பேசாப் பொருளைப் பேசும் நாவல்

பேசாப் பொருளைப் பேசும் நாவல்
Published on

நூல் அறிமுகம்

மாலன் 

(வாசிப்போம் நேசிப்போம்  குழு)

ஜோலார்பேட்டை வழியாகப் பலமுறை பயணித்திருக்கிறேன். இறங்கி ஊருக்குள் போனதில்லை. பயணமெல்லாம் ரயிலில்தான். (ஒரே ஒரு முறை தேர்தலை 'வேடிக்கைப் பார்க்க' பர்கூருக்கு கிருஷ்ணகிரி வழியாகச் சென்ற போது ஜோலார்பேட்டை புறநகர் வழி சென்ற ஞாபகம் லேசாக நினைவில் இருக்கிறது) ஆனால் அது எந்தத் திணை, குறிஞ்சியா, முல்லையா, மருதமா என விளங்கிக்கொள்ள இயலவில்லை. டெல்டா மாவட்டங்களைப் போல பசுமை பரந்த சமவெளிகளை அதிகம் காணமுடியாது. சில குன்றுகளைக் காணலாம். ஆனால் தேனிப் பகுதியில் பார்க்கும் தென் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்றவை அல்ல அவை. புதர்கள் மண்டிய நிலப்பரப்பு வனத்தின் வாசல் எனக் கொள்ள இடமளிக்கும். ஆனால் அவை மைசூர் செல்லும் வழியில் நாம் கடக்கும் காடுகளைப் போன்றவை அல்ல. ஆனால் எப்போதும் காற்று வீசிக் கொண்டிருக்கும். பல நேரம் இதமான குளிர்ச்சியில். சில நேரம் அனலாக .

அங்கு எண்பதுகளில் அனல் காற்று வீசியது. அரசியல் கலந்த அனல். 1980களில் அது நக்சலைட்கள் களமாடிய மண். ஆங்கிலப் பத்திரிகைகள் அதை hotbed of Naxals என்று எழுதுவது வழக்கம். வறுமையும், வட்டித் தொழிலும் கூடி வாழ்ந்த பகுதி என்பதால் அழித்தொழிப்பில் நம்பிக்கை கொண்ட அந்த இடதுசாரி இயக்கம் வளர்ந்து செழிக்க அந்தச் சூழல் வாய்ப்பளித்தது. அந்த இயக்கம் வேரோடி இருந்த ஆந்திரம் அருகில் இருந்ததும், ஒளிந்துகொள்ள உதவும் காடுகள், ஓடிச் செல்ல ஏதுவாக இருந்த பெங்களூர் பாதைகள் இவையும் சில காரணங்கள்.

திரு. வால்டர் தேவாரம் அந்தப் பகுதி டி.ஐ.ஜி.யாகப் பொறுப்பேற்ற பின் நக்சலைட்களை 'அழித்தொழிக்கும்' பணியைத் தொடங்கினார். அந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் அஜந்தா' என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். அஜந்தா என்பது நக்சலைட்களால் கொல்லப்பட்ட பழனிசாமி என்ற இன்ஸ்பெக்டரின் ஆறுவயது மகளின் பெயர். 'பழிக்குப் பழி' என்பதுதான் நோக்கம் என்பதற்கு வேறு பொழிப்புரைகள் வேண்டியதில்லை.

பழனிசாமி எப்படிக் கொல்லப்பட்டார் என்பது அன்றையப் பத்திரிகைகள் மென்று உமிழ்ந்த செய்தி. அரைத்து மசித்த தகவல். பெரும்பாலான பத்திரிகைகள் போலீஸ் தந்த தகவல்களை செய்தியாக வெளியிட்டன (அதிலிருந்து முரண்பட்டுக் கேள்விகளை எழுப்பிய ஒரே பத்திரிகை இந்தியா டுடே)

1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி இன்ஸ்பெக்டர் பழனிசாமி, நக்சல் இயக்கத் தலைவரான சிவலிங்கத்தை ஏலகிரி மலையருகில் கைது செய்தார். அவருடன் பெருமாள், சின்னத்தம்பி, ராஜப்பா, செல்வம் என்ற நால்வரும் கைது செய்யப்பட்டு டி.எம்.சி. 4849 என்ற அம்பாசிடர் காரில் திருப்பத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். திருப்பத்தூர் அருகில் சிறுநீர் கழிக்க வேண்டும் என சிலலிங்கம் கேட்டுக் கொண்டதிற்கு இணங்கி கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கிய சிவலிங்கம், தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்துக் கார்மீது வீசினார். காரில் இருந்த இன்ஸ்பெகடர் பழனிசாமி, கான்ஸ்டபிள்கள் யேசுதாஸ், முருகேசன், சிவலிங்கத்தின் தோழர்கள் ராஜப்பா, செல்வம், பெருமாள் அனைவரும் இறந்து போனார்கள். சிவலிங்கமும் சின்னத்தம்பியும் தப்பியோடினார்கள். சில காலம் கழித்து சின்னத் தம்பியை போலீஸ் பிடித்தது. ஆனால் சிவலிங்கத்தைப் பிடிக்க முடியவில்லை. (29 ஆண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டு அவர் பிடிபட்டார். அதுவும் வேறு ஒரு வழக்கில்!)

இந்தச் சம்பவத்திற்குப் பின் ஆபரேஷன் அஜந்தா தொடங்கியது 100 காவலர்கள் 'வேட்டையாடி' 17 நக்ஸலைட்களைக் கொன்றார்கள்.

இது அன்றைய செய்தி. இன்று மறக்கப்பட்ட வரலாறு.

இந்தக் களத்தையும் காலத்தையும் பின்னணியாகக் கொண்டு நாராயணி கண்ணகி எழுதியிருக்கும் நாவல் வாதி. வரலாற்றுப் பாத்திரங்களின் பெயர்கள் நாவலில் மாற்றப்பட்டுள்ளன. சிவலிங்கம் ராமலிங்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. கதை அவரிலிருந்து தொடங்கி அவரில் முடிந்தாலும் நாவல் அவரைப் பற்றியது அல்ல. அதனால் 1980ஆம் ஆண்டு சம்பவம் பகைப்புலமாக (Background) இல்லாமல் புகைப்புலமாக(smoke screen) ஆக அமைந்திருக்கிறது. அதாவது நாவலின் குவி மையம் அந்தச் சம்பவம் அல்ல. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு 80களில் இருந்த ஜோலார்பேட்டை என்ற சிறு நகரத்தின் அடித்தள வாழ்க்கையை சித்தரிக்கிறார். (அப்போது அது சிறு நகரம்தான். 1982ஆம் ஆண்டு வரை முதல் நிலை நகரப் பஞ்சாயத்துதான்) சிறப்பான சித்தரிப்புதான்.

அவர்கள் வாழ்க்கை, இயற்கைச் சூழல், அவர்கள் மொழி, விழுமியங்கள் எல்லாம் மிகையின்றிச் சித்தரிக்கப்பட்டுள்ளது. படைப்பின் மொழியும் கூட பற்பல இடங்களில் மின்னல் கீற்றுப் போல ஒளிர்கிறது. நாவலின் மையப் பாத்திரமான நடராஜண்ணன் சரக்கு ரயிலில் தாவி ஏறிப் பெட்டிகளை உடைத்து தானிய மூட்டைகளைக் கொள்ளையடிக்கும் காட்சி ஒரு திரைப்படத்தைப் போல விரிகிறது. அவர் ஒரு ராபின் ஹுட். அடுத்தவர் பொருளைக் கவர்ந்து ஊர் ஏழை மக்களுக்கு சோறிடுபவர். ஆனால் அவர் கொள்ளைக் காட்சி வீரியத்துடனும் விரிவாகவும் சித்தரித்திருக்கும் அளவிற்கு அவரது கொடை, அதற்கு மக்கள் ஆற்றிய எதிர்வினை விவரிக்கப்படவில்லை. 'அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா' எனப் பின்னர் குறிப்பிடுவதற்காக ஐவர் கூட்டாக ஒரு பாலியல் தொழிலாளியை வன்புணர்வு செய்யும் காட்சி விவரிக்கப்படுகிறது. ஆனால் அந்த அத்தியாயத்தின் பின் பகுதி அவரது நிர்வாணத்தைப் பற்றிய வர்ணனைகளால், கூர்மை இழக்கிறது. அதனால் அவர் காவல்துறையிடம் அடிவாங்கிச் சாகும் காட்சி குரூரமாக இருந்தாலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் நாவலாசிரியர் ஊரார் அழுவதைப் போலவும், அரற்றுவதைப் போலவும் காட்சிகளைச் சேர்த்திருக்கிறார் என்ற போதும் அவை ஈடுகட்டுவனவாக இல்லை.

கதை சொல்லியின் அத்தையாக வரும் தனம் -அல்லது அவரது அழகு- நாவலின் கணிசமான இடத்தை எடுத்துக் கொள்கிறார்/கொள்கிறது. அதுவே அவர் பாலியல் சுரண்டலுக்குள்ளாவார் என்பதை முன்கூட்டியே உணர்த்தி விடுகிறது. நக்சல் இயக்கத்தை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்படும் நாவல்களில் ஒரு நிர்வாணக் காட்சி, அல்லது வன்புணர்வுக் காட்சி இடம் பெற்றுவிடுவது (சென்றாண்டு வெளியான தாளடியிலும் இதுபோன்ற ஒரு காட்சி இருந்தது) வர்க்கப் போராட்டம் என்ற நிலையிலிருந்து "பொம்பளை விவகாரம்" என்ற தளத்திற்கு பிரச்னையைக் கீழிறக்கி விடுகிறது. பாலியில் சுரண்டல் என்பது நிலவுடமைச் சமுதாயத்தின் ஓர் அம்சம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது அதன் ஒரு அம்சம் மட்டுமே. அது நிலவுடமைச் சமுதாயத்திற்கு மாத்திரமே உரியதும் அன்று. ஆண் / பெண் உறவில் உள்ள அதிகாரம், சுரண்டல் இவற்றின் வெளிப்பாடு அது. இது குறித்து விரிவாகப் பேச இங்கு இடமில்லை

முற்றிலும் நக்சலைட்களின் போராட்டம் பற்றிய நாவலுமில்லை; அதன் மறுபக்கமான காவல்துறையின் கண்ணோட்டம் பற்றிய கதையுமில்லை. ஏழை மக்களின் பாடுகள் பற்றிய படைப்பும் இல்லை. இன்னும் செதுக்கியிருக்கலாம். இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.

என்றாலும் பேசாப் பொருளை பேச (தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத ஜோலார்பேட்டை குறித்து) முயன்றமைக்கு வாழ்த்துக்கள்

நூல்: வாதி
ஆசிரியர்: நாராயணி கண்ணகி
வெளியீடு: எழுத்து பிரசுரம் (போன்:8925061999)
விலை: 320/-

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com