அது  பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமானம் தரும் சுரங்கம்

அது  பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமானம் தரும் சுரங்கம்

Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? "நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதற்கு நேருதான் காரணம்" என்கிறாரே மோடி?
– தியாகராஜன், கவண்டன்பாளையம்.

நேரு மறைந்து 57 ஆண்டுகளாகின்றன.  இன்றை பொருளாதார நிலைக்கு அவரைக் காரணம் காட்டுவது தனிமனித வெறுப்பின்,  காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்.

நேரு கட்டமைத்த ஜனநாயக அமைப்புகள், அவர் கற்றுக்கொடுத்த செக்யூலரிசம், அரசியல் நாகரிகம், அவர் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானங்கள், உயர்கல்வி நிலையங்கள், அவர் வரைந்து தந்த பன்னாட்டுக் கொள்கை சார்ந்த புரோடோகால்கள் இவை எல்லாம் நிகரற்றவை. சீனப் பிரச்னையை நிஜமான கரிசனத்துடன் தீர்க்க அணுகிய வேறு பிரதமர் சுதந்திர வரலாற்றில் இல்லை. அதே நேரம் தனது செயலின் விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவற்றை நாடாளுமன்றத்துக்கும், ஊடகங்களுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து அறிவித்துக்கொண்டு தவறுகளை ஏற்றுக்கொண்டு இயங்கியதிலும் அவருக்கு நிகரான அரசியல் தலைவர் உலகிலேயே இல்லை.

நேரு எதிர்கொண்ட பிரச்னைகளில் 10 சதவிகித அளவுகூட இன்றைய பிரதமர் எதிர்கொள்ளவில்லை. எதிர்கொண்ட பிரச்னைகளிலும் நேரு காட்டிய நேர்மைத் திறனில் ஐந்து சதவிகிதம்கூட காட்டவில்லை.

? ஒடிடி தளங்கள் பல கோடிகள் கொடுத்து படங்களை வாங்குவதாகச் சொல்லுகிறார்கள்.  அந்த தளங்கள்  எப்படி லாபத்தில் இயங்குகின்றன?
– மனோகரன், திருநகர்,  மதுரை

! நாள்தோறும்  உலகெங்கும் இந்த தளங்களின் சந்தாதாரர்கள்  பல ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்
கிறார்கள். இன்றைக்கு 'டிவி இல்லாத வீடுகளே இல்லை' என்பதைப் போல 'இந்த தளங்களின் இணைப்பு இல்லாத டிவிக்களே கிடையாது' என்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.  இந்த சந்தாக்களால் கிடைக்கும்  வருமானம் விளம்பரங்களால் கிடைப்பதைவிட அதிகம் மட்டுமில்லை, அது  பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து  வருமானம் தரும் சுரங்கம். அதுமட்டுமில்லை, இம்மாதிரி தளங்களுக்கு படம் கொடுப்பவர்களுக்கு உடனடி இலாபம் கிடைக்கிறது. 'மின்னல் முரளி' படம் NETFLIX இல் ரிலீஸ் ஆனது.  'மின்னல் முரளி' திரைப்படம் வரலாறு காணாத அளவில் அதிலும் ஒரு பிராந்திய மொழி திரைப்படம் சுமார் 12 மில்லியன் மணி நேரங்கள் உலகம் முழுதும் பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் 18 கோடி. Distribution rights sold for Rs 25 கோடி. எடுத்த எடுப்பில் 7 கோடி லாபம். அதாவது சுமார் 45%. இனி சினிமாக்களில் இந்த model தான் நாள்பட workout ஆகும்.

?   'எந்த காலத்திலும் 'கிரிப்டோகரன்சி' சட்டப்பூர்வமான பணமாக இருக்காது' என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளதே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! ஆனால், 'அதில் கிடைக்கும் வருமானத்துக்கு வரி  உண்டு' என அறிவித்திருக்கிறார்கள்.  'வருமானம் எந்த வழியில் கிடைத்தாலும் பரவாயில்லை, ஆனால்  வரி செலுத்தினால் போதும்' என்பது இந்த அரசின் நிலை. இதில் வேடிக்கை என்னவென்றால்  'தர்மத்தின் வழி நின்று வரி வசூலிக்க வேண்டும் என்ற  கொள்கையைத்தான் இந்த அரசு கடைப்பிடிக்கிறது' என்று நிதி அமைச்சர் தன் பட்ஜெட் உரையில் சொன்னதுதான்.

? நீட்  தேர்வு விஷயத்தில் எடப்பாடி,  ஸ்டாலின் இருவருமே பொது விவாத்துக்கு சாவல் விடுகிறார்களே?
– ருக்மணி, விழுப்புரம்

! தாயத்து, லேகியம், மருந்து விற்பவர்கள் தங்கள் வியாபாரம் முடியும் வரை பாம்பிற்கும் கீரிக்கும் ஆக்ரோஷமான  சண்டை நடக்கப்போவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் 'சண்டையே நடக்காது' என்பதை கவனித்திருப்பீர்களே…!!!

? "கடந்த 5 ஆண்டுகளில் பஞ்சாப்பில் நடந்தது மிக  மோசமான ஆட்சி" என்று பா.ஜ.க.  பிரசாரம் செய்கிறதே?
– கிருஷ்ணகுமார், சென்னை

! அவர்கள் சொல்லும்  மோசமான ஆட்சியைத் தந்த  முதல்வரின் புதிய
கட்சியுடன்தான் இப்போது பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கிறது.

? கனடா அரசியலில் என்ன நடக்கிறது?
– கண்ணபிரான்,  நெல்லை

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக எழுந்த போராட்டம் இது.  அண்மையில் , கனடா-அமெரிக்காவை இணைக்கும் முக்கியமான வணிகப் பாதையான விண்ட்சரில் உள்ள தி அம்பாசிடர் பாலத்தில், 'கனடா எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் டிரக் ஓட்டுநர்களும்… அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் டிரக் ஒட்டுநர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர்' என்ற கனடிய அரசின் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக தொடங்கியதே இப்போராட்டம்.
இப்போது மெல்ல அரசியல் வடிவம் எடுத்திருக்கிறது. தீவிரமடைந்துள்ள போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்தக் கொரோனாதான் எத்தனை விதமான பிரச்னைகளை உருவாக்குகிறது?

? அரியானாவில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு 'போர்ட் தேர்வு' என அறிவித்திருக்கிறார்களே?
– சம்பத் குமாரி, நெய்வேலி

! சிறுவர்களுக்கு தோல்வி, ஏமாற்றம் போன்றவைகள் ஏற்பட்டு அவர்கள் எதிர்காலம் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளில் மாணவர்களை பெயிலாக்கக் கூடாது என்பது தேசிய அளவில் அனைத்து மாநிலங்களாலும்  ஏற்கப்பட்ட முடிவு. பத்து வயது சிறுவர்களை தேர்வை காட்டி அச்சம் கொள்ளச் செய்யும் இந்த முடிவு குழந்தைகளின் மன நலத்தைப் பாதிக்கும். அவர்களின் மீது பெற்றோரின் அழுத்தம் அதிகமாகும்.

?  தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக அதிகாரி சித்ரா, வேறு ஒருவரின் வழிகாட்டுதல்படி நடந்தது தவறு தானே?
– நெல்லை குரலோன், பாப்பான்குளம்.

! அதைவிடப் பெரிய தவறு, பங்கு சந்தையின் நிர்வாகத்தை கண்காணிக்கும் குழு  தூங்கிக் கொண்டிருந்ததுதான். உண்மையிலேயே ஒரு யோகி இமாலயத்திலிருந்து  இயக்கினாரா? அல்லது பலனடைந்தவரின்  கற்பனையில் உருவாக்கப்பட்டவரா?  என்பதை யாராவது ஒரு யோகிதான்  தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடித்துச்  சொல்ல வேண்டும்.

? ஒரு வெளிநாட்டுகாரர் கூட தி.மு.க.விற்காக  ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தாரே?
– வெங்கட்ராமன், ஶ்ரீபெரும்புதூர்

! அவர்கள் நாட்டில் இம்மாதிரி பிரசாரங்களைப் பார்த்திராத  ஒரு ருமானியர் ஆர்வத்தால் செய்த தவறு. வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் டூரிஸ்ட்களுக்கு வழங்கப்படும் விசாவின் நிபந்தனைகளில் ஒன்று, 'இங்குள்ள அரசியல், மத விஷயங்களில் தலையிடக்கூடாது' என்பது.  அவர் அதை அறியாமல் இருந்தாலும் அந்தக் கட்சி தலைவர்கள் அவருக்கு  அதை எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

? "எவை பொய் வாக்குறுதிகள்,  எவை உண்மையான வாக்குறுதிகள்" என்று எப்படி அறிவது?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! வாக்குறுதி என்றாலே உண்மைதானே சார். தமிழில் பயன்படுத்தப்படும்  தவறான சொல்லாடல்களில் ஒன்று பொய்வாக்குறுதி.

? சமீபத்தில் நீங்கள் ரசித்த ஜோக் ?
– செல்வகுமார்,  புதுக்கோட்டை

! அண்மையில் பிரதமர்  மோடி நாடாளுமன்றத்தில்  'அரசின் திடமான நடவடிக்கைகளால் இந்தியாவின் எழைகள் இப்போது தங்களை லட்சாதிபதிகளாக உணர்கிறார்கள்'  என்று சொன்னதுதான்.

? 'கண்டிப்பாக தமிழகத்தைச்  சேர்ந்தவர்  எனக்கு மாப்பிள்ளையாக வர மாட்டார்' என்று சொல்லுகிறாரே அனுஷ்கா?
– எஸ்.அர்ஷத்ஃபயாஸ்,  குடியாத்தம்

! "அதற்கு நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்" என்று புரியவில்லை.

? தராசார் அரசியலில் ஈடுபடுவரா?
– மங்கை கவுதம், நெல்லை

! பத்திரிகையாளர்கள் புத்திசாலிகள்!!!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com