பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன

பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன
Published on

இரவின் நிழல் சினிமா விமர்சனம்

– லதானந்த்

லகின்  'முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம்' என்ற  பரப்புரையுடன் வெளியாகியிருக்கிறது பார்த்திபன் எழுதி, இயக்கி நடித்திருக்கும், 'இரவின் நிழல்'. இது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் அல்ல என்ற சர்ச்சை ஒன்றும் இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

படத்துக்குள் போவதற்கு முன்னர் "நான் லீனியர் என்றால் என்ன?" என்றும் "சிங்கிள் ஷாட் என்றால் என்ன?" என்றும் பார்த்துவிடலாம்.

பொதுவாக, 'ஒரு ஊரில் ஒரு ராஜா; அவருக்கொரு ராணி; அவர்களுக்கு ஒரு குழந்தை' என்ற வாக்கில் நிகழ்ச்சிகள் நடந்த காலக் கிராமத்திலேயே தட்டையாகக் கதை சொல்லுவதை, 'லீனியர்' முறை என்பார்கள்.

அதற்கு மாறாக, கதை நிகழ்வுகளின் கால வரிசையை மாற்றி, முன்னும் பின்னுமாகக் கதையை நகர்த்துவது, 'நான் லீனியர்' வகை. கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் கதை முன்னும் பின்னுமாக நகர்வதுண்டு. உதாரணத்துக்கு அந்தக் காலத்தில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கி, சிவாஜி நடித்த 'அந்த நாள்' படத்தைச் சொல்லலாம். இந்தக் கால உதாரணம் வேண்டுமெனில் சமீபத்தில் வெளியான, 'விக்ரம்' படத்திலும் நான் லீனியர் சாயல் இருக்கும். இரவின் நிழலில் கதாநாயகனான பார்த்திபனின் கண்ணோட்டத்திலேயே அவரது கடந்தகால் வாழ்க்கைப் பருவங்களும் சந்தித்த பல கசப்பான அனுபவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

சரி… அடுத்ததாக சிங்கிள் ஷாட் விவகாரத்துக்கு வருவோம். பொதுவாக படத்தின் திரைக்கதைக்கு ஏற்பக் காட்சிகளை அமைத்தவுடன், அவற்றை சீன்களாகப் பிரிப்பார்கள். ஒவ்வொரு சீனின் ஆரம்பத்தில் கேமிரா ஆன் செய்யப்பட்டு, சீன் முடிந்ததும் ஆஃப் செய்யப்படும். இதை ஒரு டேக் என்பார்கள். இப்படிப் பல நறுக்குகளைக் கொண்டு, பின்னர் எடிட் செய்யப்பட்டு முழுத் திரைப்படமாக வெளியாகும். ஆனால் ஒரே ஒரு டேக்கில் மொத்தப் படத்தையும் எடுப்பது மிகப் பெரிய சவால்தான்.

சரி படம் என்ன சொல்கிறது?

கந்து வட்டிக்காரரான பார்த்திபனின் கொடுமையால் படத் தயாரிப்பாளர் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் பார்த்திபன் உயிருக்குயிராக நேசிக்கும் குழந்தையும், மனைவியும் அவரைவிட்டுப் பிரிகிறார்கள். ஏற்கெனவே பல பாவச் செயல்களின் சுமையால், தன்னிரக்கப்பட்டுத் துவண்டிருக்கும் பார்த்திபன் எடுக்கும் முடிவுதான் கதை.

கதையின் உரையாடல்களில் பல காதுகொடுத்துக் கேட்கக் கூசும் அளவுக்கு இருக்கின்றன. 'பீப்' கொடுக்கப்பட்டிருந்தும், பச்சையான – கொச்சையான வார்த்தைகளை யூகிக்கவே முடிகிறது. தவிர்த்திருக்கலாம்.

பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

உதாரணத்துக்கு, "பணத்தைவிட உயர்ந்த எவ்வளவோ விஷயங்கள் உலகத்தில் இருக்கின்றன; ஆனால் அவற்றைப் பெறவும் பணம் தேவைப்படுகிறது" என்பதைச் சொல்லலாம்.

மூன்று மாதங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு, 90 நிமிடங்கள் ஓடும் படத்துக்கு முன்னர், அரை மணி நேரம் இந்தப் படம் எப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதைத் திரையிலேயே காண்பிக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி பார்த்திபன் உள்வாங்கிச் செயல்படுத்தியிருக்கிறார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவுக்குத் தரமானதாக இருக்கிறது அந்த 'மேக்கிங்'! நூற்றைம்பது தொழில்நுட்பக் கலைஞர்கள், ஏராளமான நடிகர்களுடன் இந்த பிரம்மாண்டத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கும் பாத்திபனுக்குப் பாராட்டுகள்.

மேக்கிங் பகுதியில் பார்த்திபன் சொன்னது: "ஒரு கட்டத்தில் நான் பிரியாணி சாப்பிடும் காட்சி இருக்கும். உண்மையிலேயே அது கெட்டுப்போயிருக்கும். அதற்காக ஓடும் படப்பிடிப்பை நிறுத்தினால் மறுபடியும் முதலில் இருந்து எடுக்க வேண்டியிருக்கும். கெட்டுப் போன பிரியாணியால் வரும் கஷ்டத்தை விட, மறுபடியும் படமாக்கினால் வரும் நஷ்டம் அதிகம் என்பதால் அந்தக் கெட்டுப்போனதையே சாப்பிட்டேன்."

படத்தில் அனாதைச் சிறுவன் பத்தாவது வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும், கஞ்சா விற்பதும், பின்னர் சாராயம் காய்ச்சுவதும், திருட்டுகளில் ஈடுபடுவதும், பாவங்களில் அவன் மூழ்குவதும் அழுத்தமாச் சொல்லப்பட்டிருக்கின்றன.

கந்து வட்டி சினிமா ஃபைனான்ஸியரின் கொடுமையால், படத் தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொள்வதாகச் சித்தரிக்கப்பட்ட காட்சிகள், ஊடகங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிபட்ட செய்தியினை நினைவூட்டுகின்றன.

பார்த்திபனின் வாய்ஸ் ஓவர் படம் நெடுக வந்தபோதும், பொருத்தமாக இருப்பதால் சலிப்பைத் தருவதில்லை.

படத்துக்கு வலு சேர்ப்பன பாடல்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும்; ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ஷொட்டு!

மொத்தத்தில் இரவின் நிழல்:  பலே பார்த்திபன்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com