மனதில் உறுதி வேண்டும் 

மனதில் உறுதி வேண்டும் 
Published on

தலையங்கம்

ட்டம் தன் கடமையைச்செய்யும் என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு வாசகம். உண்மையிலே சட்டம் எல்லா நேரங்களிலும்  அப்படி தன் கடமையைச் செய்துவிடுகிறதா?  சட்டங்கள் இயற்றுபவர்களே அதை மீறுகிறார்கள்  என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்குகள் நிலுவையிலிருப்பவர்கள், தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். சிலர் வெற்றியும் பெறுகிறார்கள். வழக்குகள் விசாரணையில் இருப்பதைக் காரணம் காட்டி, அரசியல்வாதிகள் அரசியலில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவும் செய்கின்றனர்.  குற்றம் சாட்டப்பட்டவருக்கான சட்ட பூர்வ சலுகைகள் சாதாரண குடிமக்களுக்கான உரிமைகள், அவற்றைச் சட்டம் இயற்றுபவர்கள் தங்களது பாதுகாப்பு அரணாக மாற்றிக்கொள்ளகிறார்கள்.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. டிசம்பர் 4, 2018 தொடங்கி நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மீதான 2,775 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன என்றாலும், வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 4,122-லிருந்து 4,984-ஆக உயர்ந்துள்ளன. இந்த வழக்குகளில் 1,651 வழக்குகள் கடும் தண்டனைக்குரிய கொடுங்குன்றங்களாகும்.

இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் 1,899 வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

தற்போது ஐந்து மாநிலங்களில் நடந்த  சட்டமன்றத் தேர்தல்களிலும்கூட குற்ற வழக்கு நிலுவையிலுள்ள வேட்பாளர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டியிடுகிறார்கள். உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தங்களது வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய உறுப்பினர்களில் 16 பேர் மீது குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டமியற்றும் அவைகளில் இடம்பெறுவதைத் தடுக்கும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. குற்றப் பின்னணி உள்ளவர்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் இதை தங்கள் கொள்கையாகவே அறிவிக்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, 'குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தங்களது நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க மாட்டோம்'  என்ற  மன உறுதியும் வாக்காளர்களிடம் உருவாக வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com