எப்போதாவதுதான் இது போலக் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன

எப்போதாவதுதான் இது போலக் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன
Published on

'ஓ மை டாக்' சினிமா விமர்சனம்

லதானந்த்

ந்தப் படத்தை ஒரு குடும்பப் படம் என்று சொல்லலாம். சூர்யா – ஜோதிகா குடும்பம் தயாரித்திருக்கிறது; விஜயகுமார் அவரது மகன் அருண் விஜய் மற்றும் பேரன் அர்னவ் ஆகிய தாத்தா, மகன், பேரன் என்ற குடும்பமே நடித்திருக்கிறது. மேலும் நாம் குடும்பத்தோடு பார்க்கும் படமாகவும் வந்திருக்கிறது. அதனால்தான் சொல்கிறோம், இது ஒரு குடும்பப் படம் என்று!

உச்ச நடிகர்களின் படங்கள், பான் இந்தியா படங்கள் மற்றும் வழக்கமான ஜிகினா டூயட்கள், புவியீர்ப்பு விசைக்கெதிராக மேலெழும்பித் தாக்கும் கிராஃபிக்ஸ் கும்மாங்குத்து சண்டைகள், அபத்த நகைச்சுவை ஆகியன மலிந்த படங்களுக்கு நடுவே எப்போதாவதுதான் இது போலக் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் சரவ் ஷண்முகத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகளை முதலிலேயே தெரிவித்துவிடலாம்.

ஃபெர்னாண்டோ என்ற நாய்ப் பிரியர் ஒருவர்தான் வில்லன். நாய்ப் போட்டிகளில் தாம் வளர்க்கும் நாய்கள் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் அவரது முழு முதற் குறிக்கோள். அப்படிப்பட்டவர் வளர்ப்புப் பிராணிகளிடம் உண்மையான அன்புடன் இருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். அவர் வளர்க்கும் நாய் குட்டிகள் ஈனுகிறது. அதில் ஒன்று பார்க்கும் திறன் இன்றிப் பிறந்துவிடுகிறது. பார்க்கிறார் வில்லன். அதைக் கொன்றுவிடும்படி சொல்கிறார். காரணம் அதை யாரும் வளர்க்க மாட்டார்கள் என்றும், தெரு நாயாகத்தான் வளரும் என்றும், பிற தெரு நாயுடன் சேர்ந்து குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும்  என்றும் அதெல்லாம் தன் கௌரவத்துக் இழுக்கு என்றும் காரணம் சொல்கிறார்.

இரண்டு கோமாளி அடியாட்கள் நாயைக் கொல்லப் புறப்படுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த நாய்க் குட்டி, சிறுவன் அர்னவ் வீட்டில் தஞ்சமடைகிறது. அதற்குக் கண்ணொளி கிடைக்க அறுவை சிகிச்சை செய்து, போட்டிகளில் பரிசையும் வெல்ல வைக்கிறான் அர்னவ்.

எளிமையான திரைக்கதையை அதிகத் திருப்பங்கள் இல்லாமல் – ஆர்பாட்டமில்லாமல் – அழகிய படமாய் வடித்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

பொருளாதார சிக்கலில் வீடு கைநழுவிப் போய்விடுமோ என்ற அச்ச உணர்வையும் அதே சமயம் பேரனின் மேலிருக்கும் பாசப் பிணைப்பையும் விஜயகுமார் அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார். தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரியும் அருண் விஜய் எப்படியாவது லோன் எடுத்து வீட்டை மீட்கப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட நடுத்தரக் குடும்பத்தில் பார்வைக்குறைபாடுள்ள – சிம்பா எனப் பெயரிடப்பட்ட – நாய்க் குட்டியை வளர்க்க சிறுவன் அர்னவ் அல்லாடுகிறான்.

அவன் பள்ளிக்கே பையில் நாய்க் குட்டியை அடைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

நாய்களுக்கான போட்டிகளை தத்ரூபமாகக் காண்பித்திருக்கிறார்கள். அவற்றின் புத்திகூர்மை 'பலே' போட வைக்கிறது.

மொத்தத்தில்: ஓ மை டாக் படம், 'ஓ மை காட்' எனப் பாராட்ட வைக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com