் பலிக்கும் என்று சொல்ல உலகின் பல நாடுகளில் எடுக்கப்ட்ட படம் இது. ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. படங்கள் ஓடுவது பட்ஜெட்டினால் மட்டுமில்லை.

? இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக அமெரிக்கா    சொல்லுகிறதே?
– ரஞ்சனிப்பிரியன், பள்ளிப்பாளையம்

! உலகமெங்கும் மனித உரிமைகள் தினந்தோறும் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இந்திய அளவில் காவல்துறை அடக்குமுறை, மத வன்முறைகள், குழந்தைத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால்  அதைச்சொல்லும்  தகுதி  அமெரிக்காவிற்கு இல்லை என்பது உண்மை.  அவர்களுடையது புனிதமான தேசம் இல்லை. உலகிலேயே  மனித உரிமை மீறல்கள் அதிகமாகியிருக்கும் நாடு அமெரிக்கா.

? தமிழகத்தில் கொரோனா முற்றிலும்  போய்விட்டதா?
– அருணாச்சலம் தென்காசி

! அதிகாரப்பூர்வமாக  அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் அண்மையில் மதுரையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவிலும், திருவண்ணமலை கிரி வலத்திலும் பங்கு கொண்ட பக்தர்களின் கூட்டம் அறிவித்துவிட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com