ஆச்சர்யப்படுத்தும் ஆம்பல் நிறுவனம்.

ஆச்சர்யப்படுத்தும் ஆம்பல் நிறுவனம்.
Published on

ழுத்தார்வமிக்க இல்லத்தரசிகள், வளரும் எழுத்தாளர்கள், பருவ இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளார்கள் போன்ற பலருக்கு இருக்கும் கனவு. தன் படைப்புகளை புத்தகமாக வெளியிடுவது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்று முதல் வழிகாட்ட யாருமின்றியும் பொருளாதாரமின்றியும் புத்தகம் வெளியிடுவதைத் தவிர்த்தும் வரும் எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கும் இயக்கம்தான் ஆம்பல்.

குழந்தைகள் முதல் வாழ்வில் சோதனைகளை சந்தித்த பெண்கள், திருநங்கை போன்ற மூன்றாம் பாலினத்தவர் போன்றவர்கள் மட்டுமில்லாமல், பிரபல எழுத்தாளர்களும் இவர்கள் மூலம் தங்கள் புத்தகங்களை வெளியிடுவது வியக்க வைக்கிறது . பேக்கிடெர்ம் டேல்ஸ் (PachyDermTales literary consultancy) எனும் இலக்கிய கன்சல்டன்சி நிறுவனம் . தமிழில் ஆம்பல் கதைகள்… தமிழில் மட்டுமல்லாமல் 16 உலக மொழிகளில் இந்நிறுவனம் அந்த மொழிகளின் பெயர் கொண்டு இயங்கி வருகிறது.

கொரோனாவின் முதல் அலையில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தரமான பதிப்பகங்களுடன் இணைந்து சுமார் 600 புத்தகங்களை மின் நூலாகவும் அச்சு நூலாகவும் பிரசுரித்து குறுகிய காலத்திலேயே பலரது கவனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, குழந்தைகளின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் குழந்தை எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய 35 புத்தகங்களை வெளியிட்டும் எழுபது வயதுக்கும் மேல் ஆன பெண்மணியின் நூலை பதிப்பித்ததும் வெகு சிறப்பு.

இதன் நிறுவனரான லட்சுமிப் பிரியா சிறிய வயதிலேயே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் .ஓவியம் எழுத்து போன்ற பல தளங்களில் உருவாக்கும் திறனுடன் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவர். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் .சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான இவர் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற அயல் நாடுகளில் இலக்கிய உரையை ஆற்றிய பெருமைக்குரியவர் . இந்தியாவில் சண்டிகர், டார்ஜிலிங் போன்ற நகரங்களிலும் அயல்நாடுகளிலும் மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் பேராசியராகவும் உள்ளார் .தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளை கற்றறிந்தவராகவும் உள்ள லட்சுமிப் பிரியாவின் மொழித் தாகமும் உலகம் முழுக்க உள்ள படைப்பாளர்களை பாகுபாடில்லாமல் நேசிக்கும் தன்மையும் நம்மை அசத்துகிறது.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆன லட்சுமிப் பிரியாவை வேலூரில் சந்தித்தோம் .உடன் அவருக்கு பக்கபலமாக இருக்கும் அவரின் தாய் உமா அபர்ணாவும் இருந்தார் ..உமாவும் சிறந்த எழுத்தாளராக விளங்குகிறார் .இவரின் 'கண்ணாடி' எனும் பெண்கள் பற்றிய கதைத்தொகுப்பு நூல் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றது.

படைப்பாளர்களின் கனவுகளை நிறைவேற்றும் இந்த நிறுவனத்தை துவங்கியதின் நோக்கம் என்ன?

"என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் அம்மா உமா அபர்ணாதான் .சின்ன வயதிலிருந்தே புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தி எழுத்துடன் எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியதால்தான் என்னால் எழுத்துகளின் வலிமையைப் புரிந்து அதை ஆராதிக்க வைத்தது. எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லை. ஆனால், ஆயிரம் நண்பர்களுக்கு சமமான புத்தகங்களை அதிகம் வாசித்துள்ளேன்… பாலகுமாரன், ஜெயகாந்தன், உதயமூர்த்தி போன்றவர்கள்தான் என் சிறுவயதின் பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமித்தவர்கள்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிகழும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே நல்ல கதைகளாக உருவாகிறது. எல்லோருக்குள்ளும் எல்லோருக்கும் கூறக்கூடிய வகையில் கதைகள் உண்டு என்பதை அதிகம் நம்புவேன் .அப்படி உருவாகும் நல்ல படைப்புகள் வெளியே தெரியாமல் போவது என்பது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு இழப்புதான் என்பதையும் அறிந்தேன்.

சிறு வயதில் புத்தகங்கள் மீதான என் நேசம் என்னையும் எழுத்தாளராக்கியது. கல்வி முடித்தவுடன் அதுவரை நான் எழுதியிருந்தவைகளை புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன். ஆனால், அதில் பல சிரமங்களை அனுபவங்களாகப் பெற்றேன். சரியான வழிகாட்டி  இன்றி. ஒரு புத்தகம் வெளியிடுவதென்பது பெரும் பிரயத்தனம் என்பது புரிந்தது. படித்த நானே இப்படி தடுமாறும்போது வீட்டை விட்டு வெளியே வராத, எழுதுவதில் திறமையான பெண்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன்.

ஒரு புத்தக வெளியீட்டில் பொருளாதாரம் முதல் பரவலாக வாசகர் இடம் சேர்த்து அதை விற்பனை செய்வது .வரை பல சிரமங்கள் இருப்பதை உணர்ந்து அவற்றை எப்படி கடந்து வருவது என சிந்தித்ததின் விளைவே பேக்கிடெர்ம்ஸ்டேல்ஸ் (PachyDermTales literary consultancy) துவங்கியதின் நோக்கம்.

திறமையுள்ளவர்களின் பிளாட்ஃபாரமாக இருந்து அவர்களை தேர்ந்த படைப்பாளிகளாக மாற்றுகிறோம் .அவர்களுக்குத் தகுந்த பதிப்பகத்தை தேர்ந்தெடுத்து தருவது முதல் உலக அளவில் அவற்றைப் பெரும்பாலான வாசகர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்துக்கும் ஆலோசனையுடன் வழிகாட்டியாக இருக்கிறோம். 'மகிழ்வித்து மகிழ்' என்பதன் அடிப்படையில் பெரும் மன நிறைவை அடைகிறோம்.

தாய்மொழி தமிழ் என்பதில் அளவற்ற ஆனந்தம் கொண்டாலும் என் மொழியைத் தாண்டி பிற மொழிகளையும் நேசிக்கத் துவங்கி உலக அரங்கில் தமிழின் பெருமையைக் கொண்டு செல்ல ஆசை.

எங்கள் மூலம் வெளிவரும் புத்தகங்களின் முழு உரிமையும் அதை எழுதியவர்களுக்கே . 'எப்படி என் புத்தகத்தை வெளியிட்டு நானும் ஒரு எழுத்தாளர் எனும் அந்தஸ்தைப் பெறுவது' என ஏங்கும் எவராக இருந்தாலும் எங்களிடம் வரலாம் .பதிப்பகதிற்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் இணைக்கும் பாலமாக இருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறது எங்கள் நிறுவனம்.

வடிவமைப்பில் இருந்து இணையதளங்களில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு உதவுவது வரை துணை நிற்போம் . "உங்களின் நெகிழ்ச்சியே எங்கள் பணிக்கான மகிழ்ச்சி" என்று அழகாக புன்னகைத்து சொல்கிறார் லட்சுமிப்பிரியா.

உங்கள் நிறுவனத்தின் அடுத்த கட்ட இலக்கு?

தமிழ் மொழியின் அடையாளமாகத் திகழும் 1330 திருக்குறள்களில் ஏதோ ஒன்று நிச்சயம் நம் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களில் பிரதிபலித்து "அன்றே திருவள்ளுவர் சொன்னார்" என்ற சான்றாக ஆகும். உதாரணமாக என்றோ நம்மை புண்படுத்தி தங்கள் நாக்கினால் கடுஞ்சொல் பேசியவர்களை நினைவுபடுத்தும் "தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு" எனும் குறள். இப்படி அனைத்துக் குறள்களுக்கும் தகுந்த வாழ்வியல் நிகழ்வுகளை அனுபவப்பட்டவரின் வாயிலாகத் தொகுத்து ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் வெளியிட உள்ளோம்.

அடுத்து ஹக் யுவர்செல்ப் (உங்களை நேசியுங்கள்) எனும் ப்ராஜெக்ட். அதாவது நாம் எப்படி இருந்தாலும் நம்மை நாமே நேசிப்பதன் மகத்துவத்தை உலகளாவிய அளவில் உள்ள பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளின். துணையுடன் புரிய வைப்பது . எழுத்தாளர்கள் என்று சொல்வதைவிட அந்த வலியைப் புரிந்துகொண்டவர்கள். சில செயல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்.

சப்பை மூக்கு, ஒடுங்கிய கன்னம் ,கறுப்பு நிறம் பல வண்ண முடிகள் வெள்ளை வெளேர் நிறம், வெண்புள்ளி போன்ற தோல் நோய்கள் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் பலவித மொழிகள் இப்படி பல வகைகளில் தங்களை தாழ்த்திக் கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்னைகளை சிறுகதைகள் வாயிலாக எழுதி அவற்றைத் தொகுப்பாக வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள இளம்தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்த பிராஜெக்ட்டின் நோக்கம் …முதலில் ஆங்கிலத்திலும் பிறகு படிப்படியாக அனைத்து உலக மொழிகளிலும் இந்த பிராஜெக்டை கொண்டு செல்ல உள்ளோம். இது புறத் தோற்றத்தாலும் பிறப்பினால் வரும் மாற்றங்களை ஏற்க முடியாமல் தாழ்வுமனப்பான்மையால் தனக்குள்ளே நத்தையாய் சுருங்கி திறமைகளை முடக்கிக் கொள்பவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வரும் ஒரு சிறு முயற்சி.

அடுத்து இளம்பெண்களை எழுதத் தூண்டும் வகையில் அவர்களுக்கு மானியம் அதாவது, எழுத்து ஊக்கத் தொகையாக ரூபாய் 25,000 அளிக்கும் திட்டம் உள்ளது .25 வயதுக்குள் உள்ள பெண்கள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். 'கிரான்ட்' எனும் இந்த முறையின் விதிமுறைகள் தமிழில் நாவல் எழுத வேண்டும் .முதல் ஐந்து பக்கங்கள் கதையை அனுப்ப வேண்டும் .எங்கள் குழுவின் பார்வையில் பரிசீலித்து முழு நாவலுக்கு அனுமதி கிடைக்கும் .அப்படி எழுதுவோரில் சிறந்த படைப்பைத் தரும் இளம் பெண்ணுக்கு அவர் நாவலை எழுதும்போதே ஊக்கத்தொகை தருவதன் மூலம் அவரை மேலும் எழுதத் தூண்டுவது..இதைப் பார்த்துஒரு இளம்பெண் எழுத முன்வந்தாலும் எங்களுக்கு கிடைத்த வெற்றிதான்.

இப்படி பல திட்டங்கள் எழுத்தாளர்களுக்காக எங்களிடம் உள்ளது. அவற்றை நிறைவேற்ற காலமும் முயற்சியும் எழுத்தாளர்களும் நன்கொடை தரும் புரவலர்களும் எங்களுடன் கை கோர்க்க வேண்டும் .வாசிப்புப் பழக்கம் வேண்டுமெனில் நல்ல புத்தகங்கள் இருக்க வேண்டும். 'நல்ல புத்தகங்களை வெளியிட்டு உதவி செய்ய இருக்கவே இருக்கு ஆம்பல்' எனும் பெயரை வாங்கும் காலம் வெகு அருகில்      உள்ளது…" உறுதியாக சொல்லி முடித்தார் லட்சுமிப் பிரியா.

எழுத்து புத்தகங்களையும் தாண்டி ஆண்டுதோறும் பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருவதுடன் சென்ற வருடம் பிரபல நிறுவனங்களுடன் இணைந்து 'ஆருஷி' எனும் நிகழ்வில் பங்குகொண்டு கிராமப்புற பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கி மாதவிடாய் குறித்த விழிப்புணர்வையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியது சிறப்பு .

"மொழிபெயர்ப்பிலும் சர்வதேச அளவில் இணையதளம் மூலம் எடுக்கும் பயிற்சிகளிலும் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை இந்த பணிக்காக ஒதுக்குவதில் பெரும் மகிழ்ச்சி" என்று சொல்லும் லட்சுமிப்பிரியாவின் லட்சியம் "எழுத்து திறமை உள்ள எல்லோருக்கும் வாய்ப்புதர வேண்டும்."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com