அமெரிக்காவில் திருப்பதி

அமெரிக்காவில் திருப்பதி
Published on

அமெரிக்காவின் ஐம்பது முகங்கள்!

– முனைவர் சோமலெ சோமசுந்தரம்

பென்சில்வனியா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான பிட்ஸ்பர்க் மாநகரில் அமெரிக்காவின் முன்னோடி இந்து ஆலயங்களில் ஒன்றான வெங்கடேசுவரா ஆலயம் உள்ளது. நியூயார்க் நகரில் மகாவல்லவ கணபதி ஆலயம் அமையக் காரணமாக இருந்த திரு அழகப்ப அழகப்பன் அவர்களின் சகோதரர் திரு வள்ளியப்பன், சித்தூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியதால், 1972ல் திருப்பதி வெங்கடேசுவரா ஆலயத்துடன் தொடர்பு கொண்டு பிட்ஸ்பர்க் ஆலயத்தைக் கட்ட ஏழு இலட்சம் ரூபாய் வழங்க அனுமதியைப் பெற்றுக் கொடுத்தார்.

நியூயார்க் நகரில் உள்ள மகாவல்லப கணபதி திருவுருவச் சிலைக்கான கல், திருவண்ணாமலை மலைப்பகுதியில் எடுக்கப்பட்டது என அறிஞர் சோமலெ "அமெரிக்காவைப் பார்" நூலில் குறிப்பிடுகிறார். 'பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி மூலவர் சிலைக்கும் திருவண்ணாமலைக் கல்லே பயன்படுத்தப்பட்டது' என்பது நியூயார்க் ஆலயத்தில் அக்காலத்தில் பணிபுரிந்த அர்ச்சகர்கள் பகிர்ந்து கொண்ட தகவல். நியூயார்க் மற்றும் பிட்ஸ்பர்க் கோயில் மூலவர் சிலைகள் ஒரே கால கட்டத்தில் திரு அழகப்பன் அவர்களின் அரிய முயற்சிகளின் விளைவாகச் செதுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோயிலுக்கும் பிட்ஸ்பர்க் கோயிலுக்கும் தொடர்புகள் மட்டுமின்றி சில ஒற்றுமைகளும் உள்ளன. பிட்ஸ்பர்க் கோயில் உள்ள பகுதியின் பெயர் ஏழு மலைகள் (Seven Hills) பிட்ஸ்பர்க் நகரமும் அதைச் சார்ந்த மேற்கு பென்சில்வேனியா பகுதிகள் அனைத்தும் மலைப் பகுதிகளில் உள்ளன. பல மலைகளையும், பாலங்களையும் கடந்து சென்றால்தான் இந்த அமெரிக்க வெங்கடாசலபதியின் தரிசனம் கிடைக்கும்.

அமெரிக்காவின் மற்ற நகரங்களைவிட பிட்ஸ்பர்க் நகரில் மிக அதிகமாக, 440 பாலங்கள் உள்ளதால் "City of Bridges" என அழைக்கப்படு கின்றது. மின்னஞ்சல் மற்றும் "whatsapp" போன்ற இன்றைய மின் தகவல் தொடர்பில் நீங்கள் பார்க்கின்ற, பயன்படுத்துகின்ற, சிரித்த முகத்தை உலகிற்கு வழங்கிய நகரம் பிட்ஸ்பர்க். 1982இல் அந்த சிரித்த முகத்தை அறிமுகப்படுத்தியவர் இங்குள்ள கார்னெகி மெலான் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்காட் பாகல்மன்.

தையற்காரர் முடிவு செய்த அமெரிக்கக் கொடி

இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து தனி நாடாக அமெரிக்கா பிரிவதற்கு முன்பேயே புதிய நாட்டிற்கான கொடியை வடிவமைக்கும் ரகசியத் திட்டத்தில் இறங்கினார் இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன். இங்கிலாந்து அரசருக்கு எதிரான செயல் அது என்பதால் ரகசியமாகக் கொடியைத் தைக்க நம்பிக்கையான தையற்காரரின் உதவி தேவையாக இருந்தது. தனது படுக்கை அறைக்கு மெத்தை தைத்துக் கொடுத்த 24 வயது பெண் தையல்காரர் பெட்ஸிராஸ் வீட்டிற்கு அமெரிக்கக் கொடியின் வரைபடத்துடன் சென்றாராம் வாஷிங்டன்.

புதிய நாட்டை உருவாக்க இணைந்த காலனிகளைக் குறித்துக்காட்டும் வகையில் கோடுகளும், 13 நட்சத்திரங்களும் அந்த வரைபடத்தில் இருந்தன. வாஷிங்டன் கொடுத்த வரைபடத்தில் இருந்த நட்சத்திரங்களுக்கு ஆறுமுனைகள் இருந்ததாம். ஐந்து முனைகள் உள்ள நட்சத்திரமே துணியை வெட்டித் தைப்பதற்கு எளிதாக இருக்கும் எனக் கூறி, ஐந்து முனை நட்சத்திரங்களுடன் கொடியின் இறுதி வடிவை முடிவு செய்தாராம் அந்த இளம் தையல்காரர். முதல் அமெரிக்கக் கொடியை டெட்ஸி ராஸ் தைத்த இல்லம் பிலடெல்லியா நகரின் மையப்பகுதியில் உள்ளது. அவருடைய மூக்குக் கண்ணாடி, இருக்கைகள், பைபிள் ஆகியவை அடங்கிய அருங்காட்சியகமாக உள்ள அந்த வீட்டைப் பார்க்க சுற்றுலாப்பயணிகள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகள், பெருமளவில் வருகின்றன.

44876529 – waving flag of usa on flagpole, on blue sky background.
44876529 – waving flag of usa on flagpole, on blue sky background.

பெட்ஸி ராஸ் தைத்த முதல் கொடியின் 27வது பதிப்பே இன்று உலகெங்கும் பறக்கின்ற அமெரிக்கக் கொடி. 1960 முதல் பயன்படுத்தப்படுகின்ற இந்தப் பதிப்பில் நாடு உருவாகியபோது இருந்த 13 காலனிகளைக் குறிக்கும் 13 கோடுகளும் தற்போதுள்ள 50 மாநிலங்களைக் குறிக்கும் 50 நட்சத்திரங்களும் உள்ளன.

அமெரிக்காவின் இனிப்பான நகரம்

இந்தியாவில் பொதுவாக சாக்லேட் என்றால் "Cadbury" நினைவுக்கு வருவது போன்று அமெரிக்காவில் சாக்லேட்டின் மறுபெயர் "Hershey" எனக் கூறலாம். மில்டன் ஹெர்ஷி 1894-இல் தொடங்கிய அந்த நிறுவனம் இன்று உலகின் மிகப் பெரிய சாக்லேட் தொழிற்சாலையாக இருக்கின்றன. அமெரிக்ரகாவின் மிக இனிப்பான நகரமாக ஹெர்ஷி வளர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மாதிரித் தொழிற்சாலை, மிகப் பெரிய கேளிக்கைப் பூங்கா ஆகியவை இருப்பதால் இப்பகுதி சுற்றுலா மையமாக மாறிவிட்டது. இங்குள்ள சாக்லேட் தெருவில் உள்ள விளக்குள் இந்த நிறுவனத்தின் பிரபல இனிப்புகளில் ஒன்றாக "Kisses" வடிவத்தில் உள்ளது.

அமெரிக்க அனாதைகள்

அனாதை இல்லங்கள் அதிகம் இல்லாத அமெரிக்காவின் மிகப் பெரிய அனாதை இல்லங்களில் ஒன்று ஹெர்ஷியில் இருக்கிறது. பிள்ளைகள் இல்லாத மில்டன் ஹெர்ஷி அமெரிக்காவின் அனாதைச் சிறுவர்களுக்காகத் தொடங்கிய பள்ளி மற்றும் விடுதியில் 2,000 சிறுவர்கள் உள்ளனர். பொதுவாக நம் சமுதாயத்தில் அனாதைச் சிறுமிகள் மீதுள்ள பரிதாபத்தாலும், அவர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாலும், அச்சிறுமிகள் பிழைத்துக் கொள்வார்கள்; ஆனால், அனாதைச் சிறுவர்களோ தொல்லையாகவே கருதப்படுகின்றனர். அதனால் அவர்களை என் வாரிசுகளாக எண்ணி, இந்தப் பள்ளியைத் தொடங்குகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுப் பெட்டகம்

இந்தியாவைப் போன்ற மிகத் தொன்மையான வரலாறு அமெரிக்காவிற்குக் கிடையாது. 1776-இல் இங்கிலாந்தின் ஆட்சியிலிருந்து சுதந்திர நாடாகத் தன் பயணத்தை பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப் பெரிய நகரான பிலடெல்பியாவின் சுதந்திர மண்டபத்தில் "Independence Hall" தான் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனமும், அரசியலமைப்பும் எழுதி கையெழுத்திடப்பட்டது. புதிய நாட்டை உருவாக்க விரும்பிய 13 காலனிகளின் பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் மையமாக பென்சில்வேனியா இருந்ததால், இந்த மாநிலம் '"Keystone State" என அழைக்கப்படுகிறது. அந்த மையக் கல்லை வைத்துத்தான் மற்ற 12 காலனிகளுடன்  'அமெரிக்கா' என்ற புதிய நாடு உருவாகியது.

சுதந்திர மண்டபத்தில் இருந்த சுதந்திர மணி (Liberty Bell) உடைந்து ஒலிக்காத நிலையில் இருந்தாலும், இன்றும் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டோரின் சின்னமாக விளங்குகிறது. அதனால் இந்த மணியைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, திபெத்தின் தலாய் லாமா போன்ற பல உலகத் தலைவர்கள் வந்துள்ளனர். அமெரிக்காவின் முதல் மற்றும் மிகப் பெரிய நாணயச் சாலையும் (mint) இந்த சரித்திர வளாகத்தில் உள்ளது. நவீன அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமான பிலடெல்பியா, அடுத்த தலைமுறைகளுக்கு அமெரிக்க நாட்டின் வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com