அச்சம் என்பது என்னிடத்தில் அணு அளவும் இல்லை!

அச்சம் என்பது என்னிடத்தில் அணு அளவும் இல்லை!
Published on

சுவாமி குமரகுருபரர் அருளுரை

"புலியூர்க் கிழவனே! உனது பொன்னான திருவடிகளுக்கு வணக்கம். எனது விருப்பத்தைக் கொஞ்சம் திருச்செவி சார்த்தி அருளவேண்டும். சுவாமி! நீ எப்போது தோன்றினாயோ அப்போதே நானும் தோன்றியவன். எனக்கும் உனக்கும் காலத்தால் முன் பின் என்பது இல்லை. உனக்கு இல்லாத சிறப்பு ஒன்று எனக்கு உள்ளது. நீயோ ஒரு பிறவியையும் எடுக்காமல் அநாதியாக உள்ளாய். நானோ பிறப்பை அடைவதில் அநாதியாக உள்ளவன். நீ தோன்றியபோது தோன்றிய நான், அன்று முதல் இன்றுவரை, பிறவிச் சுழலில் அகப்பட்டுச் சுழன்றுகொண்டே இருக்கின்றேன். இருந்தாலும் நான் அச்சம் அடைந்தது இல்லை. பிறவி என்பது அச்சத்தைத் தருவது என்பர். ஆனாலும், பலமுறை பழகிவிட்டதால், அச்சம் என்பது என்னிடத்தில் அணு அளவும் இல்லை. எத்தனையோ பிறவிகளை எடுத்து, அளவில்லாத துன்பங் களை அடைந்து இருக்கின்றேன். ஆனாலும், புதியதாக ஒரு துன்பத்தை அனுபவிக்கும்போது, பழைய துன்பம் மறந்து போகின்றது. எடுக்கின்ற பிறவியால் உண்டாகும் அச்சம் மட்டுமே நினைவில் நிற்கின்றது. அவ்வப் பொழுது அனுபவிக்கும் துன்பம்தான் நினைவில் இருக்கும். பழையது மறந்து போகும்.

'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்பது மணிவாசகரின் கருத்து. ஆனால், எனக்கு அது இல்லை. எத்தனை முறை பிறந்தும், இளைத்துப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இதுவரையில் நான் எடுத்த பிறவிகள் ஒரு கடலைப் போன்றன. இனி எடுக்கப் போகும் பிறப்புகளோ, சிறு சிறு உப்பங்கழி போல்வன. கடலைத் தாண்டியவன் உப்பங்கழியை நீந்துவதற்கா அஞ்சுவான்? இன்னும் எத்தனை பிறவிகள் வந்தாலும், அத்தனைக்கும் நான் அஞ்சமாட்டேன்.

'தில்லையைத் தரிசிக்க முத்தி' என்று ஓர் ஆத்தமொழி உள்ளது. நானும் இதோ,  தில்லையம்பலத்தில் உனது சந்நிதியில் வழிபட்டுக்கொண்டு இருக் கின்றேன். உனது சந்நிதியில் நின்று, கண் இமைக்காமல், உச்சிமேல் கைகளைக் குவித்து வணங்கிக்கொண்டு இருக்கும் தேவர்களுள் சிலர் என்னையும் பார்க்கின்றனர். அவர்களுக்கு எனக்குப் பரிபக்குவம் இல்லை என்பது தெரியாது போல் இருக்கின்றது. தில்லையை எத்தனை முறை சென்று வணங்கினாலும், பரிபக்குவம் அடையாத பிறவிகள் இந்த மண்ணுலகத்தில் பல உள்ளன என்பதை தேவர்கள் அறியாதவர் போலும். தில்லையை வணங்கினால் முத்தி என்பது மட்டுமே அவர்கள் அறிந்து உள்ளது.

'வேதாகமங்களில், தில்லைச் சிதம்பரத் திருக்கூத்தைத் தரிசிப்பவர்க்கு இனி என்றும் பிறப்பு இல்லை' என்று உறுதியாகச் சொல்லப்பட்டு உள்ளது. இவனோ, தில்லையைத் தரிசித்துப் பிறவி தீர்ந்தவனாக இல்லையே. அப்படியானால், தில்லையைத் தரிசிக்க முத்தி என்று வேதாகமங்கள் கூறு வது பொய்மொழியாக இருக்குமோ' என்று தேவர்கள் அச்சப்படுகின்றார்கள். தேவர்களுக்கு இப்படிப்பட்ட அச்சம் உண்டாவது தகுமோ? தேவர்கள் அச்சப் பட்டாலும்கூடப் பரவாயில்லை, தில்லைக் கூத்தனே! உனது திருக்கூத்தைக் கண்டு வழிபட்டவன் பிறந்தும் இறந்தும் உழல்வான் என்னும் அவச்சொல், வேதாகமங்களின் தலையில் ஏறக் கூடாது. தேவர்களுக்கும் வீணான அச்சம் உண்டாகக் கூடாது. எனவே, உனது திருக்கூத்தைக் கண்டு வழிபட்ட எனக்கு, சிவகதியை அருளவேண்டும்"

– சிதம்பர மும்மணிக்கோவை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com